கடவுளின் குரலுக்கு செவி கொடுப்போமா! | குழந்தை இயேசு பாபு | Daily Reflection


தவக்காலம் -மூன்றாம்   வியாழன்; I: ஏரே:  7: 23-28; II:  திபா: 95: 1-2. 6-7. 7-9; III: லூக்: 11: 14-23

செவிசாய்த்தல் என்ற பண்பானது மனித வாழ்வில் முக்கியமாதாகக் கருதப்படுகிறது. இந்த உலகத்தில் பல்வேறு பிரச்சினைகள் இருப்பதற்குக் காரணம் செவிசாய்க்காத மனநிலையே ஆகும். பெற்றோருக்கும் பெரியோருக்கும்  கீழ்ப்படிந்து அவர்களின்  நல்ல அறிவுரைக்குச் செவிசாய்க்கும் பொழுது, நம் வாழ்வில் வெற்றியைச் சுவைக்க முடியும். ஆசிரியர்களுக்கு மாணவர்கள் செவிசாய்க்கும் பொழுது, நன்றாகப் படித்து வாழ்வில் சாதனைகள் பல புரிய முடியும். குடும்பத்தில் கணவன் மனைவி ஆகிய இருவரும் ஒருவருக்கு ஒருவர் செவிசாய்க்கும் பொழுது, குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிறைவும் இருக்கும். நம்மை ஆளும் அரசு மக்களுக்கும் மக்கள் ஆளும் அரசுக்கும் நீதியின் பாதையில் செவிசாய்க்கும் பொழுது, அந்த நாட்டில் மகிழ்ச்சியும் நிறைவும் அமைதியும் நிலவும்.

இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவர் எரேமியா இறைவாக்கினர் வழியாக அவருக்குச் செவிமடுத்து  வாழ அழைப்பு விடுத்துள்ளார்.  ஆண்டவர் "என் குரலுக்குச் செவிகொடுங்கள். அப்போது நான் உங்களுக்குக் கடவுளாய் இருப்பேன். நீங்கள் எனக்கு மக்களாய் இருப்பீர்கள். நான் கட்டளையிட்ட நெறிகள் அனைத்தையும் கடைப்பிடியுங்கள். அது உங்களுக்கு நலம் பயக்கும்" என்று எரேமியா  இறைவாக்கினர் வழியாகச் சுட்டிக்காட்டியுள்ளார். நாம் கடவுளின் மக்களாக வாழ வேண்டுமெனில் கடவுளுக்குச் செவிமெடுக்க வேண்டும். நம் இதயத்தையும் மனதையும் திறந்து காண்பிக்க வேண்டும். கடவுளின் குரலுக்குச் செவிமடுக்கும் பொழுது, நம் வாழ்வு மகிழ்ச்சியின் வாழ்வாகவும் தூய்மையின் வாழ்வாகவும் அருளின் வாழ்வாகவும் மாறும். இஸ்ரேல்  மக்கள்    கடவுளின் ஆசியை இழந்ததற்கு காரணம் செவிமடுக்காத மனநிலையே ஆகும். 

இஸ்ரேல் மக்கள் மனம் மாறி கடவுளின் ஆசீரைப் பெற்றுக் கொள்ள இயலாததற்கு அவர்களின் செவிமெடுக்காத குறுகிய மனநிலையே காரணமாய்ச் சுட்டிக்காட்டப்படுகின்றது. இஸ்ரயேல் மக்களுக்குப் பல வாய்ப்புகள் கொடுக்கப்பட்டும் "அவர்களோ செவிசாய்க்கவும் இல்லை; கவனிக்கவும் இல்லை. பிடிவாத குணமுடைய அவர்களின் தீய உள்ளத்தின் திட்டப்படி நடந்தார்கள்; முன்னோக்கிச் செல்வதற்குப் பதில் பின்னோக்கிச் சென்றார்கள்".இதுதான் அவர்களுடைய  வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தது. 

இன்றைய பதிலுரைப் பாடல் பல்லவியானது  " உங்கள் இதயத்தை கடினப்படுத்தாதீர்; ஆண்டவர் குரலை கேட்டிடுவீர்" என்று சுட்டிக்காட்டுகிறது. நம்முடைய இதயத்தைக் கடினப்படுத்தினோமென்றால், நம்மால் ஆண்டவரின் குரலைக் கேட்க முடியாது. இதற்கு மிகச்சிறந்த உதாரணம் இயேசு காலத்தில் வாழ்ந்த மறைநூல் அறிஞர்களும் பரிசேயர்களும் ஆவர்.  இயேசுவின் பணிகளை குறுகிய மனப்பான்மையோடு விமர்சனம் செய்யக்கூடிய ஒரு கூட்டம் தான் இந்த கூட்டம். இன்றைய நற்செய்தியில் இயேசு பேயை ஓட்டி ஒருவருக்கு நலம் அளித்தார். அந்தக் கூட்டத்தில் இருந்த சிலர் "பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டே இவன் பேய்களை ஓட்டுகிறான்'' என்றனர். "வேறு சிலர் அவரைச் சோதிக்கும் நோக்குடன், வானத்திலிருந்து ஏதேனும் ஓர் அடையாளம் காட்டுமாறு அவரிடம் கேட்டனர்". இவை இயேசு காலத்தில் வாழ்ந்த கடின உள்ளத்தினரின் மனநிலையைச் சுட்டிக்காட்டுகின்றது.  

இயேசு தான் மெசியா என்பதை தன்னுடைய போதனைகளின் வழியாகவும் வல்ல செயல்களின் வழியாகவும் வெளிப்படுத்தினார். ஆனால் அவற்றை அறிந்தும் அறியாத கடின உள்ளத்தினராய், இயேசு காலத்தில் வாழ்ந்த மறைநூல் அறிஞர்களும் பரிசேயர்களும்  இருந்தனர். எனவேதான் இயேசு கொண்டுவந்த மீட்பை யூத மக்களை விட, புறவினத்தார் அதிகம் உணர்ந்து கொண்டனர்.

நமது அன்றாட வாழ்வில் நாம் எப்படிப்பட்ட வாழ்வு வாழ்கிறோம் என்பதை இந்தத் தவக்காலத்தில் சிந்திக்க இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு அழைப்பு விடுக்கின்றது. ஒவ்வொரு நாளும் இயேசுவின் போதனைகளையும் வல்ல செயல்களையும் திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களின் வழியாகவும் பக்தி முயற்சிகளின்  வழியாகவும் நாம் நினைவு கூறுகின்றோம். ஆனால் பெரும்பாலும் மெசியாவின் அனுபவத்தை பெற்றுக் கொள்ளத் தவறி விடுகிறோம். அதற்குத் தடையாக இருப்பது நாம் திறந்த உள்ளத்தோடு செவிமெடுக்காமையே ஆகும். எனவே இந்தத் தவக்காலத்தில் நம்முடைய கல்லான இதயத்தைக் கனிவான இதயமாக மாற்றி திறந்த உள்ளத்தோடு கடவுளுக்கு செவிமடுக்க முயற்சி செய்வோம். அப்பொழுது கடவுளின் ஆசியை முழுமையாகப் பெற்றுக் கொள்ள முடியும்.

இறைவேண்டல் 

வாழ்வுக்கு வழிகாட்டும் எம் இறைவா! நாங்கள் எங்களுடைய கல்லான இதயத்தைக் கனிவான இதயமாக மாற்றி, திறந்த உள்ளத்தோடு உம்முடைய குரலுக்குச் செவிமடுக்க அருளைத் தாரும். ஆமென்.

Add new comment

4 + 12 =