Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
உன்னை அறிவாயா? | திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு
இன்றைய வாசகங்கள் (23.08.2020)பொதுக்காலத்தின் 21 ஆம் ஞாயிறு- I: எசாய: 22:19-23; II: தி.பா: 138:1,2-3,6,8; III: உரோ: 11:33-36; IV: மத்தேயு:16:13-20
உன்னை அறிவாயா?
நீண்டகால இடைவெளிக்குப்பிறகு, இரு கல்லூரித்தோழிகள் சந்திக்கிறார்கள். மகிழ்வுடன் அன்பைப் பரிமாறிக்கொண்டார்கள். தங்கள் வாழ்க்கை அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்கள். தனக்கு திருமணமாகப் போவதாகவும், தன் படிப்பிற்கேற்ற நல்ல வேலையில் பணிபுரிவதாகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் ஒருவர் பகிர்ந்து கொண்டார். இவற்றையெல்லாம் கேட்ட மற்றொரு தோழி தன் வாழ்வே தடம்புரண்டதாக வேதனையுடன் பகிர்ந்து கொண்டார். புகுந்த வீட்டில் தன்னை எப்பொழுதும் ஒன்றுக்கும் உதவாதவள் என்றே கூறுதாக சொன்ன அவர், சிறந்த ஐ. ஏ.எஸ் அதிகாரி ஆக வேண்டும் என்ற தன் கனவு பொய்யாய் போனது எனக் கூறி மிகவும் வேதனைப்பட்டார்.
இதைக்கேட்ட மற்றொரு தோழி "படிக்கின்ற காலத்தில் படு சுட்டியாய், அனைத்திலும் முதலானவளாய் துணிச்சலாய் இருந்த நீயா இப்படி பேசுகிறாய். மற்றவர்களின் விமர்சனத்தில் உன்னையே நீ தொலைத்து விட்டாய். உன்னையே நீ தேடு. மீண்டும்
உன் கனவுக்காக
உழை " என்று உற்சாகமூட்டினாள்.
தன்னிலை உணர்ந்தவளாய் தன்னைத்தேடிய பயணத்தை தொடங்கினாள் அந்தப்பெண்.
இன்றைய வழிபாடு "நான் யார் " என்றுணர நம் ஒவ்வொருவரையும் அழைக்கின்றது. "உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம். உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்" என்ற பாடல் வரிகள் நாம் அனைவரும் அறிந்ததே. தன்னையே அறிந்தவர் பிறருடைய தேவையற்ற விமர்சனங்களை கண்டு கொள்ள மாட்டார். அவற்றில் மூழ்கி தன் பொன்னான நேரங்களையும், தன் சுய மதிப்பையும் ஒருபோதும் இழக்க மாட்டார். அவரே சிறந்த தலைமைப் பண்பு கொண்டிருப்பார்.
ஞானத்தோடு பிறரையும் வழிநடத்துவார்.
எல்லாவற்றிற்கும் மேலாக தன்னைப்பற்றி நன்கு அறிந்தவரே தனக்குள் இருக்கும் இறைவனையும் உணந்தவராய் இருப்பார்.
இன்றைய நற்செய்தியில்
"தன்னை மக்கள் யாரென்று கூறுகிறார்கள்?" என இயேசு சிடர்களிடம் வினவுகிறார். இதனால் இயேசுவுக்குத் தன்னைப்பற்றி தெரியவில்லை என்று அர்த்தமல்ல. இயேசு தன்னை முழுமையாய் அறிந்திருந்தார். மேலும் தன்னைப்பற்றி மக்கள் என்ன பேசுகிறார்கள் என்பதும் அவருக்குத் தெரியும். அவரைத் பெருந்தீனீக்காரன் என்றார்கள். தச்சன் மகனுக்கா இத்துணை ஞானம் என விமர்சித்தார்கள். அதே மக்கள் அவருடைய வல்ல செயல்களைப் பார்த்த பின் இறைமகன் என்றார்கள். ஆனால் தன்னிலையை முழுவதும் அறிந்த இயேசு எதையும் கண்டுகொள்ளாமல் தன் இலக்கை நோக்கி நடக்கிறார் என்பதை அவருடைய வரலாறு தெளிவாகக் கூறுவதை நாம் காண்கிறோம்.
இருப்பினும் தன்னுடன் இன்பத்திலும் துன்பத்திலும் உடனிருக்கும் தன் சீடர்களின் புரிதல் என்ன என்று தெரிந்துகொள்ள இயேசு மீண்டுமாக ஒரு கேள்வி கேட்கிறார். "நீங்கள் என்னை யாரென்று சொல்கிறீர்கள்?" தலைவனை சரியாக அறியாத எந்த சீடனும் தன் தலைவனின் பணியை தொடர்வது இயலாத காரியம் என்பதை நன்கு உணர்ந்ததாலேயே இயேசு சீடர்களிடம் அவ்வாறு கேட்டார்.
மேலும் இன்றைய நற்செய்தியில் பேதுரு "நீரே மெசியா" என்று கூறி தன் தலைவனை பற்றிய தன் அறிவை வெளிப்படுத்துவதையும் அதனால் இயேசு அவரை திருஅவைத் தலைவராக நியமித்தார் என்பதையும் வாசிக்கிறோம். ஆனால் பேதுரு தன்னை அறிந்திருந்தாரா?இல்லை. அச்சமயத்தில் பேதுரு தன்னை அறியாதவராய் இருந்தார். எனவே தான் "நீயும் இயேசுவின் சீடர்களில் ஒருவன் தானே " என்று வினவியவர்களிடம் தான் இயேசுவின் சீடன் என்ற தன் அடையாளத்தையே மறுதலித்தார். ஆனால் அதே நிலையில் அவர் நிலைத்திருக்கவில்லை. "நீ என்னை அன்பு செய்கிறாயா" என்ற உயிர்த்த இயேசுவின் கேள்வியில், தன்னை திரு அவையின் பாறையாக மீண்டும் கண்டைந்தார்.
திருஅவையின் தலைசிறந்த தலைவரானார்.
இன்றைய முதல்வாசகம், சிறந்த தலைமைப்பண்பு உடையவர் தம் அதிகாரத்திற்குட்பட்ட மக்களுக்கு ஒரு தந்தையாக இருந்து வழிநடத்துகிறார் என்பதையும் அவருடைய திட்டங்களை எதிர்க்க யாரும் துணிய மாட்டார்கள் என்பதையும் அழுத்திக்கூறுகிறது. அருட்செல்வமும்,அறிவும், ஞானமும் ஆண்டவரிடமிருந்து மட்டுமே வருகின்றன. அவருக்கு நிகர் அவரே என்ற கருத்தை இரண்டாம் வாசகம் கூறுகின்றது.
மொத்தத்தில் தன்னையே முழுமையாக அறிந்தவர்களாய், கடவுள் தந்த தலைமைப் பண்புகளை அவர் அளித்த அறிவோடும் ஞானத்தோடும் பயன்படுத்தி இறையரசின் திறவுகோல்களாக வாழ கடவுள் நம்மை அழைக்கின்றார். அவர் குரலுக்கு செவிகொடுப்போம்.
இறைவேண்டல்
நிகரில்லா ஞானமே இறைவா!
பல சமயங்களில் பிறருடைய விமர்சனங்களில் மூழ்கி நாங்கள் யாரென்பதையே மறந்து விடுகிறோம்.அறிவும் ஞானமும் உம்மிடமிருந்துதான் எங்களால் பெறமுடியும் என்பதை அறிவோம். நீர் அளித்த ஞானத்தைப் பயன்படுத்தி எம்மை உணரவும்,எமக்குள் வசிக்கும் உம்மை அறியவும் அருள்தாரும். மேலும் எங்கள் தலைமைப்பண்புகளைநேரிய வழியில் பயன்படுத்தி பிறரை விண்ணரசிற்கு அழைத்துவரும் திறவுகோல்களாக நாங்கள் வாழும் அருள் தாரும். ஆமென்.
திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு, சிலாமேகநாடு பங்கு, சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment