கடவுளின் தெரிவு | பேராசிரியர் யேசு கருணா


23 ஆகஸ்ட் 2020 பொதுக்காலம் 21ஆம் ஞாயிறு-I. எசாயா 22:19-23 II. உரோமையர் 11:33-36 III. மத்தேயு 16:13-20

'உன் பெயர் பேதுரு. இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். 

பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றிகொள்ளா! 

விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன்.'

பேதுருவைப் பார்த்து இயேசு சொல்லும் மேற்காணும் வார்த்தைகள், பேதுருவின்மேல் அவர் கொண்டிருந்த ஆழமான நம்பிக்கையைக் காட்டுகின்றன. அல்லது, வலுவற்ற பேதுருவை இயேசு தேர்ந்துகொண்டு அவரை வல்லமையாக்கும் செயல் நமக்குப் புலனாகிறது.

கடவுளின் தெரிவு நமக்கு ஆச்சரியமானதாகவே இருக்கிறது.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். எசா 22:19-23), அசீரியப் படை இஸ்ரயேலைச் சுற்றி நின்றபோது, தன் நாட்டு மக்களைப் பற்றிக் கண்டுகொள்ளாமல் இருக்கின்றார் அரசர் செப்னா. அவரிடமிருந்து அரசாட்சியைப் பறிக்கும் ஆண்டவராகிய கடவுள், எளியவனான எலியாக்கிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைக்கின்றார். வலுவற்றை ஒன்றைத் தேர்வு செய்கின்றார் கடவுள்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். உரோ 11:33-36), கடவுளின் அருள்செல்வத்தாலேயே நாம் நிரப்பப்படுகின்றோம் என்று, கடவுளின் அருளின் மேன்மையை அடிக்கோடிடுகின்றார் பவுல்.

இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்குச் சொல்லும் பாடங்கள் எவை?

(அ) வலுவற்ற நம்மைத் தெரிவு செய்வதன் வழியாகக் கடவுள் தன்னையே வலுவற்ற நிலைக்கு உட்படுத்துகின்றார்.

(ஆ) கடவுளை அறிவதும் அறிக்கையிடும் அவர் நம்மைத் தெரிந்துகொள்ளத் துணைபுரிகின்றன. பேதுரு நம்பிக்கை அறிக்கை செய்கின்றார். அந்த அறிக்கை அவருடைய அறிதலின் வெளிப்பாடாக இருக்கிறது.

(இ) 'கடவுளிடம் கொடுத்து வைத்தவர் எவருமிலர்' என்கிறார் பவுல். கடவுள் நமக்குக் கடன்பட்டவர் அல்லர். ஆனால், அவர் நம்மைச் செல்வராக்குகின்றார்.

இறுதியாக,

இன்றைய நற்செய்தி வாசகத்தின் முதல் பகுதியில், 'நான் யாரென மக்கள் சொல்கிறார்கள்?' என இயேசு தன் சீடர்களிடம் கேட்கின்றார்.

சீடர்களும், 'திருமுழுக்கு யோவான்,' 'எலியா,' 'எரேமியா,' 'இறைவாக்கினர்' என விடையளிக்கின்றனர். 

பேதுரு மட்டுமே, 'நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்' என அறிக்கையிடுகின்றார்.

கடவுள் ஒருபோதும் மற்றவர்களைப் போல இருப்பதில்லை.

அல்லது, மற்றவர்களை விட மேலானவர் என்பதை பேதுரு அறிந்திருந்தார்.

அந்த அறிதல் மிக எளிதாக வருவதன்று.

மேலும், இன்றைய உலகில் நாம் பல நேரங்களில் அடுத்தவர்களைப் போல இருக்கவே விரும்பி, நம் நேரத்தையும் ஆற்றலையும் செலவிடுகிறோம். அடுத்தவரைப் போல இருப்பதைவிட, அடுத்தவரை விட மேலாக இருக்கும்போது நாம் தனித்தன்மை பெற்றுவிடுகிறோம்.

இயேசு யார்? என அறிந்துகொள்ள முனையும் நாம், அதே கேள்வியில், நாம் யார் என்பதையும் அறிந்துகொள்கிறோம். 

ஆகையால்தான், பேதுரு விடையளித்தவுடன், பாறையாக மாறுகின்றார். 

அருள்பணியாளர் யேசு கருணா

பேராசிரியர், புனித பவுல் குருமடம், திருச்சி

 

Add new comment

6 + 8 =