தீவனத் தொட்டியில் குழந்தை | யேசு கருணா | Daily Reflection | Christmas Homily


Manger

25 டிசம்பர் 2020 கிறிஸ்து பிறப்பு பெருவிழா (நள்ளிரவு) - I. எசாயா 9:2-4, 6-7; II. தீத்து 2:11-14; III. லூக்கா 2:1-14

'ஆதாமை, ஆண்டவராகிய கடவுள் ஏதேன் தோட்டத்தை விட்டு விரட்டினார். கண்ணீரும் கவலையுமாய் சற்றுத் தூரம் கடந்து திரும்பிப் பார்க்கும் ஆதாம், ஏதேன் தோட்டத்தை ஏக்கத்தோடு பார்க்கிறார். ஆதாமை வெளியே அனுப்பியதில் கடவுளுக்கும் சற்றே வருத்தம்.

'நான் கழுதையுடன் தீவனத் தொட்டியில் உணவருந்த வேண்டுமோ?

என் குழந்தையின் வாய், கழுதைகள் உண்ணும் தீவனத் தொட்டியில் பட வேண்டுமோ?' என்று கேட்டுக்கொண்டே ஆதாம் நகர்கின்றார். 

அவரின் பார்வையிலிருந்து தோட்டமும் மறைகின்றது, கடவுளும் மறைகின்றார்.'

ரபிக்களின் மித்ராஷ் இலக்கியம் ஒன்று இப்படிக் குறிப்பிடுகிறது.

'காளை தன் உடைமையாளனை அறிந்துகொள்கிறது. கழுதை தன் தலைவன் தனக்குத் தீனி போடும் இடத்தைத் தெரிந்துகொள்கின்றது. ஆனால், இஸ்ரயேலோ என்னை அறிந்துகொள்ளவில்லை. என் மக்களோ என்னைப் புரிந்துகொள்ளவில்லை' (எசா 1:3) என்று எசாயா இறைவாக்கினர் ஆண்டவராகிய கடவுளின் சோக வார்த்தைகளைப் பதிவுசெய்கின்றார்.

ஒரு பக்கம், கழுதையின் தீவனத் தொட்டியில் உணவருந்த வேண்டிய கட்டாயம் ஆதாமுக்கு.

இன்னொரு பக்கம், தீவனத் தொட்டி இருந்தும் அதன் பக்கம் திரும்பாத இறுமாப்பு இஸ்ரயேலுக்கு.

இந்த இரண்டுக்கும் ஒரு முற்றுப்புள்ளியாக இருக்கின்றது 'தீவனத் தொட்டியில் பொதிந்து வைக்கப்பட்ட குழந்தை.'

இயேசுவின் பிறப்பு நிகழ்வை வேகமாகப் பதிவு செய்யும் லூக்கா, 'தீவனத் தொட்டி' என்று வந்தவுடன், நிறுத்தி நிதானமாக மூன்று முறை அதை எழுதுகின்றார். 

கடவுள் நம் உணவாக மாறுகிறார். இன்று!

இரண்டாவதாக, 'விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை' என்ற வார்த்தையில் மானுடத்தின் மறுப்பு மட்டுமல்லாமல், யோசேப்பின் எளிமையும் புரிகிறது. யோசேப்பு, தன் சொந்த ஊருக்கு வருகின்றார். சொந்த ஊரில் அவருக்கு வீடில்லை. அல்லது அவரைச் சொந்தம் என்று வைத்துக்கொள்ள யாரும் இல்லை. தனக்கென அவர் அங்கே எந்த இல்லத்தையும் வைத்துக்கொள்ளவில்லை. 

மூன்றாவதாக, 'நடக்கின்றவர்கள்' மெசியாவைக் கண்டுகொள்கின்றனர்.

முதல் வாசகத்தில், காரிருளில் நடந்த மக்கள் பேரொளியைக் காண்கின்றனர். பெத்லகேம் நோக்கி நடந்த யோசேப்பு மெசியா பிறப்பதைக் காண்கின்றார். மேலிருந்து கீழ் நடந்து வந்து தூதரணி மெசியாவின் செய்தியை அறிவிக்கின்றது.

ஆக, நடப்பவர்கள் கிறிஸ்துவைக் கண்டுகொள்கின்றனர்.

Add new comment

12 + 0 =