இறைவார்த்தை நம்மால் உடைக்கப்படுகிறதா? திணிக்கப்படுகிறதா? | பொதுக்காலம் 15 ஆம் ஞாயிறு | ரோஜர்


15 sunday of ordinary time

பொதுக்காலம் 15 ஆம் ஞாயிறு - 12.07.2020 - எசாயா 55:10-1; உரோமையர் 8:18-23; மத்தேயு 13:1-23.

கொரோனா நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டிருக்கிற காலக்கட்டத்தில், பாமர மக்களின் ஏழ்மையும், அதனையொட்டி நடைபெறும் வேதனையான நிகழ்வுகளும், நெஞ்சை கசக்கிப்பிழியும் சாத்தான்குளம் போன்ற சம்பவங்களும், மனித நேயம் கொண்டோரின் மனச்சான்றை உலுக்குவதாகவே இருக்கிறது. இந்த களேபரங்களுக்கு இடையில், பல்வேறு மதத்தவரும் நம்பிக்கையோடு வந்து போகிற திருத்தலமாக விளங்கக்கூடிய, ‘வேளாங்கண்ணியை’ சிலை வழிபாடு மற்றும் விபச்சாரம் நடக்கிற இடமாக தொடர்புப்படுத்தி, கிறிஸ்தவ போதகர்  ஒருவர் பேசிய பதிவு ஒன்றும், அதற்கு அருட்தந்தையர்களிடமிருந்து,  கடுமையான எதிர்ப்பும், அதனையொட்டிய விளக்கங்களும் சமூக வலைத்தளங்களில் வலம் வந்த நிகழ்வுகளையும் கவனித்திருப்போம். ‘இயேசுவையே தங்கள் மீட்பராக’ ஏற்றுக்கொண்டிருக்கிற, இந்த இரண்டு தரப்பினருக்கும் இடையே, ஏன் இந்த தேவையில்லாத வார்த்தைப்போர்? என்பது, பலருடைய கேள்வியாக எழுந்திருக்கலாம்.

 “கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; இருபக்கமும் வெட்டக்கூடிய எந்த வாளினும் கூர்மையானது. ஆன்மாவையும் ஆவியையும் பிரிக்கும் அளவுக்குக் குத்தி ஊடுருவுகிறது” (எபிரேயர் 4:12) என்று, எபிரேயருக்கு எழுதிய திருமுக ஆசிரியர் கூறுகிறார். கடவுளுடைய வார்த்தை உயிருள்ளதாக இருக்கிறபோது, ‘கடவுளுடைய வார்த்தையாக’ போதிக்கப்படுவது, விமர்சனங்களை உண்டாக்க முடியுமா? கடவுளுடைய வார்த்தையைத் ‘தவறாக’, அவரவர் விருப்பப்படி போதிக்க முடியும் என்றால், ‘சரியான போதனையைக்’ கண்டுபிடிப்பதற்கான, அளவுகோல் எது? ‘இரண்டு போ் சொல்வதிலும் உண்மை இருக்கிறது’, என்று ‘நடுநிலையாளர்களாகத்’ தங்களைக் காட்டிக்கொள்கிறவர்கள் நினைத்தாலும், எப்படி எதிர் எதிர் துருவமாக இருக்கிற விளக்கங்கள், கடவுளுடைய வார்த்தைகளாக இருக்கமுடியும்? என்கிற கேள்வியும் எழாமல் இல்லை. விவிலியத்தில் சிலை வழிபாடு என்று சொல்லப்படுவது, ஒருவருக்கு ‘விக்கிரமாகவும்’ மற்றொருவருக்கு ‘சுரூபங்களாக, நம்பிக்கையின் அடையாளமாகவும்’ இவர்கள் இருவருமே நம்புகிற ‘தூய ஆவியானவரால்’ தூண்டப்படுவதாக இருக்க முடியுமா? இன்றைய நற்செய்தியில், நம் ஆண்டவர் இயேசு போதிக்கிற ‘விதைக்கிறவர் உவமை’ கொண்டு, இவற்றை அறிந்துகொள்ள முனைவோம்.

முதலில், ‘ உவமை’ என்று தமிழில் பயன்படுத்துகிற, ‘parabolé’ (parabolh) என்பதன் மூல வார்த்தை, கிரேக்க மொழி. அதன் பொருள்: செல்கிற வழியில், ஆங்காங்கு தூவுவது, ஒப்பிடுவது (para-alongside and bolé – throwing) Literally meaning ‘throwing things alongside each other for the purpose of comparison). ஓர் உவமையைப் பயன்படுத்துவதன் நோக்கம் என்ன? மனித அறிவால் புரிந்து கொள்ள முடியாத மறையுண்மைகளை, மக்களுக்குப் புரிகிற அவர்களின் மொழியில், எளிய நடையில், அவர்களின் வாழ்க்கைச்சூழலில் உள்ள எடுத்துக்காட்டுக்களைப் பயன்படுத்தி வெளிப்படுத்துவதுதான் உவமையின் நோக்கம். உவமைகளை, எதற்காக இயேசு தன்னுடைய போதனையில் பயன்படுத்துகிறார்? பாமர மக்களுக்கு, விண்ணரசின் மறையுண்மைகளை எளிதான நடையில் விளக்குவதற்காக, இங்கு ‘இறையரசு’ ஒப்பீட்டு உவமையை இயேசு சொல்கிறார். இந்த ‘விதைப்பவர்’ உவமையின் முக்கியமான கரு: இறைவார்த்தை. அதாவது, இறைவார்த்தையை விதைக்கு ஒப்பிட்டு இயேசு பேசுகிறார்.  நாம் மேற்கண்ட நிகழ்வின் பிரச்சனையில், அடிநாதமாக இருப்பது, இறைவார்த்தையைப் பற்றிய “தெளிவான புரிதல் இல்லாமையே.” “இறைவார்த்தை” என்பது என்ன? பற்றிய நம்முடைய “சரியான புரிதலே” இத்தனை கேள்விகளுக்கும் பதிலாக அமையும்.

இன்றைக்கு, தங்களைப் ‘போதனையாளர்கள்’ என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிற பலரும், “கடவுளுடைய வார்த்தையைப் போதிக்கிறேன்” என்று சொன்னாலும், உண்மையில், அவர்கள் கடவுளுடைய வார்த்தையைப் போதிப்பதில்லை. மாறாக, கடவுளின் வார்த்தையின் மீதான, தங்களது அறிவை, சிந்தனையை, ஆன்மீகத்தைத் திணிக்கிறார்கள். (What they preach is, NOT the Word Of God, rather THEIR Reflections on the Word of God). ‘இறைவார்த்தையைஉடைப்பதுஎன்பது, வெறும் நம்முடைய தனிப்பட்ட சிந்தனையைக் கொடுப்பது அல்ல, மாறாக, “நிகழ்கால சூழ்நிலையோடு அதனை விவிலியச் சான்றுகளோடு, மக்களுக்கு விளங்கச் செய்வதே,” ஆகும். ( Breaking the Word of God does not mean Reflecting upon the Word of God, rather interpreting the Word of God based on the CONTEXT  in which ONE lives) இயேசு எம்மாவு சீடர்களோடு நடந்து செல்கிற நிகழ்வு, இதற்கு மிகச்சிறந்த உதாரணம்.

எம்மாவு நோக்கிப் பயணமான இரு சீடர்களோடு, உயிர்த்த ஆண்டவரும் பயணமாகுகிறார். அந்த பயணத்தில், “மோசே முதல் இறைவாக்கினர் வரை, அனைவரின் நூல்களிலும் தம்மைக் குறித்து எழுதப்பட்ட யாவற்றையும் இயேசு அவர்களுக்கு விளக்கினார்” (லூக்கா 24:27). இங்கு இயேசு ‘பழைய ஏற்பாட்டு’ நூல் மீதான தன்னுடைய சிந்தனையைச் சொல்லவில்லை. மாறாக, அந்த வார்த்தைகளை, அது எப்படி நிறைவுற்றது? என்பதை, விவிலியச் சான்றுகளோடு, நடந்த நிகழ்வுகளோடு, அவர்கள் புரிந்து கொள்கிற விதத்தில் ‘விளக்கிக்’ கூறுகிறார். இதுவே இறைவார்த்தைப் பகிர்வு. உண்மையில், இறைவார்த்தைப் பகிர்வு என்பது அறிவால் எழுவது அல்ல, சிந்தனையில் உதிப்பது அல்ல, ஆன்மீகத்தால் பெறுவது அல்ல, மாறாக, தூய ஆவியானவரால் துணையால், நம்முடைய வாழ்க்கைச் சூழலின் அன்றாட நிகழ்வுகளின் வழியாக, மீட்பின் வரலாற்றில் பேசிய இறைவன், இன்று நம்மோடு பேசுவதே, ‘இறைவார்த்தை’ ஆகும்.  

இன்றைக்கு நற்செய்திப் பெருவிழா என்கிற போர்வையில், நற்செய்தி அறிவிக்கிறவர்கள்,  தங்களுக்கு கொடுக்கப்பட்ட ‘கொடை’யால் (GIFT) போதிக்கவில்லை. தங்களுக்கு இருக்கிற ‘திறமையினால்’ (TALENT) அதனைப் போதிக்கிறார்கள். அடிப்படையில், அவர்களுக்கு விவிலிய அறிவோ, விவிலியத்தில் “மனித வார்த்தைகளில் மறைந்திருக்கிற”‘கடவுளின் வார்த்தைகளை’ எப்படி எடுத்து, அதனை இப்போதைய வாழ்வியலோடு இணைத்துப் பார்க்க வேண்டும் என்கிற விளக்க அறிவோ, துளியும் கிடையாது. ஒன்றிரண்டு விவிலிய வசனங்களை மனப்பாடம் செய்து விட்டாலே, தாங்கள் விவிலியத்தில் புலமைப் பெற்று விட்டதாக, எண்ணிவிடுகிறார்கள். தங்கள் அறிவால், சிந்தனையால், ஆன்மீகத்தால் பெறும் கருத்துக்களையே, ‘கடவுளின் வார்த்தையாக’ மக்கள் நடுவில் விதைப்பதாக நினைத்து, அவர்களுடைய ‘சொந்த’ வார்த்தைகளை, ஆணித்தரமாகத் ‘திணிக்கிறார்கள்’. இது ‘அறியாமையாகவும்’ இருக்கலாம். ‘வியாபார உக்தியாகவும்’ இருக்கலாம். ‘அதிகாரச்சிந்தனை’ உள்ளதாகவும் இருக்கலாம். இது அவரவர்க்கே வெளிச்சம்.

விவிலிய வார்த்தைகளைத் தங்களின் ‘அறிவைக்கொண்டோ, சிந்தனைகளைக் கொண்டோ, ஆன்மீக ஒளி’ கொண்டோ விளக்கம் கொடுப்பது, ஒரு ‘கதையைச்’ சொல்லி, அதிலிருந்து ‘கருத்து’ கூறுவதற்கு ஒப்பாகும். உண்மையில் போதித்தல் என்பது ஒரு ‘கண்டுபிடிப்பு’ அல்ல, மாறாக, தூய ஆவியனாவரின் துணை கொண்டு, விவிலியத்தின் மனித வார்த்தைகளில் மறைந்திருக்கும், கடவுளின் வார்த்தைகளைத் ‘தேடும் ஒரு தேடல்’ (Preaching is NOT TOINVENT the Word of God’ but itis to DISCOVER the Word of God in the Bible).

அப்படியென்றால், புதுமைகள் நடக்கிறதே? என்று கேட்கலாம். உண்மையில், இவர்கள் இதுவரை நடந்ததாகக் கூறப்படும் புதுமைகளில் பெரும்பாலானவை, ‘உளவியல்’ சார்ந்தவையே. அறிவியல்பூர்வமாக எதுவும் நிரூபிக்கப்பட்டது இல்லை. ‘விளம்பரங்களும்’, ‘பாமர மக்களின் அறியாமையுமே’ இவர்களின் மூலதனம். ஒருவேளை, உண்மையில் புதுமைகள் நடக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இதுவரை, எத்தனை குருடர்கள் பார்வை பெற்றார்கள்? எத்தனை செவிடர்களின் கேட்கும் திறனைப் பெற்றிருக்கிறார்கள்?  எத்தனை முடமானவர்கள் நடந்திருக்கிறார்கள்? ஏன் இது போன்ற பிறப்பால், ஊனமாகப் பிறந்தவர்களுக்கு, புதுமை செய்து, குணப்படுத்தும் வல்லமை இவர்களின் செபங்களுக்கு, கிடையாதா? புதுமைகளில் நம்பிக்கை இல்லாதவன் அல்ல நான். ஆனால், இவர்கள் ‘புதுமை நடந்தது’ என்று சொல்வதில், நம்பிக்கையில்லை. காரணம், இவர்கள் கடவுளை, ‘மந்திரவாதியாகவும்’, செபத்தை ‘மந்திர, தந்திரமாகவும்’, பாமர மக்களை ஏமாற்றிப் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அப்பயென்றால், “இது தான், இறைமொழி”, “இது தான் இன்றைய நாளுக்கான கடவுளின் வார்த்தை” என்பதை, நாம் எப்படி அறிந்து கொள்ள முடியும்? நான்கு செய்திகளைப் பகிர்ந்து கொள்கிறேன்.

“ஆதிக்க மொழி” - இறைமொழி அல்ல

சாதியால், மதத்தால், மொழியால், இனத்தால் ‘ஆதிக்கம்’ செலுத்துகிற மொழி, கண்டிப்பாக இறைமொழியாக இருக்க முடியாது. ஏனென்றால், “சமத்துவமே” இறைமொழி. கோணலை நேராக்குவது தானே நடுநிலை! வேறுபாடுகளைப் பாகுபாடுகளாக்கிப் பிளவுபடுத்துவது அல்ல இறைமொழி. வேறுபாடுகளில் ஒற்றுமை காண்பதே இறைமொழி. இயற்கையின் முன் அனைவரும் ‘சமம்’ என்பது தானே, கொரோனா கற்றுத்தந்த பாடம். ஆனால், ‘உயர்தர மருத்துவம் ஆட்சியாளர்களுக்கே’ என்று, ஏற்றத்தாழ்வுகளை உருவாக்குவது, அதிகாரவர்க்கத்தின் ‘ஆதிக்க மொழி.’ அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு ஒன்று, பாமரனுக்கு ஒன்று என்று பாகுபாடு காட்டுவது, எப்படி மக்களுக்கான ‘சமத்துவ’ ஆட்சியாக இருக்க முடியும்? அது போலத்தான் மொழியும். ‘கடவுள் இஸ்ரயேல் மக்களைத் தேர்ந்தெடுத்தது ‘ஆதிக்கம்’ செலுத்துவதற்காக அல்ல, ‘அவர்கள் வழியாக உலகத்தில் ‘சமத்துவத்தை’ ஏற்படுத்தவே. ‘நம்பிக்கை’என்ற பெயரில்,‘மதம்’ பிடித்து அலையும் மனிதர்களின் எண்ணத்தில் உதிப்பது ‘ஞானம்’ அல்ல, மாறாக, ‘மூர்க்கம்.’ கூர்ந்து நோக்கினால், இவர்களின் போதனை மொழிகள் அத்தனையும் ‘தீர்ப்பிடுகிற’ மொழியாகவே இருக்கும். ‘தீர்ப்பிடாதீர்கள், தீர்ப்பிடப்படுவீர்கள்’ என்று கடவுள் சொல்வதாகப்  போதிக்கிற இவர்கள் மட்டும், கடவுள் நிலையிலிருந்து மற்றவர்களைத் ‘தீர்ப்பிடுவது’ எப்படி இறைமொழியாக இருக்க முடியும்?

