துன்பத்திலும் சான்றாகலாமா? | குழந்தைஇயேசு பாபு


10.7.2020 Reflection

இன்றைய வாசகங்கள் (10.07.2020) - பொதுக்காலத்தின் 14ஆம் வெள்ளி - முதல் வாசகம் ஓசே. 14:1-9 - நற்செய்தி வாசகம் மத். 10:16-23

"நீ துவண்டு போகும் சமயத்தில் யாரும் இல்லை என்று கலங்காதே ..உனக்காக ஏதோ ஒரு உருவில் உன்னுடன் துணையாக இறைவன் வருவார் "என்ற வார்த்தைகள் நாம் இலக்கு நோக்கி பயணிக்கும் பொழுது அதனால் வருகின்ற துன்பங்களையும் தடைகளையும் முறியடிக்க இறைவனின் துணை எந்நாளும் நமக்கு உண்டு என்ற நம்பிக்கை வழங்குவதாக இருக்கின்றது.

இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் ஓசேயா "ஆண்டவரின் நெறிகள் நேர்மையானவை, நேர்மையாளர்கள் அவற்றை பின்பற்றி நடக்கிறார்கள். மீறுகிறவர்கள் அவற்றில் இடறி விழுகிறார்கள் .(ஓசே: 14:9) என்று கூறி நம்மை நேர்மை உள்ளவர்களாக வாழ அழைப்பு விடுக்கிறார். இஸ்ரயேல் மக்கள் வரலாற்றில் யாவே இறைவன் பல அரும்பெரும் செயல்களை செய்து விடுதலையைக் கொடுத்து நேர்மை உள்ளவர்களாக வாழ வழிகாட்டினார். ஆனால் அவர்கள் கடவுளுடைய அன்பையும் இரக்கத்தையும் மறந்து நேர்மையற்றவர்களாக வாழ்ந்தார்கள்.

இருந்தபோதிலும் தாயன்போடு ஓசேயா இறைவாக்கினர் வழியாக நேர்மை உள்ளவர்களாக வாழ அழைப்பு விடுக்கிறார். "தீவினை அனைத்தையும் அகற்றியருளும், நன்மையானதை ஏற்றுக்கொள்ளும் "(ஓசே : 14:2) என்று ஆண்டவர் அழைப்பு விடுக்கிறார். நேர்மைக்கும் உண்மைக்கும் சான்று பகிரும் பொழுது ஆண்டவன் நிச்சயமாக உடன் இருப்பார் என்ற ஆழமான சிந்தனையை இன்றைய முதல் வாசகம் வழங்குவதாக இருக்கிறது.

இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசு திருத்தூதர்கள் சந்திக்க வேண்டிய சங்கடங்களையும் சவால்களையும் மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றார். "இதோ! ஓநாய்கள் இடையேஆடுகளை அனுப்புவதைப் போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப் போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப் போலக்கபடு அற்றவர்களாகவும் இருங்கள் " (மத் :10:16) என இயேசு மிகத்தெளிவாக இறையாட்சி பணி எப்படிப்பட்டது என்பதை எடுத்துக்கூறி அதன் சவால்களை சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்றைய நற்செய்தியில் ஆடு, ஓநாய், பாம்பு மற்றும் புறா போன்ற நான்கு விலங்குகளையும் இயேசு சுட்டிக்காட்டியுள்ளார். இங்கு சீடர்கள் ஆடுகளுக்கும் ஒப்பிடபடுகிறார்கள். இந்த உலகையும் உலகம் சார்ந்த மனிதர்களையும் பொருட்களையும் ஓநாய்களுக்கு ஒப்பிடப்படுகிறது. இறையாட்சி பணியினை செய்கின்ற பொழுது பல்வேறு துன்பங்களுக்கு உள்ளாக வேண்டிய சூழல் நேரிடும். ஆடுகளாக கருதப்படும் சீடர்கள் அல்லது இறைப்பணியாளர்கள் இவ்வுலகம் சார்ந்த சுயநலமிக்க மனிதர்கள் அல்லது பொருட்கள் என்ற ஓநாய்கள் வழியாக பல்வேறு சவால்களை சந்திக்க நேரிடும். இறையாட்சி பணிக்கு எதிராக பல்வேறு தடைகள் இருக்க நேரிடும். இத்தகைய சூழ்நிலையில் நேர்மையான மனநிலையோடு பாம்பைப் போல அறிவாற்றலோடு, ஞானம் நிறைந்தவராக,முன்மதி உடையவராக, எதையும் திறனாய்வு செய்து, திட்டமிட்டு செயல்பட இயேசு அழைப்பு விடுக்கிறார்.

மேலும் இறையாட்சிப்பணியில் புறாக்களைப்போலக் கபடற்ற மனிதர்களாகவும் எளிமையை விரும்பும் பணியாளர்களாகவும் குழந்தை மனம் கொண்டவர்களாகவும் இருந்து இறையாட்சி மதிப்பீட்டிற்கு சான்று பகர இயேசு சீடர்களை அழைக்கின்றார்.
எனவே நம்முடைய அன்றாட வாழ்விலும் இயேசுவை திருமுழுக்கு வழியாக பெற்ற நாம் ஒவ்வொருவரும் இறையாட்சியின் மதிப்பீட்டின்படி வாழவும் அதைப் பிறருக்கு பறைசாற்றவும் அழைக்கப்பட்டுள்ளோம். இத்தகைய இறையாட்சி பணியால் வருகின்ற சவால்களையும் இடையூறுகளையும் துணிச்சலுடன் தூய்மையான கபடற்ற உள்ளத்தோடு எதிர்கொள்வோம். அப்பொழுது நம்மைப் படைத்த கடவுள் அவரின் தூய ஆவியாரின் வழியாக பேசுவார். நாம் பேச வேண்டிய வார்த்தையை அவரே அறிவுறுத்தி பேசுவார். எனவே இன்றைய நாளில் தூய ஆவியாரின் துணையோடு இறையாட்சி பணியினை செய்ய முன்வருவோம். அப்பொழுது ஆண்டவரின் உடனிருப்பு நம்முடைய பணி முழுவதும் இருக்கும். துன்பங்களைக் கண்டு தளராத இறையாட்சிப் பணியாளராக மாற தேவையான அருளை வேண்டுவோம்.

இறைவேண்டல்

தாயும் தந்தையுமான இறைவா! திருமுழுக்கின் வழியாக எங்களை உமது இறையாட்சி பணியினை செய்ய அழைத்த மேலான அருளுக்கு நன்றி செலுத்துகிறோம்.துன்பங்களைக் கண்டு துவண்டு விடாமல் நீர் எங்களோடு இருக்கிறீர் என்ற நம்பிக்கையோடு இறையாட்சி பணியினை செய்ய உமது அருளைத் தாரும். ஆமென்.

அருள்சகோதரர் குழந்தைஇயேசு பாபு
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

9 + 1 =