சூம்பிய நம் இதயம் குணமாகட்டும்! | குழந்தை இயேசு பாபு | Daily Reflection


பொதுக்காலத்தின் இரண்டாம் புதன் - I. எபிரேயர் 6:7:1-3,15-17; II. திபா: 110:1,2,3,4; III. மாற்கு:3:1-6

நேற்று ஓய்வுநாளன்று கதிர் கொய்த சீடர்களைக் குறை கூறிய பரிசேயர்களுக்கு, சட்டம் மனிதருக்காக, மனிதர் சட்டத்துக்காக அல்ல என இயேசு பதில் மொழி அளித்தார் என்ற வாசகத்தைத் தியானித்தோம். இன்று அதைத்தொடர்ந்து  ஓய்வுநாளன்று கைசூம்பியவருக்கு இயேசு செய்த அருஞ்செயலை நற்செய்தியில் நாம் காண்கிறோம். ஆனால் உண்மையில் கை சூம்பியிருந்தது யாருக்கு? அந்த மனிதருக்கா? இல்லை.

சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு, அந்த மனிதரின் கையை இயேசு குணமாக்கினால், ஓய்வு நாள் சட்டத்தை மீறியதாகக் குறைகூறலாம் என எண்ணிக்கொண்டிருந்த பரிசேயருக்குத் தான். அவர்களின் செயல்களும், எண்ணங்களும் பிறருக்கு நல்லது நடந்து விடக்கூடாது என்பதையே நோக்கியிருந்தது. அவர்களின் இதயம் நன்மை செய்யும் இயேசுவிடம் குறை காண வேண்டும் என்ற எண்ணத்தால் சுருங்கி, சூம்பிப்போய் இருந்தது.

சூம்பிய கையைக் கொண்டு அம்மனிதர் தன் வேலைகளைச் செய்ய எவ்வளவு கடினப்பட்டிருப்பார் என்பதை சிறிதளவு யோசித்திருந்தால் பரிசேயர்கள் மனதில் சிறிதளவாயினும் பரிவு தோன்றியிருக்கும். ஆனால் சட்டத்தை  கடைபிடிப்பவரே நேர்மையாளர் என்ற தவறான எண்ணம் அவர்களின் மனத்தை மழுங்கடித்திருந்ததை இங்கு நாம் கண்கூடாகக் காண்கிறோம். இன்றைய சமூகத்தில் பலரிடம் நாம் காணும் மனநிலை இதுவாகத்தான் இருக்கிறது. நாம் கூட இதற்கு விதிவிலக்கில்லை.

பல வேளைகளில் இயேசுவைப் போல நமக்கு மனித நேயத்தோடு உதவி செய்ய மனமிருந்தும், பிறருடைய எதிர்மறைக் கருத்துக்களையும்,தேவையற்ற சட்டதிட்டங்களையும் எண்ணி நமது மனித நேயத்தையும் சகோதர அன்பையும் சுருக்கிக் கொள்கிறோம். இத்தகைய மனநிலையைக் களைந்து தேவையிலிருப்போர், துன்பப்படுவோரின் நிலையை உணர்ந்து மனித நேயத்தோடு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தால் நம் இதயத்தை நிறைத்து அதை விசாலப்படுத்துவோம். அதற்காக இறைவனிடம் அருள் வேண்டுவோம்.

இறைவேண்டல்

அன்பால் நிறைந்த இறைவா! பிறரின் தேவையில் உதவா வண்ணம் எங்கள் கைகளும் இதயமும் சூம்பிப் போயிருக்கின்றன. அவற்றை தொட்டு குணமாக்கி உமது அன்பினாலும், மனித நேயத்தாலும் நிறைத்தருளும். ஆமென்.

Add new comment

3 + 1 =