Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
திருக்குடும்பமா நம் குடும்பம்? | குழந்தை இயேசு பாபு | Daily Reflection
இயேசு, மரி, சூசை - திருக்குடும்பம் பெருவிழா
I: தொ.நூ: 15: 1-6; 21: 1-3
II: 105: 1-2. 3-4. 5-6. 8-9
III: எபி: 11: 8,11-12,17-19
IV: லூக்: 2: 22-40
"திருக்குடும்பமா நம் குடும்பம்?"
குடும்பம் என்பது மனிதரை உருவாக்கும் பல்கலைக்கழகம். ஒவ்வொரு மனிதனும் குடும்பத்தில் இருந்துதான் அனைத்தையும் கற்றுக் கொள்கின்றான். ஒரு மனிதனை நல்லவனாகவும் தவறு செய்பவனாகவும் மாற்றுவது குடும்பம். எனவேதான் திருத்தந்தை "குடும்பம் ஒரு குட்டித் திருச்சபை "எனச் சுட்டிக்காட்டுகிறார். குடும்பம் என்ற ஒன்று நற்செய்தி விழுமியங்களை வாழ்ந்தால் மட்டுமே இந்த அகிலத் திருஅவை நற்செய்தி விழுமியத்தின் படி வாழ முடியும்.
எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் நன்றாகப் படிக்கக் கூடியவர். அவர் குரூப் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று அரசு வேலையைப் பெற்றார். இவர்தான் இந்த ஊருக்கே முதல் அரசுப்பணியாளர். அப்பொழுது நான் அவரைப்பார்த்து "எவ்வாறு இத்தகைய இக்கட்டான சூழலிலும் உங்களால் நன்றாக படித்துத் தேர்வில் வெற்றி பெற்று அரசு வேலையைப் பெற முடிந்தது?" என்று கேட்டேன். அதற்கு அவர் "நான் இவ்வளவு தூரம் படித்து அரசு வேலை பெறும் அளவிற்கு உயர்வதற்கு காரணம் என் குடும்பம் தான். அவர்கள் செய்த தியாகம் தான் என்னை உயர்த்தி இருக்கிறது. கடின உழைப்பை கற்றுக் கொடுத்திருக்கிறது " என்று பதிலளித்தார். வெற்றியடைந்த இந்த நண்பரின் குடும்பம் இவருக்கு நல்ல பாதையையும் கடின உழைப்பையும் காண்பித்ததால் இவர் வெற்றி அடைந்தார்.
மற்றொரு அனுபவம் எனக்கு கிடைத்தது. நான் மூன்றாம் ஆண்டு திருச்சி மத்திய சிறைச்சாலையில் இறையியல் படித்துக்கொண்டிருக்கும் போது சிறைப்பணி செய்தேன். ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமை அங்கு சென்று சிறைவாசிகளை சந்தித்து அவர்களை வழிகாட்டுவோம். அவ்வாறு ஒரு வாரம் செல்லும் பொழுது ஒரு இளைஞனைச் சந்தித்தேன். அவரிடம் நான் "இந்த சிறிய வயதிலும் ஏன் இந்த இடத்தில் இருக்கிறீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர் "என் குடும்பத்தில் என்மேல் அன்பு இல்லாததேயாகும். ஏனெனில் என் தந்தையும் தாயும் ஒவ்வொரு நாளும் சண்டை போட்டுவிட்டு ஆளுக்கு ஒரு பக்கம் அமர்ந்திருப்பர். என்னை அவர்கள் பொருட்டாகக் கருதவில்லை. என்னை அன்பு செய்யவில்லை. எனவே நான் விரக்தியில் வீட்டை விட்டு வெளியே சென்றேன். எனக்கு கிடைத்த நண்பர்கள் அனைவருமே என்னை தவறான வழிக்கு அழைத்துச் சென்றனர். தொடக்கத்தில் அது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் காலப்போக்கில் அதுவே என் வாழ்விற்கு எதிராக மாறியது. இங்கு வந்து ஒவ்வொரு நாளும் என் குடும்பத்தினை நினைத்து அழுது கொண்டிருக்கிறேன் " என்று பதிலளித்தார்.
ஒரு மனிதன் நல்லவராக மாறுவதும் தீயவராக மாறுவதும் குடும்ப உறுப்பினர்களின் கையில்தான் இருக்கின்றது. உண்மையான குடும்பம் என்பது வசதிகளையும் செல்வங்களையும் சேர்ப்பதற்கு மாறாக பாசங்களையும் உறவுகளையும் சேர்க்க வேண்டும். பணம் என்பது நிரந்தரமான ஒன்றல்ல; மாறாக, பாசங்களும் பந்தங்களும் உறவுகளும் தான் நமக்கு நிறைவான மகிழ்வைக் கொடுக்க முடியும். இதைப் புரிந்து கொண்டவர்கள் குடும்ப வாழ்வில் மகிழ்வோடும் நிறைவோடும் வாழ முடியும். இதைப் புரிந்து கொள்ளாதவர்கள் எவ்வளவு பணம் பட்டம் பதவி வீடு புகழ் இருந்தாலும் நிறைவான மகிழ்வை அனுபவிக்க முடியாது.
இன்றைய நாளில் நம் தாய்த்திருஅவையோடு இணைந்து திருக்குடும்ப பெருவிழாவை கொண்டாடி மகிழ்கின்றோம். "நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்" என்ற பொன்மொழி குடும்பம் ஒரு அறிவுக் களஞ்சியம் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. ஒரு குழந்தை பிறந்தது முதல் வளர்ந்து பெரியவராகி தனது இறுதி பயணத்தை முடிக்கும்வரை குடும்பம் பல்வேறு வகையில் அனுபவங்களையும் அறிவு நிறைந்த செயல்பாடுகளையும் கற்பிக்கின்றது. நல்ல குடும்பம் நல்ல தலைவர்களையும் தியாகிகளையும் மனிதநேயமுள்ளவர்களையும் உருவாக்கும். இதைத்தான் இன்றைய திருக்குடும்ப விழா நமக்கு சுட்டிக்காட்டுகின்றது. நாசரேத்து என்னும் ஊரிலே வாழ்ந்த ஒரு குடும்பம் உலகம் முழுவதும் பேசப்படுகிறது. இந்த குடும்பம்தான் சூசையப்பர் மற்றும் அன்னை மரியாள் குடும்பம். இவர்களின் மகன் தான் இவ்வுலகை மீட்க வந்த இறைமகன் இயேசு. கடவுள் இந்த உலகத்தை மீட்க வேண்டும் என திருவுளம் கொண்ட பொழுது தன்னுடைய மகனை அனுப்பினார். அவர் நேரடியாக தன் மகனை வானத்திலிருந்து குதிக்க வைக்கவில்லை. மாறாக, தன் மகனை இந்த உலகத்திற்கு அனுப்ப ஒரு குடும்பத்தைத் தேர்வு செய்தார். ஏனென்றால்இறைமகன் இயேசு மனிதராகப் பிறந்ததால் குடும்பம் தான் அவரை இன்னுமாக மீட்பு திட்டத்திற்கு பயன்படுத்தும் என கடவுள் நினைத்தார். அந்த அளவுக்கு குடும்பத்தின் மேன்மையைக் கடவுள் இதன் வழியாக உயர்த்தியுள்ளார்.
"கணவன், மனைவி, பிள்ளைகள் என்ற மூன்று சக்திகளும் அன்பில் சங்கமிக்கும் ஆலயம்தான் குடும்பம்! அந்த சக்தியை உற்பத்தி செய்கிறவர் கடவுள் " சூசை மரி இயேசு குடும்பத்தை கடவுள்தான் ஒரு ஆலயமாக உருவாக்கினார். தனது மகனின் பெற்றோரை ஆயத்தப்படுத்தினார். இந்த உலகத்திற்கே உண்மையான திருக்குடும்பம் எப்படி இருக்க வேண்டும் என வாழ்வியல் பாடத்தை கற்றுக் கொடுத்துள்ளார். ஏனென்றால் கடவுள் குடும்பங்களை என்றும் நேசித்தார். எனவே தான் கடவுள் மனிதரை தொடக்கத்தில் படைக்கும் பொழுது ஆணும் பெண்ணுமாகப் படைத்தார். அதேபோல கடவுள் குடும்பத்தின் வழியாகத்தான் தனது மாட்சியை வெளிப்படுத்தினார்.
இன்றைய முதல் வாசகத்தில் ஆபிரகாம் மற்றும் சாராவை பற்றி வாசிக்கின்றோம். ஆபிரகாம் என்றால் "என் அப்பா உயர்ந்தவர் "என்று பொருளாகும். இவர் நம்பிக்கையின் தந்தை என அழைக்கப்படுகிறார். இவர் இறைவனுடைய வார்த்தையில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்ததால் தள்ளாடும் வயதில் மகப்பேறு தன் மனைவி வழியாக பெற்றார். ஆபிரகாம் வழியாக கடவுள் மனித குலத்திற்கு ஆசீரை வழங்கியுள்ளார். ஆபிரகாமும் சாராவும் எல்லாக் குடும்பங்களுக்கும் முன்னுதாரணமாக இருக்கின்றனர். குறிப்பாக ஆபிரகாம் இறைநம்பிக்கை மிகுந்தவராக இருந்தார். எனவே கடவுள் அவரை உயர்த்தினார். எனவே எல்லா குடும்ப உறுப்பினர்களும் ஆபிரகாமைப் போல இறைநம்பிக்கை மிகுந்தவர்களாக இருக்கும்பொழுது கடவுளுடைய அளப்பெரிய அருளைப் பெற்றுக் கொள்ள முடியும். அதேபோல ஆபிரகாம் தனது மனைவியின் வார்த்தைக்கு மதிப்பு அளித்தார். சாராள் தன்னால் தன் கணவருக்கு ஒரு குழந்தையைப் பெற்றுக் கொடுக்க முடியவில்லை என்ற சூழலில் தனது பணிப்பெண் வழியாக குழந்தையைப் பெற்றுக்கொள்ள ஆபிரகாமிடம் கேட்டபொழுது ஆபிரகாம் தன்னுடைய மனைவியின் வார்த்தைக்கு கீழ்படிந்து ஒப்புக்கொண்டார். அதேபோல ஆபிரகாம் தனது மனைவியை முழுவதுமாக அன்பு செய்தார். அதேபோல சாராவும் தன் கணவர் ஆபிரகாமை முழுவதுமாக அன்பு செய்தார். தன் கணவருக்கு அவப்பெயர் வரக்கூடாது என்பதற்காக பணிப்பெண்ணுக்கு தன் கணவரையே கொடுக்கும் அளவுக்கு தன் கணவர் ஆபிரகாமை அன்பு செய்தார். கணவருக்கு எந்த ஒரு அவப்பெயரும் வரக்கூடாது. அவர் சமூகத்தில் உயர்ந்து நிற்க வேண்டும் என்ற மனநிலை ஒவ்வொரு மனைவியிடத்திலும் இருக்கும் பொழுது நிச்சயமாக அந்தக் குடும்பத்திலேயே நிறைவான மகிழ்ச்சியை காண முடியும்.
சீராக் ஞான ஆசிரியர் நல்ல குடும்ப வாழ்வு அமைய நல்ல பெற்றோர், நல்ல பிள்ளைகள், நல்ல சூழல் தேவை என்பதை வலியுறுத்தி பெற்றோருக்கு பிள்ளைகள் செய்ய வேண்டிய கடமைகளை எடுத்துக்காட்டியுள்ளார். பிள்ளைகளில் சிறந்த உதாரணம் இயேசு பாலன் என்று லூக்கா நற்செய்தி வலியுறுத்தியுள்ளார். பாலன் இயேசு ஒரு இறை மகனாக இருந்தபோதிலும் தனது பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்தார். பெற்றோரும் பாலன் இயேசு பிறந்த சமயத்தில் பல்வேறு இக்கட்டான சூழலைச் சந்தித்தனர். குறிப்பாக சூசையப்பரும் மரியாவும் தங்களுடைய சொந்த ஊரில் பெயரை பதிவு செய்ய புறப்படும் பொழுது மரியாவுக்கு பேறுகாலம் வந்தது. எனவே அவர்கள் இடம் கிடைக்காத காரணத்தினால் மாட்டுத்தொழுவத்தில் குழந்தை இயேசுவை பெற்றெடுத்தனர். மேலும் ஏரோது அரசனால் இக்குழந்தைக்கு துன்பம் வரப்போகின்றது என்பதை அறிந்து குழந்தையை தூக்கிக்கொண்டு எகிப்துக்கு தந்தையும் தாயும் விரைந்து சென்றனர். ஒரு தாய் குழந்தையை பெற்ற உடனே பயணம் செய்வது என்பது சாதாரண காரியமல்ல. ஆனால் அன்னை மரியா தனது குழந்தையின் மீது கொண்ட அன்பின் காரணமாக அந்தத் துன்பத்தை எல்லாம் ஏற்றுக் கொண்டு பயணம் செய்தார். இத்தகைய பெற்றோர் பிள்ளைகள் அன்பு நமது குடும்பத்தில் இருக்கின்ற பொழுது நிறைவான மகிழ்ச்சியை ஒவ்வொரு குடும்பமும் அனுபவிக்க முடியும்.
"தந்தையரை மேன்மைப்படுத்துவோர் நீடுவாழ்வர்" (சீ.ஞா: 3: 3-6).தந்தையருக்கு மதிப்பளித்து அவர் பெயரை காப்பதே மிகச்சிறந்த ஒரு ஆசீர்வாதம். பாலன் இயேசு தன்னை அனுப்பிய இறை தந்தைக்கும் தன்னை வளர்த்த தந்தைக்கும் நற்பெயர் பெற்றுத் தந்தார். அவரைப்
போல ஒவ்வொரு பிள்ளையும் தன்னுடைய பெற்றோர்களுக்கு உண்மையுள்ளவர்களாகவும் கீழ்ப்படிதலுள்ளவர்களாகவும் வாழும் பொழுது நிச்சயமாக நிறைவான மகிழ்ச்சி நம் குடும்பத்தில் இருக்கும்.
ஒவ்வொரு குடும்பத் தலைவரும் சூசையப்பரைப் போல கடவுளின் திருவுளத்தை ஆழ்ந்த அமைதியின் வழியாக தெரிந்து அதன்படி வாழ முயற்சி செய்யும்பொழுது ஒவ்வொரு குடும்பத் தலைவரும் இறைக்கருவியாக மாறமுடியும். அதேபோல சூசையப்பர் தச்சு வேலை செய்யும் உழைப்பாளியாக இருந்தார். இவர் மிகச்சிறந்த ஒரு கடின உழைப்பாளி. தன்னுடைய குடும்பத்தை வழிநடத்த தன்னுடைய நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்தார். இந்த உலகை மீட்க வந்த ஆண்டவர் இயேசு இவரின் உழைப்பில் தான் வளர்ந்தார். மீட்பரின் தாய் அன்னை மரியாள் இவரின் உழைப்பில் தான் மகிழ்ச்சியோடு வாழ்ந்தார். எனவே எல்லாக் குடும்பத் தலைவரும் சூசையப்பரின் மனநிலையை கொண்டு இறைதிருவுளத்தை அறிந்து அதன்படி செயல்படுவர்களாக வாழ்வும் கடினஉழைப்பாளிகளாக வாழவும் முயற்சி செய்ய அழைக்கப்பட்டுள்ளனர்.
அவ்வாறே எல்லாக் குடும்பத் தலைவியரும் அன்னை மரியாவின் மனநிலை கொண்டவராய் வாழ அழைக்கப்பட்டுள்ளனர். அன்னை மரியா தன் கணவர் யோசேப்பு மற்றும் மகன் இயேசுவின் எல்லாத் தேவைகளையும் மகிழ்வுடன் பூர்த்தி செய்பவராக இருந்திருப்பார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. தன் பிள்ளையை காப்பாற்ற கணவருடன் ஒத்துழைத்தார். காணாமல் போன மகனை தன் கணவருடன் சேர்ந்து தேடினார்.கானாவூர் திருமணத்தில் தன் மகனை உதவி செய்யத் தூண்டினார். தன் மகனின் கல்வாரி பயணத்தில் கூட இறுதிவரை நடந்தார். இவ்வாறு தன் குடும்பத்தின் மகிழ்வில் பங்கேற்பவராகவும் துயரத்தில் துணை நிற்பவராகவும், நற்செயல்களைச் செய்யத் தூண்டுபவராகவும் அன்னை வாழ்ந்ததைப் போல நம் குடும்பத்தலைவியரும் வாழ்ந்தால் ஒவ்வொரு குடும்பமும் திருக்குடும்பமே.
எனவே திருக்குடும்பத்தோடு நம் குடும்பங்களை ஒப்பிட்டுப்பார்த்து அக்குடும்பத்தை பிரதிபலிக்கும் குடும்பமாக நம் குடும்பங்கள் மாற முயற்சி செய்வோம்.
அதற்கான அருள் வேண்டுவோம்.
இறைவேண்டல்
மூவொரு இறைவா குடும்பத்தின் மாதிரியே! உம் மீட்புத் திட்டத்திற்காக நீர் தேர்ந்தெடுத்த யோசேப்பு மரியா இயேசு குடும்பத்தைப் போல எங்கள் குடும்பங்களும் அன்பிலும் ஒற்றுமையிலும் ஒத்துழைப்பிலும் அமைதியிலும் வாழ்ந்து முன்மாதிரிக் குடும்பங்களாகத் திகழ வரமருளும் ஆமென்.
Add new comment