இயேசுவின் நலமளிக்கும் பணியில் பங்குபெறுவோமா? | குழந்தை இயேசு பாபு | Daily Reflection


இன்றைய வாசகங்கள்
(08.02.2021)
பொதுக்காலத்தின்  ஐந்தாம் திங்கள்    
மு.வா: தொநூ:  1: 1-19
ப.பா:  தி.பா: 104: 1-2. 5-6. 10-12. 24,35
ந.வா: மாற்: 6: 53-56

 

உலகில் பிறந்த ஒவ்வொருவரும் நலமோடும் வளமோடும் வாழ வேண்டும் என்று நினைக்கின்றனர். வளமோடும் நலமோடும் வாழ்வது பிறர் கையில் இல்லை; மாறாக,  நம்முடைய கையில் தான் இருக்கின்றது. இயேசுவின் இறையாட்சி பணியில் இறையாட்சி மதிப்பீடுகளை  நற்செய்தியாக பறைசாற்றினார். அப்படிப்பட்ட பணியைச் செய்கின்ற பொழுது மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். நோய் நொடிகள் என்பது உடலை சார்ந்தது மட்டுமல்ல ; மாறாக,  உள்ளத்தையும் சார்ந்ததாகும். ஆண்டவர் இயேசு உடல் நோயை மட்டும் குணப்படுத்த வில்லை. மாறாக,  உள்ள நோயையும் குணப்படுத்தினார். இதைத் தான் இன்றைய நற்செய்தியில் நாம் வாசிக்கின்றோம்.

ஒரு ஊரில் ஒரு முதியவர் நோய்வாய்ப்பட்டு படுக்கையிலேயே கிடந்தார். பல மருத்துவர்களை அணுகியும் அவரை இயல்பு நிலைக்கு கொண்டுவர முடியவில்லை. முதியவரின் மகன் வெளிநாட்டில் பணி செய்து வந்தார். அவரின் உடல் மிகவும் மோசமான நிலைக்கு சென்றது. எனவே எல்லா உறவினர்களையும் அழைத்து அவரைப் பார்க்க வைத்தனர். இறுதியில் வெளிநாட்டிலுள்ள அவரது மகனையும் வரவழைத்தனர். மகன் வந்தவுடன் அம்முதியவர்  "என்னை மன்னித்து விடு அன்பு மகனே! நான் உனக்கு நான் உனக்கு என்னுடைய அன்பை முழுமையாகக் கொடுக்காமல் சுயநலத்தோடு வாழ்ந்துவிட்டேன். அதற்காக நான் மன்னிப்பு கேட்கின்றேன் "என்று கூறினார். அதற்கு அவர்  மகன் "எனக்கு எதிராக என்ன தவறு செய்தீர்கள்? "   என்று வினவினார். "நீர் படிக்கிற வயதில் உன்னை நன்றாக படிக்க வைக்கவில்லை. என்னுடைய அன்பை முழுமையாக கொடுக்கவில்லை. நான் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி உனக்குரிய சொத்தை பாழாக்கிவிட்டேன். எனவேதான் இப்பொழுது நீ வெளிநாட்டில் கடினப்பட்டு உழைத்து கொண்டிருக்கிறாய். என்னை மன்னித்துவிடு " என்று கண்ணீரோடு அழுது தன் உள்ளத்தின் சுமையை இறக்கி வைத்தார். அப்பொழுது  "அப்பா உங்களை நான் ஒருபோதும் வெறுக்க மாட்டேன். உங்களை அன்பு செய்கிறேன். நான் உங்களோடு இருக்கிறேன். நீங்கள் விரைவில் நலமடைந்து இயல்பு வாழ்வுக்கு திரும்புவீர்கள்  " என்று கூறினாராம். உடனே அவரின்  முகத்தில் மகிழ்ச்சியும் மனநிறைவும் உருவானது. இறுதியில் உடல் நலத்தைப் பெற்று  இயல்பு வாழ்வுக்கு திரும்பினார்.

நம்மோடு வாழக்கூடிய எத்தனையோ மக்கள் இத்தகைய உளவியல் பிரச்சினையினால் துன்பப்பட்டு வருகின்றனர். அந்த உளவியல் பிரச்சனை தான் அவர்களுக்கு உடல் நோயாக மாறி அவர்களைத் துன்புறுத்தி வருகின்றது. எனவே நேர்மறை எண்ணங்களையும் நேர்மறையான வார்த்தைகளையும் நாம் பிறருக்கு  கொடுக்கின்ற பொழுது, நாமும் இயேசுவைப் போல் குணமளிக்கும் பணியினை மிகச் சிறப்பாகச் செய்ய முடியும்.

இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசுவும் அவரது சீடர்களும் கெனசரேத்துப் பகுதியை அடைந்ததும் எண்ணற்ற நோயாளர்கள், உடல் நலம் குன்றியவர்கள் இயேசுவிடம் வந்து நலம் பெற்றனர். இயேசு அவர்களின் உள்ளத்தில் மன அழுத்தங்களையும் போராட்டங்களையும் அறிந்திருந்தார். நலம்பெற விரும்பியவர்களும் இயேசுவால் தங்கள் உள்ள நோய்களையும் உடல் நோய்களையும் குணப்படுத்த முடியும் என்று ஆழமாக நம்பினர்.

இங்கு இயேசு குணப்படுத்தும் மருத்துவராக அவர் பயன்படுத்திய மருந்து மன்னிப்பு. பிறரை நாம் மன்னிக்கும் பொழுது உடல் உள்ள நோயை குணப்படுத்த முடியும். எனவேதான் முடக்குவாதமுற்றவரை இயேசு குணப்படுத்திய பொழுது "உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன "என்று கூறினார்.  

எனவே நமது அன்றாட வாழ்வில் நோயினால் அவதிப்படுபவர்களை இயேசுவைப் போல ஏற்றுக்கொள்ளக்கூடிய மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ளவேண்டும். அவர்களை குணப்படுத்த நம்முடைய சொற்களுக்கும் உடனிருப்புக்கும்  வல்லமை உண்டு என்பதை அறிய வேண்டும்.  நோயாளர்கள் இயேசுவை நெருங்கி வந்து நலம் பெற்றதைப் போல,  நாமும் இயேசுவோடு கொள்ளக்கூடிய உறவின் வழியாக ஒவ்வொரு நாளும் நலம் பெற வேண்டும். அதற்கு மிகச்சிறந்த ஆயுதம் இறைவேண்டல். நாம்  நலமுள்ளவர்களாக இருக்கும் பொழுது, நிச்சயமாக பிறருக்கும் நாம் இயேசுவைப் போல நலமளிக்க முடியும். இயேசுவைப் போல பிறருக்கு நலமளிக்கத் தயாரா?

இறைவேண்டல் :
நலமளிக்கும் இயேசுவே ! நீர் எவ்வாறு உமது மன்னிப்பின் வழியாகவும் வார்த்தைகளின் வழியாகவும் உடனிருப்பின் வழியாகவும் பிறருக்கு நலமளித்தீரோ, அதேபோல நாங்களும் பிறருக்கு நலமளிக்கும்   நல்ல உள்ளத்தையும் எண்ணத்தையும் தாரும். ஆமென்.

Add new comment

6 + 3 =