இறைவன் நம் இதயத்தை அறிகிறார்! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பாஸ்கா காலம் - ஆறாம் வெள்ளி; I: திப: 1: 15-17, 20-26; II: தி.பா: 113: 1-2, 3-4, 5-8; III: யோவான்: 15: 9-17

இன்று நம் தாய் திருச்சபை திருத்தூதரான புனித மத்தியாவின் விழாவைக் கொண்டடுகிறது. புனித மத்தியா இயேசுவைக் காட்டிக் கொடுத்து, திருத்தூதுப் பணியைத் துறந்த யூதாஸ் இஸ்காரியோத்துக்குப் பதிலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

இன்றைய முதல் வாசகத்தில் இவருடைய தேர்ந்தெடுப்பு பற்றி மிக அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. திருத்தூதர்களும் நம்பிக்கையாளர்களும் இணைந்து கடவுளிடம் மிக உருக்கமாக இறைவேண்டல் செய்து, இயேசுவின் சீடராகப்பணி புரியத் தகுதியான நபரைக் காண்பிக்குமாறு செபித்தனர். முன்மொழியப்பட்ட இருவருள் மத்தியாவை இறைவன் தேர்ந்தெடுத்தார்.

 அவ்விறைவேண்டலில்  அனைவரும், “ஆண்டவரே, அனைவரின் உள்ளங்களையும் அறிபவரே" என்று வேண்டினர். இவ்வார்த்தைகள் கடவுன் தன் விருப்பத்தை மட்டுமல்ல தாம் அழைத்தவர்களின் விருப்பத்தையும் ஆராய்ந்து அவர்களை அழைத்துப் பணியமர்த்துகிறார் என்ற கருத்தை மிகத் தெளிவாக விளக்குகிறது. 

திருப்பாடல் 139 நம்மை கடவுள் முழுமையாக அறிந்துள்ளார் எனத் தெளிவாகக் கூறுகிறது. நம் வாயில் ஒரு வார்த்தை உருவாகும் முன்பே அதை உணர்பவர் கடவுள். கடவுளுக்கு பணிசெய்ய ஆர்வமும் விருப்பமும் நிறைந்தவராய் மத்தியா விளங்கினார். அவருடைய விருப்பத்தை அறிந்த கடவுள் தம் அழைப்பை அவருக்கு வழங்கி திருத்தூதராய் நியமித்தார் என்பதை நம்மால் தெளிவாக உணர முடிகிறது அல்லவா.

நாம் அனைவருமே திருத்தூதுப் பணிக்காக அழைக்கப்பட்டவர்களே. கடவுளின் நற்செய்தியை அறிவிக்கவும் அவருடைய அன்பை அனைவருக்கும் எடுத்துச்செல்லவும் அழைக்கப்பட்டவர்கள் நாம். அவ்வழைப்பை ஏற்க, அதற்காக உழைக்க நாம் விரும்புகிறோமா? நம் உள்ளத்தின் ஆழத்தை அறிந்தவர் கடவுளே. அவரிடமிருந்து நம்மால் எதையும் மறைக்க இயலாது. எனவே நம் இதயத்தை அறியும் இறைவனிடம் நம்மை அர்ப்பணிப்போம். புனித மத்தியாவின் விருப்பத்தை அறிந்து அவரைத் தமக்காய் பயன்படுத்திய இறைவன் நம்மையும் அவர்க்காய்ப் பயன்படுத்தக் காத்திருக்கிறார்.

இறைவேண்டல்

உள்ளத்தை அறியும் இறைவா! 
உமக்காகப் பணிபுரியும் ஆர்வத்தால் எம் உள்ளங்களை நிரப்பும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

1 + 1 =