இயேசு கிறிஸ்து மீட்பர்’ என்பது நமது நம்பிக்கையாக இருக்கலாம். இறைவார்த்தையைப் போதிப்பது நம்முடைய கடமையாக இருக்கலாம். ஆனால், ‘அவரை ஏற்றுக்கொள்ளதவர்களுக்கு மீட்பே கிடையாது’ என்று மற்றவர்களைத் தீர்ப்பிடுவதற்கு, யார் அதிகாரம் கொடுத்தது? இந்த மண்ணகத்தில் இருக்கிற எவருக்கும் தீர்ப்பிடுகிற அதிகாரம் கிடையாதே? இஸ்ரயேல் மக்களைக் கடவுள் தோ்ந்தெடுத்தது, இறைவனின் கொடையாக இருக்கலாம். ஆனால், அவர்களே “அழைக்கப்பட்டவர்கள்” வாழ வேண்டிய வாழ்வை வாழாதபோது, அழிவைத்தானே சந்தித்தார்கள்? கடவுள் என்ன கட்சி நிறுவனரா ஆள் சேர்ப்பதற்கு?

“அச்சப்படுத்தும்” மொழி - இறைமொழி அல்ல

‘உலகம் அழியப்போகிறது’ என்று, இவர்கள் மக்களை இன்னும் எத்தனை காலம் தான், ஏமாற்றப் போகிறார்களோ, தெரியவில்லை.  கடவுள் எதற்காக, உலகை அழிக்க வேண்டும்? கடவுள் இந்த உலகத்தை அழிப்பதற்காகவா படைத்தார்? இந்த உலகத்தை அழிக்க வேண்டுமென்றால், கடவுள் எதற்காக, தன்னுடைய ஒரே மைந்தன் இயேசுவை இந்த உலகத்திற்கு அனுப்பி மீட்க வேண்டும்?

பழைய ஏற்பாட்டில், ‘பாவம் பெருகியபோது, வெள்ளத்தால் உலகம் அழிக்கப்பட்டது’ என்பதை, மேற்கோள் காட்டுகிறார்கள். ‘இடிமுழக்கம்’, போர் மேகம் சூழ்கிறபோது, நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள்’ என்கிற புதிய ஏற்பாட்டு வார்த்தைகளை இணைத்துச் சான்று கூறுகிறார்கள்.

இயேசு தன்னுடைய சீடர்களுக்குச் சொல்கிற, “நீங்கள் ஏமாறாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில், பலர் என் பெயரை வைத்துக்கொண்டு வந்து, ‘நானே அவர்’ என்றும், ‘காலம் நெருங்கி வந்து விட்டது’ என்றும் கூறுவார்கள். அவர்கள் பின்னே போகாதீர்கள்” (லூக்கா 21:8) என்பது இவர்களைப் பற்றியது தானோ? என்பது எனக்குள் எழுகிற கேள்வி.

பழைய ஏற்பாட்டில், வெள்ளத்தால் கடவுள்தான் உலகத்தை அழித்தார் என்பது, ‘எல்லாவற்றிற்கும் கடவுளைக் காரணமாகப் பொருத்திப் பார்க்கும், இஸ்ரயேல் மக்களின் இறையியல் பார்வை’. அவ்வளவு தான்! அது அவர்களது பார்வை. இந்து சமயத்தில் கூட, ‘எல்லாமே விதிப்படியே நடக்கும்’ என்பது இந்து சகோதரர்களின் நம்பிக்கை. நடக்கிற நிகழ்வுகளை வைத்து, அவர்கள் பார்க்கிற இறையியல் அது. அதற்காக, அறிவியல் வளர்ந்திருக்கிற, 21 ஆம் நூற்றாண்டிலும், அதே போல பார்க்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லையே?

‘மண்ணுலகில் பாவம் பெருகியதால், மனிதர்களாலேயே உலகம் அழிந்தது’ என்கிற ஆழமான இறையியலாக, ‘நோவாவின் நிகழ்வை’ பார்க்கக்கூடாது , ஏன், நாம் இப்போதும் பார்க்கக்கூடாது? தங்கள் பாவத்தால், மனிதர்கள் தாங்களே அழிவைத் தேடிக்கொண்டாலும், கடவுள் இந்த உலகம் அழிவதை விரும்பவில்லை. தீமை, நன்மையை வெல்ல நினைக்கும் நேரத்தில் எல்லாம், நோ்மையாளராய் வாழ்ந்த ‘நோவா’வைப் போன்ற பல மனிதர்களை உலகத்தை மீட்கும் கருவியாகப் பயன்படுத்தினார் என்பது தானே நம்முடைய இறையியல்.

அப்படி இந்த உலகத்தை, ‘கருவிகளால்’ காப்பாற்ற முடியாது என்கிற நிலை வந்தபோது, தன்னுடைய ஒரே மகனையும், கடவுள் நமக்காக பலியிடத் தயங்கவில்லையே? எனவே,‘அழிக்க வேண்டும் என்று எண்ணுவதும், உலகம் அழிய வேண்டும் என்று நினைப்பதும், கடவுளின் மொழி அல்ல. மாறாக, மனிதனே அழிவைத் தேடிக்கொண்டாலும், வாழ்வை வழங்குகிறவரே நம் கடவுள்’ என்பது தானே, காயீனின் வாழ்வும், யோனாவின் ‘நினிவே’ இறைவாக்கும் நமக்குத் தரும் இறையியல் உண்மை!

இப்படி, அடிப்படையில் ‘சிறிதும்’ விவிலிய இறையியல் அறிவே இல்லாத ஒருவர், விவிலியத்தில் மனித மொழியில்“மறைந்து கிடக்கிற” கடவுளின் வார்த்தையை எப்படி ‘தேடி எடுத்து’அறிவிக்க முடியும்? அறிவியலும், மனித அறிவும், விவிலியத்தைப்பற்றி அறிவியல் ரீதியான சிந்தனைகளும் காலத்திற்கேற்ப புதிய ‘பார்வைக்’ கதவுகளையும்  திறக்கிறபோது, கண்களைக் மூடிக்கொண்டு, வெளிச்சம் தேடுகிற இவர்களைத் தானே, “கண்ணிருந்தும் குருடர்களாக” இயேசுவால் சொல்லப்படுகிறவர்களாக, நம்மால் பார்க்க முடியும்?

மொழி மாற்றமே செய்ய விரும்பாமல், பழைய தமிழையே ‘தேவ வாக்கியமாக’ கோடிட்டுக் காட்டும் ‘அறியாமையில்’ இருக்கிற இவர்களை, எப்படித்தான் புரிந்து கொள்ளச் செய்வது? என்பதும் தெரியவில்லை. வெறுப்பு மொழி பேசும் இவர்களால்,‘மனமாற்றம்’ பற்றி எப்படி போதிக்க முடியம்? இவர்கள் போதிப்பது போல், கடவுள் ‘மந்திரவாதியாக’நடந்த எல்லாவற்றையும் ‘அழித்து’ எழுத, இந்த உலகம் வெறும் காகிதம் அல்லவே.

அப்படி ஒவ்வொரு முறையும், தனக்கு தேவைப்படும் நேரத்தில் எல்லாம் அழித்து எழுதினால், அவர் ‘மந்திரவாதி’ தானே? கடவுள் அல்லவே. இயற்கை இயங்குவதற்கு விதிகள் இருக்கிறது. அதனை இயங்கச் செய்கிறவர் கடவுள். அவரே எப்படி தன் சொந்த விருப்பத்திற்கு மட்டும், அதனை மாற்றி அமைக்கச் செய்கிறவராக, இருக்க முடியும்?

இவ்வளவு சிக்கலான சூழ்நிலையிலும், அதிகாரத்தில் இருக்கிற ஒற்றை மனிதனின் சுயநலம், பதவி ஆசை, ஆதிக்க உணர்வுக்காக தவறு செய்யப்படுகிறபோது, ஒவ்வொரு முறையும் கடவுள் தானே, இந்த உலகத்திற்கு விடுதலை கொடுத்திருக்கிறார்? இந்த உலகம் ‘விஞ்ஞானிகள்’ என்று போற்றுவது, அறிவிற் சிறந்தவர்களல்லவே. அறிவாளிகள், விஞ்ஞானிகளாக இருந்திருக்கலாம். ஆனால், முக்கிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்தவர்கள் எல்லாருமே, சாதாரண தோற்றமுடைய எளியவர்களே! கட்டுவோர் விலக்கிய கல் தானே, கட்டிடத்தின் மூலைக்கல் ஆயிற்று!

உண்மையில், இது ஓர் அற்புதமான இறையியல். இதனை வெறும் மந்திரமாகச் சொல்லி, மக்களை அடிமைப்படுத்துவது, பயமுறுத்துவது, அச்சமூட்டுவது கடவுளையே கேலி செய்தவதாகும். இந்த உலகம் நிச்சயம் ஒருநாள் அழியும். ஆனால், அழிக்கப்போகிறவர் கடவுள் அல்ல, மாறாக, மனிதனின் பேராசை, சுயநலம், ஆதிக்க எண்ணம், அடக்கி ஆள வேண்டும் என்கிற சிந்தனை, மண்ணாசை, பெண்ணாசை, பொருளாசை - இவைகள் தான்.

கொரோனா நோயை,  இந்த உலகத்தை அழிப்பதற்காகத்தான் கடவுள் அனுப்பினார் என்று சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? நாடுகளை ஆளும் தலைவர்களின் ஆதிக்க வெறி, பொறாமை, சுயநலம், தீய எண்ணம் இவைகள் தான் காரணம் என்று, நம் ‘பகுத்தறிவுக்குத்’ தெரியாதா? இவ்வளவையும் செய்துவிட்டு, ‘கடவுள் எங்கே போனார்?’ என்று கேலி பேசுவது, எவ்வளவு மடமைத்தனம்?

நம் பெரும்பாலானோரின் விசுவாசம் கூட, ‘கடவுள் ஏதாவது மந்திரம்’ செய்து காப்பாற்றி விட மாட்டாரா? என்கிற ‘குருட்டு’நம்பிக்கை தானே?கடவுள் நிச்சயம் நம்மைக் கைவிட மாட்டார். ஆனால், மந்திரவாதியாக காப்பாற்றுவார் என்று எண்ணாதீர்கள். நிச்சயம், இதற்காக உழைத்துக்கொண்டிருக்கிற, தன்னலமில்லாமல் பாடுபட்டுக்கொண்டிருக்கிற எளிய மனிதர்கள் வழியாக, கண்டிப்பாக, இந்த பிரச்சனைக்கு முடிவு கொடுப்பார்? அதற்கு நம் செபத்தின் வழியாக, உறுதுணையாக இருப்பது தான், நாம் இந்த நேரத்தில் செய்ய வேண்டிய கடமை.

மக்களை அச்சமூட்டி, பணம் சம்பாதிப்பது அல்ல. ‘ஆண்டவரே பேசும்! உன் அடியவன் கேட்கிறேன்’ என்கிற சாமுவேலின் பதில் மொழியும், ‘இதோ! ஆண்டவரின் அடிமை’ என்கிற அன்னை மரியாளின் மொழியும், கடவுளின் கருவிகளாக செயல்பட, அவர்கள் கொடுத்த சம்மத மொழி தானே, கடவுளின் பலம்! தீமையின் ஆதிக்கம் எவ்வளவு அதிகாரத்தில் இருந்தாலும், கடவுள் வெறும் ‘கூலாங்கல்லால்’மிகப்பெரிய மலையையும் ஒரு சிறுவனைக் கொண்டு, சுக்குநூறாக்கியவர்.

குற்றப்படுத்தும் மொழி – இறைமொழி அல்ல

வேளாங்கண்ணியில், ‘விபச்சாரம்’ நடக்கிறது என்பது தான், அவருடைய முதல் குற்றச்சாட்டு. விபச்சாரம் தவறு தானே? அதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? என்று நாம் விவாதம் செய்யலாம். இங்கு, ‘விபச்சாரத்தைப்’ பற்றிப் பேசியிருந்தால், அவருடைய மொழியை இறைவாக்கினரின் மொழியாக ஏற்றுக்கொண்டிருக்கலாம். ஆனால், அவருடைய நோக்கம அதுவல்ல, வேளாங்கண்ணியைக் குற்றப்படுத்த வேண்டும், என்பது அவருடைய வார்த்தைகளில் தெளிவு.  

‘யோவான் நற்செய்தியில், இயேவிடம் விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணை அழைத்து வருகிறார்கள். அந்த பெண்ணை, இயேசுவிடம் அழைத்து வந்தது, ‘நீதியை’ நிலை நாட்ட வேண்டும் என்பதற்காக அல்ல, “அவர் மேல் குற்றம் சுமத்த ஏதாவது வேண்டும் என்பதற்காக, அவர்கள் இவ்வாறு கேட்டுச் சோதித்தார்கள்” (யோவான் 8:6).

விபச்சாரம் என்றவுடன், ஏன் நம்முடைய எண்ணம் ‘பெண்ணை’ மையப்பபடுத்தியதாகவே இருக்கிறது? இங்கு நடக்கிற 90 விழுக்காடு விபச்சாரங்கள், பெண்களின் ‘உடல் பசி’க்காக நடக்கவில்லை, மாறாக, ‘வயிற்றுப்பசி’க்காக நடக்கிறது. ஆனால், ஆண்கள் 90 விழுக்காடு போ், தங்களின் ‘உடல் பசிக்காக’ பெண்களை, இந்த விபச்சாரத்தில் பயன்படுத்துகிறார்கள்.

நம் சூழ்நிலையில், எப்படிப்பட்ட பெண்கள் விபச்சாரம் செய்கிறார்கள்? கணவனை இழந்த கைம்பெண், வறுமையில் வாடும் பெண், மற்றவர்களால் தவறாகப் பயன்படுத்தப்பட்டு, இந்த நிலைக்கு தள்ளப்பட்ட பெண், கயவர்களால் கடத்தப்பட்டு பணத்திற்காக விற்கப்பட்ட பெண் - இவர்களைத் தானே ‘விபச்சாரிகளாக’ இந்த ‘ஆணாதிக்க சிந்தனை கொண்ட அரசுகள்’ அடையாளப்படுத்தி வைத்திருக்கிறது? இந்த நிலைகளெல்லாம் உருவானதா? உருவாக்கப்பட்டதா? வறுமை நிலைக்குத் தள்ளப்பட்ட, இந்த பாவப்பட்ட பெண்களின் வயிற்றுப்பசியை போக்க வேண்டியது யாருடைய கடமை? ஓர் அரசின் கடமை அல்லவா? அந்த அரசை எதிர்த்து ‘துணிந்து’ பேசியிருந்தால், அது கண்டிப்பாக ‘இறைமொழி’யாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும்! ஆனால், ‘அரசைப்’ பற்றி, ஒரு வார்த்தை கூட பேசவில்லை? பயமா? பயம் எப்படி, இறைமொழியாக இருக்க முடியும்? அறியாமையா? ஆவியானவர் எப்படி ‘அறியாமையோடு’ செயல்பட முடியும்? அதனால் தானே, இயேசுவே விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணைத் தீர்ப்பிடவில்லை. இயேசுவை விட இவர்கள் என்றைக்கு பெரியவர்கள் ஆனார்கள்?

இந்த பெண்களில் பசியைப் போக்க, இவர் என்ன செய்தார்?‘இருப்பதை இல்லாதவரோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்’ என்பது தானே, இயேசுவின் போதனை! நற்செய்திப் பணிக்காக தன் வறுமை நிலையிலும், ‘கடவுள் கண் திறக்க மாட்டாரா?’ என்று, ஏக்கத்தோடு காணிக்கையிடும், ஏழை மக்களின் உழைப்பில் பெற்ற பணத்தைக் கொண்டு, பிரமாண்ட கூடாரங்களாக மாற்றுகிற இது போன்ற போதகர்களிடம், என்ன இறைமொழியை எதிர்பார்க்க முடியும்?

பெருமணல், கூடங்குளம், தூத்துக்குடி என்று, எங்கெல்லாம் மக்கள் தங்கள் வாழ்விற்காக, வாழவுரிமைக்காக போராடினார்களோ, அவர்களில் ஒருவராக நின்று, அவர்களோடு அடிவாங்கி, வழக்குகள் வாங்கி, குண்டடிபட்டு, இன்னும் மக்களுக்காகப் போராடுகிற “அருட்பணியாளர்கள்” பேசுகிற இறைமொழியை விட, இது போன்ற போதகர்கள் பேசுவது கவர்ச்சியாக இருக்கலாம்! ஆனால், கண்டிப்பாக இறைமொழியாக இருக்க முடியாது?

“சமரச”மொழி – இறைமொழி அல்ல

‘நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே’ என்பது தானே இறைவாக்கினர்களின் மொழி. எதிர்க்கப்பட வேண்டிய அரசராகவே இருந்தாலும்,  பலருடைய கண்டனங்களுக்கும், கேலிப்பேச்சுக்களும், சில வேளைகளில் கைது செய்யப்பட வேண்டியதே இருந்தாலும், எந்த சூழ்நிலையிலும் யாரோடும், எதற்காகவும் ‘சமரசம்’ செய்து கொள்ளாத மொழி தானே, இறைமொழி?அந்த வலிமை தானே, திருமுழுக்கு யோவானின் மொழி. எத்தனை நெருக்கடிகள், இடர்பாடுகள், வழக்குகள், அதிகார வர்க்கத்தின் அடக்குமுறைகள் எழுந்தாலும், திமிறி எழுந்து நிற்பது தானே, இயேசுவின் ‘அதிகாரம்’ நிறைந்த போதனை.

மக்களை ‘மதத்தால்’ அடக்கி ஆள நினைக்கும் ஆதிக்க நினைக்கும் தீய சக்திகளோடு சுயநலத்திற்காக கைகோர்த்துக் கொண்டு, ஆதிக்கம் செலுத்த நினைக்கிறவர்களை, ‘கடவுளை தூதனாக’ பிரகடனம் செய்யும் மொழி, கடவுளின் பார்வையில், ‘அருவருப்பு’ மொழியாகத்தான் இருக்க முடியுமே தவிர, இறைவனின் மொழியாக இருக்க முடியாது.

இப்போது, நம் வாழ்வை நாம் ஆன்ம பரிசோதனை செய்து பார்ப்போம். காரணம், இறைவார்த்தை மற்றவர்களுக்கு போதிக்கப்படுவதற்காக மட்டும் அல்ல, நாமும் வாழ்ந்து காட்டுவதற்காகத்தான். இது போன்ற போதகர்களை மட்டுமே குற்றம் சொல்லி, அவ்வளவு எளிதாக நாம் கடந்து சென்று விட முடியாது.

காரணம், நாமும் பல வேளைகளில் கண்ணெதிரே நடக்கும் பல அநீதிகளைக் ‘கண்டும், காணாதது’ போல எளிதாக கடந்து சென்று விடுகிறோம். ‘அன்னை மரியாள்’ பெயர் களங்கப்படுத்தப்படுகிறபோது சமூக ஊடகத்தின் வழியாக எழுகிற கோப மொழி, விழுப்புரம் ‘ஜெயஸ்ரி’ போன்ற பெண் குழந்தைகள் எரிக்கப்படுகிறபோது, நம் குரல்கள், இந்த அளவுக்கு உரக்க எழுவதில்லையே? அப்போதெல்லாம், அமைதியாகிவிடுகிறோமே? அமைதி, அநீதிக்கு துணை போவது ஆகாதா? கோணலை நேராக்குவது தானே, இறைவாக்குப் பணி?

அதே போல, இன்றைக்கு நாம் வணங்கும் சுரூபங்களை, வெறும் ‘சிலைகள்’ என்று சொல்லிவிட்டதற்காக, இவ்வளவு உணர்ச்சிப் பிழம்புகளாகப் பேசும் நாம், அதனை நியாயப்படுத்துவதற்காக, “நம்முடைய தந்தை, தாயின் புகைப்படங்களை நாம் நினைவாக வைப்பதில்லையா?” என்று, ஆணித்தரமான விளக்கங்களை, அருமையாக கூறுகிற நாம், நம்முடைய சூழ்நிலையில், நம்மோடு வாழ்கிற ‘இந்து’ சகோதரர்களின் வழிபாட்டு முறையில், அவர்கள் வைத்திருக்கிற சுரூபங்களைப் பற்றி நம்முடைய பார்வை எப்படிப்பட்டதாக இருக்கிறது? இதே ‘போதகர்களின்’மொழியை நம்மில் பலரும், அவர்களைப் பார்த்துப் பேசிக்கொண்டு இருக்கவில்லையா? ‘கற்பனைத் தெய்வங்கள், விக்கிரக வழிபாடுகள்’ என்று, இந்த போதகர்கள் சொல்கிறபோது, நமக்கு ஏற்படுகிற வலி மற்றும் வெறுப்பு தானே, நம்மால் அவர்களுக்கும் ஏற்படும்? நம்முடைய இந்த போதனை, எப்படி இறை மொழியாக இருக்க முடியும்? நம்மோடு வாழ்கிற பிற சமயத்தினரோடு, நல்ல மதிப்பும், உயர்ந்த எண்ணமும் கொண்டிருக்க வேண்டும் என்பது தானே, நம் அன்னையாம் திருச்சபையின் படிப்பினை! யாரோ ஒருவன் விஷமத்தனத்தோடு பேசுகிறான் என்பதற்காக, ஒட்டுமொத்த நண்பர்களையும், மதத்தின் பெயரால் எப்படி பிளவுபடுத்தி, கசப்புணர்வை வளர்க்க துணைபோக முடியும்? ‘எந்த அளவையால் அளப்பீர்களோ, அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்’ என்பது, நம் ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகள். ‘உன் கண்ணிலுள்ள மரக்கட்டையை விட்டு விட்டு, அடுத்தவர் கண்ணில் இருக்கிற துரும்பைப் பார்’ என்பது நமக்குமான, இயேசுவின் போதனை.

‘என் தாய் அழகானவள், என்பது,  தன் தாய் மீது ஒருவன் கொண்டிருக்கும், இயல்பான அன்பு. அதற்காக, என் நண்பர்களின் முன்னால், ‘என் தாய் தான், உங்கள் எல்லா தாய்மார்களை விடவும் அழகு’ என்கிற, தேவையில்லாத வாக்கியங்கள் எதற்கு? எப்போதாவது, நமக்கு நம்முடைய நண்பர்களின் தாய் மீது, அப்படிப்பட்ட எண்ணம் துளியளவு வருமா? மரியாதையும், அன்பும் தானே பெருக்கெடுத்து வரும்?

நாம் வாழும் நம்முடைய நாட்டில், நாம் கடைப்பிடிக்க வேண்டிய அரசியல் சாசனம் இருக்கிறது. நம்முடைய நம்பிக்கை நமக்கு. ஆனால், பல தரப்பட்ட நம்பிக்கை கொண்டிருக்கிற மக்களோடு கூடி வாழ்கிறபோது, நாம் பார்க்க வேண்டிய பார்வை ‘சமத்துவ’ பார்வையாக இருக்க வேண்டும். இது சமரசம் செய்து கொள்வது அல்ல. ஏனென்றால், நம் அம்மா நம்முடைய தாய் தான், ஆனால் அவள் ‘கடவுள்’ அல்ல.

கடவுளுடைய வார்த்தை நிச்சயம் பலன் தரக்கூடியது தான். ஆனால், விதைப்பதற்கு முன்னால், நாம் கேட்க வேண்டிய முதல் கேள்வி: கடவுளுடைய வார்த்தையை விதைக்கிறோமா? அல்லது நம் ‘சொந்த’ சிந்தனையைத் திணிக்கிறோமா? இரண்டாம் கேள்வி: நாம் விதைப்பது விதை தானா?

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

Comments

சிலை வழிபாட்டை ஆண்டவா் கண்டிக்கிறார். தயவுசெய்து அதற்கு ஆதரவாக பேசாதீர்கள். வேதத்தில் எல்லா இடங்களிலும் தேவன் சிலை வழிபாட்டை அருவருப்பான ஒன்றாக தான் கூறுகிறார். பத்து கற்பனையில் இரண்டாம் கற்பனை என்ன கூறுகிறது, தயவுசெய்து உலகத்தோடு ஒத்து போகாதீர்கள். இயேசுவை போல பேச வேண்டும். சிலை வழிபாடு தவறு தான். அது யார் செய்தாலும் தவறு தான். வேத வாக்கியம் அவ்வாறு தான் கூறுகிறது. ஒருவர் வேதத்தின் படி பேசாவிட்டால் அவருக்கு விடியற்கால வெளிச்சமில்லை. வேதத்தை நன்கு அறிந்த நீங்கள் இவ்வாறு பேசுவதும் செய்வதும் வருத்தமளிக்கிறது.

Add new comment

12 + 1 =