Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
இயேசுவுக்காய் அனைத்தையும் விட்டு விடத் தயாரா? | குழந்தை இயேசு பாபு | Daily Reflection
தவக்காலம் - திருநீற்று புதனுக்குப் பின் வரும் சனி
I: எசா: 58: 9b-14
II: தி.பா: 86: 1-2. 3-4. 5-6
III: லூக்: 5: 27-32
இன்றைய நற்செய்தியில் வரிதண்டுபவரான லேவியைப் பார்த்து என்னைப் பின்பற்றி வா என அழைத்தவுடன் அனைத்தையும் விட்டு விட்டு இயேசுவைப் பின்பற்றினார் என வாசிக்கிறோம்.அவர் எவற்றையெல்லாம் விட்டுவிட்டார் என சற்று ஆழமாக ஆய்வு செய்வோம்.
முதலாவதாக அவருடைய வேலை. இஸ்ரயேல் மக்கள் ரோமையர்களின் ஆதிக்கத்தில் உண்மையான சுதந்திரம் இல்லாமல் வாழ்ந்த சமயத்தில் அரசு சார்ந்த வேலையை கிடைப்பது அரிதான காரியமே. அவர் அப்படிப்பட்ட அரசு வேலையைத் துறந்தார்.
இரண்டாவதாக அவ்வேலை செய்வதால் அரசிடம் இருந்து அவர் பெறும் எல்லா சலுகைகளையும், அவர்களிடமிருந்து பெறும் மதிப்பு மரியாதையையும் அவர் விடத் தயாரானார்.
மூன்றாவதாக அக்காலத்தில் வரி தண்டுபவர்கள் மக்கள் கொடுக்க வேண்டிய தொகையை விட அதிகமாக வரி சூலித்து அப்பணத்தை தங்களுடைய தேவைகளுக்குப் பயன்படுத்தி தங்கள் வாழ்க்கையை செல்வச் செழிப்போடு வாழ்ந்தார்கள். லேவியும் அவ்வாறு தான் வாழ்ந்திருப்பார். இயேசு அழைத்த உடன் இவ்வாறு செல்வத்தை ஈட்டும் வாய்ப்பினையும் அவர் விட்டுவிட்டார்.
உலகப் பார்வையில் வேலை, வசதிகள், மதிப்பு, மரியாதைகளை விட்டுவிட்டாலும் ஆன்மீகப் பார்வையில் நாம் ஆராய்ந்தால், பாவம் செய்வதற்கான வாய்ப்புகளையும் அதனால் வருகின்ற பழி பாவங்களையும் அவர் விட்டுவிட்டார் என்பதுதான் உண்மை. பாவி என்று அனைவராலும் ஒதுக்கப்பட்ட அவர் இயேசுவின் அழைப்பை ஏற்று அனைத்தையும் விட்டுவிடத் தயாரானதால் இயேசுவின் சீடராகும் வாய்ப்பைப் பெற்றார். இயேசுவோடு நண்பரைப்போல அமர்ந்து உண்ணும் பேற்றினையும் பெற்றார். தேவையற்றவற்றை நாம் விட்டுவிடும் போது கடவுளின் ஆசிரும் அன்பும் அதிகமாகக் கிடைக்கும் என்ற உண்மை இதன் மூலம் நமக்குத் தெளிவாகிறது.
அன்று லேவியை அழைத்த அதை இயேசுதான் இன்று நம்மையும் அவரைப் பின்பற்ற அழைக்கிறார். அவரைப் பின்பற்ற இயலாத வண்ணம் நாம் பிடித்துக்கொண்டுள்ளவை எவை என்பதை முதலில் நாம் கண்டுணர வேண்டும். நாம் விடாப்பிடியாக பிடித்துக்கொண்டுள்ள ஆடம்பரங்கள்,செல்வச் செழிப்புகள், சுய நலம்,பிறரை வருத்துகின்ற குணம் இவற்றை விட்டுவிட்டு இயேசுவைப் பின்தொடரத் தயாராக இருக்கிறோமா எனச் சிந்திப்போம். அதற்காக இறையருள் வேண்டுவோம்.
இறைவேண்டல்
உம்மைப் பின்தொடர எம்மை
அழைக்கும் தெய்வமே! உம் குரலைக் கேட்டு உம்மைப் பின்தொடரவிடாமல் நாங்கள் பிடித்துக்கொண்டிருக்கும் அனைத்தையும் விட்டுவிடத் தேவையான அருளைத் தாரும் ஆமென்.
Add new comment