Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
இயேசுவின் பெயரில் மகிழ்ச்சியா! | குழந்தைஇயேசு பாபு
பொதுக்காலத்தின் 26 ஆம் சனி - I. யோபு: 42:1-3,5-6,12-17; II. திபா: 119:66,71,91,125,130; III. லூக்: 10:17-24
மகிழ்ச்சி என்பது மனித வாழ்வின் அங்கமாக இருக்கின்றது. உலகில் பிறந்த ஒவ்வொருவரும் மகிழ்ச்சியைத் தேடி ஓடிக் கொண்டு இருக்கின்றார்கள். பணம்தான் மகிழ்ச்சியைக் கொடுக்கும் எனில் பணம், செல்வம், ஆசை, அரச பதவி என எல்லாவற்றையும் துறந்து புத்தர் மகிழ்ச்சியைத் தேடிச் சென்றதற்குக் காரணம் என்ன? நமது அன்றாட வாழ்வில் வேலை கிடைக்கும் பொழுது, புது வீடு, கார், ஆடை, ஆபரணங்கள், அத்தியாவசியப் பொருட்களை வாங்கும்பொழுதும் மகிழ்ச்சியை அனுபவிக்கிறோம். ஆனால் அந்த மகிழ்ச்சி குறுகிய காலமே ஆகும். ஏனெனில் அந்த மகிழ்ச்சி இவ்வுலகம் சார்ந்தது.
நம்முடை மனித வாழ்வு சுற்றுலா பயணியைப் போன்றது. சுற்றுலா பயணம் முடிந்த பிறகு மீண்டும் நம்முடைய நிரந்தரமான இடத்திற்குச் செல்வோம். இவ்வுலகில் நாம் பெறுகின்ற பணம், பட்டம், பதவி போன்ற அனைத்தும் நிலையற்றதாகும். இவ்வுலகம் சார்ந்த நற்பெயரை மனதில் நினைத்து பெருமிதம் கொள்ளாமல், விண்ணுலகில் நம்முடைய பெயர் குறிக்கப்பட்டுள்ளது என்பதில் மகிழ்ச்சி அடைந்து நம்முடைய பணியினைச் செய்ய அழைக்கப்பட்டுள்ளோம்.
நாம் வாழும் இந்த குறுகிய காலகட்டத்தில் இறைவனுக்குப் பயந்து மனிதநேய மனப்பான்மையோடு நம்முடைய பணிகளைச் செவ்வனே செய்ய முன்வருவோம். புனித வனத்து அந்தோனியார் ஒரு செல்வக் குடும்பத்தில் பிறந்தவர். ஆனால் இவ்வுலகம் சார்ந்த சொத்துக்கள் அனைத்தும் நிலையற்றது என உணர்ந்த பிறகு, அனைத்தையும் விற்று ஏழைகளுக்கு கொடுத்துவிட்டு, துறவற வாழ்வைத் தொடங்கினார். அவருடைய புனித வாழ்வு நம் ஒவ்வொருவருக்கும் முன்மாதிரியாக இருக்கின்றது. தன் வாழ்வின் வழியாக நற்செய்தி மதிப்பீட்டிற்குச் சான்று பகர்ந்தார். எனவே கடவுள் இவரது பெயரைப் புனிதர் பட்டியலில் இணைத்துக்கொண்டார். இப்படிப்பட்ட மனநிலையோடு வாழ்வதுதான் உண்மையான சீடத்துவ வாழ்வு என்பதை இன்றைய நற்செய்தியில் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்றைய நற்செய்தியில் சீடர்கள் இயேசுவிடம் தாங்கள் செய்த பணியின் அனுபவத்தை மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்கின்றனர். இயேசு தம் சீடர்களை பணிக்கு அனுப்பும் பொழுது விருப்பமற்ற மனநிலையோடு சென்றாலும், தாங்கள் பெற்ற அனுபவத்தை மகிழ்வோடு பகிர்ந்து கொள்கின்றனர். இயேசுவின் பெயருக்கு வல்லமையும் ஆற்றலும் உண்டு என்ற உண்மையை அறிந்த பின்பு இயேசுவின் பெயரால் பல வல்ல செயல்களைச் செய்தனர். அதன் வழியாக பெருமகிழ்ச்சி அடைந்தனர். பணியினைச் செய்து திரும்பி வந்த சீடர்கள், "ஆண்டவரே உமது பெயரைச் சொன்னால் பேய்கள் கூட எங்களுக்கு அடிபணிகின்றன" என்று தங்களுடைய அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டனர். இயேசுவின் பெயர் நமக்கு துன்பம், துயரம், சோர்வு, மனஉளைச்சல் போன்ற பல நேரங்களில் நமக்கு ஆற்றலும்,ஆறுதலும் தருவதாக இருக்கின்றது என்பதை ஒருபோதும் மறுக்க முடியாது.
நம் அன்றாட வாழ்வில் பொதுநலச் செயல்பாடுகளைச் செய்யும்பொழுது நம்முடைய பெயரை முன்னிறுத்தாமல் இயேசுவின் பெயரால் செய்யும் பொழுது மிகப்பெரியப் பணிகளைச் செய்ய முடியும். தொடக்ககால திருஅவையில் திருத்தூதர்கள் தங்களுடைய பெயரை முன்னிறுத்தாமல் இயேசுவின் பெயரால் நற்செய்தியை அறிவித்து பற்பல நற்செயல்களையும், வல்லமைமிக்க செயல்களையும் செய்தனர். இத்தகைய மனநிலையோடு வாழத்தான் ஆண்டவர் இயேசு கிறிஸ்து நம்மை அழைக்கின்றார்.
நான் சிறுவனாக இருக்கும் பொழுது என்னுடைய வீட்டிற்கு செல்லும் வழியிலே இருட்டு பாதையைக் கடக்க நேர்ந்தது. அப்பொழுது ஒருவிதமான பயம் என்னுள்ளே இருந்தது. அந்த நேரத்தில் ஆண்டவர் இயேசுவின் பெயரை உச்சரிக்கத் தொடங்கினேன். உடனே எனக்குள்ளே ஒரு விதமான தைரியம் வந்தது. அப்பொழுதான் புரிந்து கொண்டேன் இயேசுவின் பெயருக்கு எவ்வளவு ஆற்றல் உள்ளது என்று. நம்மோடு வாழக்கூடிய எண்ணற்ற நபர்கள் தங்களுடைய வாழ்விலேயே துன்பங்களையும், இடையூறுகளையும் ஒவ்வொரு நாளும் அனுபவித்து வருகின்றனர். அவர்களுக்கு இயேசுவின் பெயரைக் கொடையாக கொடுத்து வாழ்விலே புது மாற்றத்தைக் காண, நாமும் ஒரு இறைக்கருவியாக செயல்படுவோம். நமது அன்றாட வாழ்வில் இயேசுவின் வல்லமை மிகுந்த பெயரை உணர்ந்து, அப்பெயர் நம் வாழ்வில் அற்புதங்களையும், அதிசயங்களையும் செய்து தீமைகளைப் போக்கும் என்ற திடமான நம்பிக்கையைப் பெற்று வாழ்வில் வளம் பெறுவோம். அப்பொழுது இயேசுவின் பெயரில் நிறைவான மகிழ்ச்சியை உணர முடியும். அந்நிறைவான மகிழ்ச்சியை உணர, தேவையான அருளை இறைவேண்டல் செய்வோம்.
இறைவேண்டல்
வல்லமையுள்ள இறைவா! நாங்கள் எங்களுடைய வாழ்விலே நற்செய்திப் பணியின் வழியாக உமது பெயருக்குச் சான்று பகரக் கூடிய இறைக்கருவிகளாக எங்ளை உருமாற்றும் . உருமாறிய உம் கருவிகளாக நற்செய்தியைப் பறைசாற்றவும், அதன்வழி வாழவும் தேவையான அருளையும், ஆற்றலைத் தாரும். ஆமென்.
திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு, சிலாமேகநாடு பங்கு, சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment