தத்தளிப்போருக்கு தைரியம் கொடுப்போமா? | குழந்தை இயேசு பாபு | Daily Reflection


பாஸ்கா காலம்-இரண்டாம் சனி
I: திப: 6:1-7
II: தி.பா: 33: 1-2. 4-5. 18-19
III : யோவான் 6: 16-21

  இன்றைய வாசகங்கள்  நம்மை வாழ்வில் தத்தளித்துக் கொண்டிருப்போருக்கு தைரியம் கொடுப்பவர்களாக துணை நிற்பவர்களாக வாழ அழைக்கிறது.

      மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒரு கிராமத்திற்கு நிவாரண உதவிகள் வழங்குவதற்காக ஒரு தனியார் நிறுவனத்திலிருந்து வந்திருந்தார்கள். பலவிதமான அத்தியாவசியப் பொருட்களைத் தாராள மனதோடு வழங்கிக்கொண்டிருந்தார்கள். பாதிக்கப்பட்ட மக்களுள் ஒருசிலர் எல்லாருக்கும் பொருட்கள் கிடைக்கவேண்டும் என்ற எண்ணமின்றி மீண்டும் மீண்டும் பெற்றுக் கொண்டிருந்தனர். வாங்கியவர்கள் வராத பிற வீடுகளுக்குத் தகவல் சொல்லவில்லை. இதைப் பார்த்துக் கொண்டிருந்தத் தன்னார்வத் தொண்டர் ஒருவர் பொருட்கள் கிடைக்காத வீடுகளைத் தேடிச்சென்று அவர்களுக்கு இச்செய்தியைக் கூறி, பெற இயலாத பலருக்குப் பெற்றுக்கொடுத்தார்.

இன்றைய முதல் வாசகத்தில் திருத்தொண்டர்களைத் தேர்வுசெய்து நியமிக்கும் நிகழ்வைக் காண்கிறோம். அத்திருத்தொண்டர்களை அமர்த்தியதன் முக்கிய நோக்கமே அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்பதுதான். குறிப்பாக கண்டுகொள்ளப்படாதக் கிரேக்க கைம்பெண்கள் சமநிலையில் நடத்தப்பட வேண்டும் என்பதற்காகவே திருத்தொண்டர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் இறைவேண்டலில் நிலைத்திருந்தவர்களாயும் தூய ஆவியாரால் நிறைந்தவர்களாகவும் இருந்தனர். அதனாலேயே அவர்கள் சுயநலமில்லாமல் அனைவருக்கும் சமமான சேவை செய்ய முடிந்தது.

நாமும் இத்தகைய திருத்தொண்டு புரிபவர்களாக இருக்க வேண்டும். தேவையில் உழல்வோர்,ஆதரவற்றோர்,உதவி செய்ய யாருமில்லை என தனிமையில் துன்பப்படுபவர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகள் செய்ய வேண்டும். பாகுபாடு பார்க்காமல், அனைவரையும் சமமாக மதித்து நற்செயல்கள் புரிபவர்களாக வாழவே நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.

இன்றைய நற்செய்தியில் கடலில் தள்ளாடிக்
கொண்டிருந்த தன் சீடர்களுக்கு ஆஞ்சாதீர்கள் என இயேசு தைரியம் அளிக்கிறார். நாமும் இயேசுவைப் போல வாழ்வில் பல விதத் துன்பங்களால் வாழ வழியின்றி தத்தளிப்போர்க்கு ஆறுதலாய் ஆதரவாய் இருக்க வேண்டும். திருத்தொண்டர்களைப் போல இயேசுவைப்போல தேவையிலிருப்போருக்கு உதவவும் துன்பத்தில் தைரியமளிக்கவும் தேவையான வரத்தைக் கேட்டு மன்றாடுவோம்.

இறைவேண்டல்

அன்பு இறைவா நாங்கள் தூய ஆவியால் நிரப்பப்பட்டவர்களாய் தேவையிலும் துன்பத்திலும் யாருமில்லை எனத் தத்தளிப்போருக்குத் துணை நிற்க வரம் தாரும். ஆமென்.

Add new comment

4 + 8 =