Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
இயேசுவைத் தேடுகிறோமா?
பொதுக்காலத்தின் 25 ஆம் வியாழன் - I. சபை:1:2-11; II. திபா: 90:3-4,5-6,12-13,14,17; III. லூக்: 9:7-9
இளைஞர்கள் சிலர் ஒன்றுகூடிப் பேசி சிரித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். நாட்டு நடப்புகளையும் சுவாரசியமான கேளிக்கைச் செய்திகளையும் பகிர்ந்து கொண்டிருந்த சமயத்தில், ஒரு பிரபல திரைப்பட நடிகரைப் பற்றிய பேச்சு அடிபட்டது. அப்போது அந்த இளைஞர்களுள் ஒருவர் "எப்படியாவது நான் இறப்பதற்குள் அந்த திரைப்பட நடிகரைச் சந்திக்க வேண்டும். அவருடன் சேர்ந்து ஒரு புகைப்படமாவது எடுத்து ஊரெல்லாம் காட்டி பெருமைப் பட வேண்டும்" என்று சொல்லிக் கொண்டிருந்தார். அதைக் கேட்டுக் கொண்டிருந்த ஒரு முதியவர் அவர்கள் அருகே வந்து "வாழ்க்கையில் சாதிக்கப் பல காரியங்கள் உண்டு. இப்படிப்பட்ட வீணான காரியங்களை விட்டுவிட்டு வாழ்வில் முன்னேறும் வழியைப் பாருங்கள்" என்று கோபமாகச் சொல்லி விட்டுச் சென்றார்.
வாழ்க்கையில் நாம் எதைத் தேடி ஓடுகிறோம்? யாருக்கு, எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்? என்று சிந்தித்துப் பார்க்க அழைக்கப்படுகிறோம்.தேடல் தவறல்ல. ஆனால் சரியான நோக்கம் இன்றி தேடப்படும் எல்லாகாரியங்களுமே வீண் தான்.
இன்றைய முதல் வாசகத்தில் சபை உரையாளர், "வீண் முற்றிலும் வீண்" என்று கூறி நம்முடைய வாழ்வின் அர்த்தத்தைத் தேட தூண்டுகிறார். புதிது என்று ஒன்றுமில்லை .இன்று புதிதாக இருப்பது நாளை மற்றொரு புதியது வரும் போது பழையதாய் மாறிப்போகும். இது தான் உலக நியதி. ஆனாலும் நாம் பல சமயங்களில் வீணான, அழிந்து போகக் கூடியவற்றையே தேடி ஒடுகிறோம். இதில் வேடிக்கையான செய்தி என்னவென்றால் நாம் தேடிப் போகின்ற அனைத்தின் நிலையில்லாமையை நாம் நன்றாக
அறிந்திருந்தும் அவற்றைத் தேடுவது தான். இறுதியில் தேடி தேடிக்கிடைக்கப்பெற்ற அப்பொருட்களின் மீதே சலிப்படைந்து விடுகிறோம். நம் அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்திய எத்தனை பொருட்களை நாம் வீண் என்று கழிக்கிறோம்?சிந்தித்துப் பார்ப்போம்.
இன்றைய நற்செய்தியில், ஏரோது இயேசுவைக் காண வாய்ப்பு தேடிக்கொண்டிருந்ததாக நாம் வாசிக்கின்றோம். அந்த தேடலின் நோக்கம் என்ன? எத்தனையோ மக்கள் இயேசுவின் போதனையைக் கேட்கவும், நோய் நீங்கி நலம் பெறவும், அவருடைய அருஞ்செயல்களைக் காணவும் அவரை நம்பிக்கையோடு தேடினர் என்பதையும் நாம் விவிலியத்தில் வாசிக்கிறோம். அவ்வாறு தேடியவர்கள் அதற்குரிய பலன்களைப் பெறாமல் போனதில்லை என்பதையும் நாம் அறிவோம்..நாம் இயேசுவை எதற்காகத் தேடுகிறோம் என சிந்தித்துப் பார்க்க வேண்டும். வீணாக வாழ்க்கையைக் கழித்து பயத்தோடு தேடாமல்,ஒவ்வொரு நாளும் நமக்கும் பிறருக்கும் பயனளிக்கும் வகையில் நம் வாழ்வு அமைய அவரைப் பக்தியோடு நாடுவோம்.
இன்றைய வழிபாடு நம் வாழ்வின் தேடலை அர்த்தமுள்ளதாக்க நம்மை அழைக்கின்றது. மீண்டும் ஓடுவதற்காக, தான் உற்பத்தியாகும் இடத்திற்கே திரும்பிச் செல்லும் ஆறுகளைப் போல நம் வாழ்க்கை ஓட்டத்தை நேர்த்தியாக்க, பயனுள்ளதாக்க கடவுளை நம்பிக்கையோடு தேட வேண்டும் என்ற கருத்தை இன்றைய இரு வாசகங்களும் நமக்கு எடுத்துரைக்கின்றன. எனவே வீணானவற்றைத் தேடி அலைவதை விட்டுவிட்டு கடவுளை நாடும் வரம் கேட்போம்.
இறைவேண்டல்
எம்மைப் பயனுள்ள வாழ்வுக்காய் படைத்த எம் இறைவா! இவ்வுலக வாழ்வில் பயனற்ற, நிலையற்ற செயல்களில் எங்கள் மனதைச் செலுத்தாமல் என்றும் நிலையான, நிரந்தரமான உமது அருளை, ஒவ்வொரு நாளும் பெற்று,அனைவருக்கும் பயனளிக்கும் சிறந்த வாழ்வு வாழவும், அனுதினமும் உம்மையே தேடவும்,உம் அருட்பதம் நாடவும் எமக்கு உதவி புரியும். ஆமென்.
திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு, சிலாமேகநாடு பங்கு, சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment