Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
தாழ்ச்சியே இறைவனின் மனநிலை! | குழந்தை இயேசு பாபு | Daily Reflection
பாஸ்கா காலம் -நான்காம் வியாழன்; I: திப: 13: 13-25; II: தி.பா: 89: 1-2. 20-21. 24,26 ; III : யோவான் 13: 16-20
அன்னை மரியாவை உலகமெல்லாம் மக்கள் போற்றிப் புகழ்கின்றனர். கடவுள் அன்னை மரியாவை தாழ்நிலையிலிருந்து உயர்த்தினார். கத்தோலிக்கத் திருஅவையில் அதிகமான ஆலயங்கள் இருப்பது அன்னை மரியாவுக்குத் தான். யூதசமூகத்தில் பெண்களை இரண்டாம் தரமான குடிகளாகக் கருதினர். கடவுள் தன்னுடைய மீட்புத் திட்டத்தை ஒரு பெண்ணின் வழியாக வெளிப்படுத்தினார்.அவர் தான் நம் தாய் அன்னை மரியாள். இதற்கு முக்கியக் காரணம் அன்னை மரியாவின் தாழ்ச்சி நிறைந்த மனநிலையே."இதோ ஆண்டவரின் அடிமை "என்று மீட்பின் திட்டத்திற்கு அன்னை மரியாள் தன்னை கையளித்ததால், மீட்பர் இயேசுவின் வழியாக நாம் மீட்பை அனுபவிக்க முடிந்தது.
தாழ்ச்சி உள்ளம் எங்கு இருக்கின்றதோ, அங்கே இறைவன் இருக்கின்றார். இதற்கு மிகச்சிறந்த உதாரணம் இன்றைய நற்செய்தி. இயேசு தம் சீடர்களின் பாதங்களைக் கழுவினார். இறை மகனாகிய இயேசு தன் சீடர்களின் பாதங்களைக் கழுவியது தாழ்ச்சி நிறைந்த மனநிலையைச் சுட்டிக்காட்டுகின்றது.இயேசு வாழ்ந்த காலகட்டத்தில் பாதங்களைக் கழுவுவது அடிமைகளின் வேலையாக கருதப்பட்டது. ஆனால் இயேசு பாதங்களைக் கழுவியதற்குக் காரணம் உண்மையான இறைப்பணியாளர் தாழ்ச்சி நிறைந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதற்காகவே. எனவேதான் சீடர்களின் பாதம் கழுவிய பிறகு
''இயேசு, 'பணியாளர் தலைவரைவிடப் பெரியவர் அல்ல; தூது அனுப்பப்பட்டவரும் அவரை அனுப்பியவரைவிடப்
பெரியவர் அல்ல என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்' என்றார்'' (யோவான் 13:16).
இதற்கு முக்கிய காரணம் சீடர்கள் தங்களிடையே யார் பெரியவர் என்று ஒருவரோடு ஒருவர் வாதாடிக் கொண்டனர். சீடர்களின் மனநிலை இயேசுவின் மனநிலைக்கு எதிராக இருந்தது. உண்மையான இறையாட்சிப் பணியாளர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எதிராக இருந்தது. எனவேதான் இயேசு தாயுள்ளத்தோடு சீடர்களுக்குப் பாடம் கற்பிக்க நினைத்து அவர்களின் பாதங்களைக் கழுவி அவர்களுக்குத் தாழ்ச்சி என்ற படிப்பினையைப் புகட்டினார்.
நம்முடைய அன்றாட கிறிஸ்தவ வாழ்விலும் தாழ்ச்சி உள்ளத்தோடு வாழ அழைக்கப்பட்டுள்ளோம். தாழ்ச்சியுள்ள மனிதர்கள்தான் கிறிஸ்தவர்கள் என்பதற்கு சான்று பகர முடியும். ஏனெனில் நாம் இயேசுவின் பெயரால் திருமுழுக்குப் பெற்று உள்ளோம். இயேசுவைப் போல தாழ்ச்சி உள்ளவர்களாக வாழ அழைக்கப்பட்டுள்ளோம். தாழ்ச்சியோடு வாழ்ந்த எண்ணற்ற கிறிஸ்தவர்கள் புனிதர்களாக திருஅவையில் உயர்த்தப்பட்டுள்ளனர்.எனவே புனித வாழ்வுக்கு சான்று பகிர்ந்திட தாழ்ச்சியான உள்ளத்தோடு வாழத் தேவையான அருளை வேண்டுவோம். தாழ்ச்சியின் வழியாகத்தான் இறைவனின் மனநிலையை பெற்றுக்கொள்ள முடியும். தாழ்ச்சியுள்ளவர்களாக வாழ நாம் தயாரா?
இறைவேண்டல் :
தாழ்ச்சியுள்ள இயேசுவே! உம் பிள்ளைகளாகிய நாங்கள் தாழ்ச்சியான உள்ளத்தோடு வாழ்ந்து உம்முடைய திருவுள்ளத்திற்கு சான்று பகர்ந்திட தேவையான அருளைத் தாரும். ஆமென்.
அருட்பணி.குழந்தை இயேசு பாபு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment