குற்றம் காணும் மனநிலையைக் களைவோமா! | குழந்தை இயேசு பாபு | Daily Reflection


இன்றைய வாசகங்கள்

பொதுக்காலத்தின்  ஐந்தாம் செவ்வாய்    
I: தொநூ:   1: 20 - 2: 4
II:  தி.பா: 8: 3-4. 5-6. 7-8 
III: மாற்:  7: 1-13

ஒரு ஊரில் ஒரு நபர் பேக்கரி நடத்தி வந்தார். இவர் ஒருபால்காரரிடம் ஒரு கிலோ வெண்ணை பல ஆண்டுகளாக வாங்கி வந்தார். ஒரு நாள் இவருக்கு அந்தப் பால்காரர் மீது ஒரு நாள் சந்தேகம் ஏற்பட்டது. வெண்ணையை சரியான அளவில் தனக்குக் கொடுக்கிறாரா? என்ற ஐயம் எழுந்தது. எனவே அந்த ஒரு கிலோ வெண்ணையை   தராசில் அளவு செய்தார். அப்பொழுது அந்த வெண்ணை எடை குறைவாக இருந்தது. இதைக் கண்ட அந்த பேக்கரி முதலாளிக்கு மிகுந்த கோபம் ஏற்பட்டது. எனவே அந்த பால்காரர் மீது நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தார். இதன் விளைவாக பால்காரர் நீதிமன்றத்திற்கு வரவழைக்கப்பட்டார். நீதிபதி பால்காரரிடம் "இத்தனை ஆண்டுகளாக வெண்ணையை குறைந்த அளவில்தான் பேக்கரிக்கு கொடுத்தீரா?" என்ற கேள்வியைக் கேட்டார். உடனே பால்காரர் நீதிபதியிடம் "என்னிடம் எடைக்கல் இல்லை" எனக் கூறினார். நீதிபதி வியப்போடு "இவ்வளவு காலம் எதைக்கொண்டு ஒரு கிலோ எடை அளந்தாய்?"   என்ற கேள்வியை கேட்டார். அப்போது பால்காரர் நீதிபதியிடம் "நான் இவரின் பேக்கரிக்கு வெண்ணையை விற்கத் தொடங்கிய நாள் முதல் இவரிடம் தான் ஒவ்வொரு நாளும் ஒரு கிலோ ரொட்டி வாங்குகிறேன். அந்த ஒரு கிலோ ரொட்டி பாக்கெட்டின் அளவைத் தான்   வெண்ணைக்கு அளவாக வைத்திருக்கிறேன். நான் கொடுத்த வெண்ணையில் அளவு குறைகிறது என்றால் இவ்வளவு நாள் குறைந்த ரொட்டி துண்டிற்கு எங்கு சென்று வழக்கு பதிவு செய்வது " எனக் கூறினார்.  இதைக் கேட்ட நீதிபதி வியப்பில் ஆழ்ந்தார்.

இப்படி அன்றாட வாழ்வில் பல நேரங்களில் நம்முடைய குற்றங்களை மறைப்பதற்காக மற்றவரை குற்றவாளியாகச் சுட்டிக்காட்டுகிறோம். இந்த உலகத்தில் யாருமே முழுமையான மனிதர்கள் கிடையாது. எல்லோருக்கும் ஒரு சில குறைபாடுகள் உண்டு. அந்தக் குறைபாடுகளை ஏற்றுக் கொண்டு அவற்றை நிறையாக மாற்றுவதுதான் உண்மையான வாழ்வு. அதேபோல குறையோடு இருக்கக்கூடிய நபர்களைக் குறையோடு பார்க்காமல் அவர்களில் நிறைவானவற்றை பார்க்கின்ற பொழுது நம் வாழ்வில் முழுமையைக் காணமுடியும்.

மனிதகுலம் இன்னும் முழுமை அடையாமல் இருப்பதற்கு காரணம் குறைகாணும் மனநிலை ஆகும். இன்றைய நற்செய்தி வாசகத்தில் பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் இயேசுவின் சீடர்கள் சிலர் கழுவாத கைகளால் உண்பதை கண்டார்கள்.  இதைக்கண்ட பரிசேயரும் மறைநூல் அறிஞர் சிலரும் இயேசுவிடம்  "   உம் சீடர் மூதாதையர் மரபுப்படி நடவாமல் தீட்டான கைகளால் உணவு அருந்துவதேன்? என்று கேட்டனர் (மாற்: 6: 5). இதற்கு மறுமொழியாக நம் ஆண்டவர் இயேசு, " வெளிவேடக்காரர்களாகிய உங்களைப் பற்றி எசாயா பொருத்தமாக இறைவாக்கு உரைத்திருக்கிறார். இம்மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர் ; இவர்கள் உள்ளமோ என்னை விட்டு வெகு தொலைவில் இருக்கிறது. மனிதக் கட்டளைகளைக் கோட்பாடுகளைக்  கற்பிக்கின்றனர்.இவர்கள் என்னை வழிபடுவது வீண் ' என்று அவர் எழுதியுள்ளார் "(மற்: 7: 6-7) என மேற்கோள்காட்டி   அவர்களின் உண்மையற்ற தன்மையையும் குறைகாணும் மனநிலையையும் சுட்டிக்காட்டியுள்ளார்.  

பரிசேயர்கள் இயேசு வாழ்ந்த காலகட்டத்தில் வாழ்ந்த ஒரு குழுவினர். பரிசேயன் என்றால் "பிரித்தெடுக்கப்பட்டவன்" என பொருள். இவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் தங்களை வேறுபடுத்திக் கொண்டவர்கள்.   எருசலேமின் அழிவுக்கு பின் இந்த பரிசேயர்கள் தான் யூத மதத்தை உயிர்ப்பித்தார்கள். இவர்கள் கட்டுப்பாடு மிகுந்தவர்களாக இருந்தனர். ஆபிரகாமைப் போல தாங்கள் மட்டுமே கடவுளை அதிகம் அன்பு செய்பவர்கள் என கருதியவர்கள். பரிசேயர்கள் தான் மறைநூல் அறிஞர்களாகவும் இருந்தனர். இவர்கள்தான் மறைநூலை இயேசு வாழ்ந்த காலகட்டத்தில் விளக்கி கூறுபவர்களாக இருந்தனர்.  தங்களுடைய சுயநலத்திற்கு ஏற்றவாறு மறைநூலினை  மக்களுக்கு விளக்கி சட்டத்தின் பெயராலும் சமயத்தின் பெயராலும் அவர்களைக் குற்றம் கண்டு ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாக்கினர். பரிசேயர்களில் சிலர் இயேசு வாழ்ந்த காலகட்டத்தில் நல்லவர்களாகவும் இருந்தனர்.  ஆனால் பெரும்பாலானோர் சுயநலவாதிகளாகவே இருந்து சாதாரண பாமர மக்களை ஒடுக்கினர்.
இத்தகைய பரிசேயர்களின் குறை காணும் மனநிலையைத் தான் இயேசு வன்மையாக எதிர்த்தார். 

நாம் பிறரிடம் குற்றம் காணும் மனநிலையயை விட்டுவிட்டு, பிறரின் வாழ்வு வளம் பெற நிறைகளைக் கண்டு உற்சாகப்படுத்த இன்றைய நாளில் அழைக்கப்பட்டுள்ளோம். நம்முடைய  புறத்தூய்மை அவசியம் தான். ஆனால் அகத்தூய்மை அதைவிட மிகவும் அவசியம். பரிசேயர்கள் புறத்தை தூய்மை படுத்தினார்கள். எனவேதான் அவர்கள் புறத் தூய்மைக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். ஆனால் அவர்களில் பெரும்பாலானோர்  அகத்தூய்மை அற்றவர்களாக இருந்தனர். இத்தகைய நிலையை கண்டு தான் ஆண்டவர் இயேசு அவர்களை வன்மையாகக் கண்டிக்கிறார்.  வெறும் உதட்டளவில் இறைவனைப் புகழ்ந்து விட்டு, உள்ளத்தளவில் கடவுளை விட்டு வெகுதொலைவில் இருக்கும்பொழுது நாமும் பரிசேயர்களைப் போல இயேசுவால் விமர்சிக்கப்படுவோம். 

இன்றைய நற்செய்தியில்  இரு வகையான மனநிலையை காணமுடிகின்றது. முதலாவதாக ஆண்டவர் இயேசு பரிசேயர்களை  வன்மையாக கண்டிப்பது குற்றம் காண வேண்டும் என்பதற்காக அல்ல ; மாறாக,  அவர்கள் தூய்மையற்ற மனநிலையிலிருந்து தூய்மை உள்ளவர்களாக வாழ வேண்டும் என்பதை அறிவுறுத்தவே. இயேசு தூய்மையள்ளவராக இருந்தார். எனவே அவர் அதிகாரத்தோடு தொழுகைக் கூடங்களில் நற்செய்தியை போதித்து தன்னிடம் குற்றம் கண்ட பரிசேயர்களையும்  மறைநூல் அறிஞர்களையும்   வன்மையாக கண்டித்தார். இது வாழ்வுக்கு வழிகாட்டும் மனநிலை.

இரண்டாவதாக சொல்லும் செயலும் ஒரே பாதையில் செல்லாத பரிசேயர்கள் இயேசுவின் சீடர்கள் மீது குற்றம் சுமத்துவது அவர்களின் குறுகிய மனநிலையைச் சுட்டிக்காட்டுகிறது.இது வீழ்ச்சிக்கு வழிகாட்டும் மனநிலை. கடவுளைத் தவிர இந்த உலகத்தில் யாருக்கும் யாரையும் குற்றம் சுமத்த உரிமை இல்லை. நாம் பிறர்  செய்பவற்றில் நிறைகள் குறைகள் பற்றி விமர்சனம் செய்து வளர்ச்சிக்கு வழிகாட்டலாம். ஆனால் குறைகளை மட்டுமே கூறி மற்றவரின் ஆளுமையையும் திறமையையும் சிதைக்கக் கூடாது. இத்தகைய மனநிலையைத் தான் ஆண்டவர் இயேசு வன்மையாக கண்டித்தார்.

சட்டத்தின் பெயரால் மக்களை ஒடுக்கிய பரிசேயர்கள் இயேசுவின் பார்வையில் விமர்சனப்படுத்தப்பட்டதற்கு காரணம் சட்டத்தைத் தவறாக  புரிந்துகொண்டு அவர்கள் மக்களை ஒடுக்கினார்கள். சட்டம் மனிதனுக்கானது. மனிதன் சட்டத்திற்கானவன் அல்ல என்பதைப் புரிய வைப்பதற்காகவே  இயேசு பரிசேயர்களை விமர்சனப்படுத்தினார். பிறரிடம் குற்றம் காணும் மனநிலையை நம்மிடமிருந்து அகற்றும் பொழுது நம் வாழ்விலே முதிர்ச்சியான மனநிலையைப் பெற முடியும். பழைய ஏற்பாட்டில் முதல் பெற்றோர் ஒருவரை ஒருவர் கடவுளின் முன்னிலையில் குற்றம் சுமத்திக் கொண்டனர். எனவே கடவுளின் அருளை இழந்தனர். எகிப்து நாட்டு அடிமைத்தனத்திலிருந்து செங்கடலின் வழியாக வழிநடத்தப்பட்டு  மீட்கப்பட்ட  இஸ்ரயேல் மக்கள் கடவுளுக்கு எதிராகவும் அவர்களை வழிநடத்திய  மோசேக்கு எதிராகவும் குற்றம் கண்டனர். எனவே செங்கடலைக் கடந்த அந்த தலைமுறையினர் பாலும் தேனும் பொழியக்கூடிய கானான் நாட்டிற்குள் நுழையும் வாய்ப்பை இழந்தனர்.அவர்களின் சந்ததியினர் மட்டுமே அந்நாட்டிற்குள் நுழைய வாய்ப்பு பெற்றனர். புதிய ஏற்பாட்டில் விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணை குற்றம் சுமத்தி அவளை கொல்ல வேண்டும் என்ற நோக்குடன் இயேசுவிடம் கொண்டு வந்தனர். ஆனால்  இயேசு அந்த  ஆண்களின் கேவலமான குற்றம் சுமத்தும்  மனநிலையை அறிந்து "உங்களில் பாவம் செய்யாதவர்கள் முதலில் இப்பெண் மேல் கல்லெறியுங்கள்" என்று கூறினார். உடனே அந்த இடத்தில் இருந்த அனைவரும் கலைந்து சென்றனர். இயேசு அந்தப் பெண்ணின் பாவங்களைக்  காணாமல், அவருக்கு மன்னிப்பு வழங்கி மனம்மாறி புதுவாழ்வு வாழ வழிகாட்டினார். 

எனவே நாம் பிறரிடம் பரிசேயர்களைப் போல குற்றம் காணும் மனநிலையைக் கொண்டிருக்காமல், இயேசுவைப் போல நிறைகளைக் கண்டு புதுவாழ்வுக்கு வழி காட்ட அழைக்கப்பட்டுள்ளோம்.மேலும் சமூக அநீதிகளும் அடக்குமுறைகளும் மனிதத்திற்கு எதிராக நடக்கும் பொழுது அவற்றை விமர்சனம் செய்து, தூய்மையான உள்ளத்தோடு சமூகநீதிக்கு இயேசுவைப் போல சான்று பகரவும் அழைக்கப்பட்டுள்ளோம். பரிசேயர்கள் புறத் தூய்மைக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் அவர்கள் சட்டத்தை மட்டும் தூக்கிப் பிடித்தார்கள். இயேசு அகத்தூய்மைக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் அவர் மனிதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தார். நாம் வாழ்வில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க போகிறோம்? சிந்திப்போம்! இறையருளை வேண்டுவோம்.

இறைவேண்டல் :
வல்லமையுள்ள இறைவா! மனிதர்களாகிய நாங்கள் பலவீனமானவர்கள். நாங்கள் பிறரின் குற்றங்களைப் பெரிதுபடுத்தி அவர்களின் ஆளுமையை சிதைத்த நேரத்திற்காக மன்னிப்பு கேட்கின்றோம். நாங்கள் உம் மகன் இயேசுவைப் போல  நிறைகளை எந்நாளும் பிறரில்  கண்டு அவர்களின் வளர்ச்சிக்கு வழிகாட்ட அருளைத் தாரும். ஆமென்.

Add new comment

1 + 0 =