உண்மையான அதிகாரம் எது? | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பொதுக்காலம் எட்டாம் சனி; I: சீஞா: 51: 12-20b; II: தி.பா: 19: 7. 8. 9. 10 ; III : மாற்கு : 11: 27-33

கோடை விடுமுறை முடிந்து புதிய வகுப்புகளுக்குச் சென்றனர் மாணவர்கள். அன்று அந்த வகுப்பிற்கு புதிதாக வகுப்புத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.வகுப்புத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அம்மாணவர் நாட்கள் செல்லச் செல்ல தனக்கு மற்ற மாணவர்கள் மீது அதிக உரிமை இருப்பதாக எண்ணி அவர்களை வேலை வாங்கத் தொடங்கினான். சில சமயங்களில் அவர்களை அடிக்கவும் செய்தான். அதைக் கண்டறிந்த ஆசிரியர் வகுப்புத் தலைவன் என்றால் ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையே இணைப்புப் பாலமாக இருந்து செயல்படுபவர். மற்ற மாணவர்களுக்கு முன் மாதிரியாக இருந்து வகுப்பின் ஒழுக்கத்தை மேம்படுத்த ஆசிரியருக்கு ஒத்துழைப்பதே அவரின் கடமை. அவருக்கு பிற மாணவர்கள் மீது எந்த அதிகாரமும் உரிமையும்  இல்லை என கூறி கண்டித்து வகுப்புத் தலைவராக வேறொரு மாணவரைத் தேர்ந்தெடுத்தார்.

அதிகாரம் என்பது என்ன? அதிகாரம் என்பது பொறுப்பு. அதிகாரம் என்பது அன்றாட வாழ்வை சீர்படுத்தும் தத்துவம். அதிகாரம் என்பது பணிவான பணி. அதிகாரம் என்பது சேவை. தேவையான இடங்களில் அதிகாரம் என்பது கண்டித்துத் திருத்துதல். இத்தகைய அதிகாரத்தைக் காண்பது அரிது. இயேசு, இத்தைகைய அதிகாரத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு.

 ஆனால் இன்றைய சமுதாயத்தில் நாம் காண்கின்ற அதிகாரம் எல்லாம் அடக்குமுறையாகத்தான் இருக்கிறது. தனக்குக் கீழ் தான் அனைவரும், அனைவரும் தனக்குப் பணி செய்ய வேண்டும் என்ற மனநிலையே இன்று நாம் காணும் அதிகாரம்.இத்தகைய மனநிலையிலுள்ளவர்களை காண்பது எளிது. இயேசுவை குறைக்காணும் யூதர்கள் இதற்கு சிறந்த உதாரணம்.

எது உண்மையான அதிகாரம் என புரிந்து கொள்ள இயலாத யூதர்கள் இயேசு கோவிலைச் சுத்தம் செய்த போது எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறீர் என வினவுகின்றனர். தவறான அதிகாரத்தைக் கொண்ட அவர்கள் போட்ட சட்டங்களை இயேசு அத்துமீறுகிறார் என்பதே அவர்களின் எண்ணம்.

நம் ஒவ்வொருவருக்கும் அதிகாரம் உண்டு. தனி மனித அதிகாரத்தை நல்லவற்றிற்காகப் பயன்படுத்தும் உரிமையும் நமக்கு உண்டு. ஆனால் உண்மையான அதிகாரத்தை இன்னும் உணராமல் அடக்குமுறையைக் கையாளும் பொய்யான அதிகாரத்திற்கு நாம் அடிமைகளாக வாழ்ந்து கொண்டிருப்பது வேதனைக்குரியது. எனவே உண்மையான அதிகாரம் எது?  எதற்கு நாம் கட்டுப்பட வேண்டும்? எவற்றை எதிர்க்க வேண்டும்? நமக்குக் கொடுக்கப்பட்ட அதிகாரத்தை எவ்வாறு நல்லவற்றிற்காகப் பயன்படுத்தப்போகிறோம் என சிந்தித்து செயல்படுவோம். இறையருள் வேண்டுவோம்.

இறை வேண்டல்

அன்பான அதிகாரத்தால் எம்மை ஆளும் இறைவா உண்மையான அதிகாரம் எது எனத் தேர்ந்து தெளியும் ஆற்றலை எங்களுக்குத் தாரும்.  ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

2 + 4 =