Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
சிலை வழிபாடு !?!
மேலே விண்வெளியில், கீழே மண்ணுலகில், பூமிக்கடியே நீர்த்திரளில் உள்ள யாதொன்றின் சிலையையோ ஓவியத்தையோ நீ உருவாக்க வேண்டாம். நீ அவைகளை வழிபடவோ அவற்றிற்குப் பணிவிடை புரியவோ வேண்டாம். ஏனெனில் உன் கடவுளும் ஆண்டவருமாகிய நான் இதைச் சகித்துக்கொள்ளமாட்டேன்;
விடுதலைப் பயணம் 20 :4, 5
கடவுள் ஒருவரே. அவருக்கு உருவம் கிடையாது. தொடக்கத்தில், அவர் எரியும் நெருப்பு, காற்று, இடி மின்னல் இவற்றின் வழியாக பேசினார்.அவர் மட்டுமே ஆராதனைக்குரியவர். நாம் வேறு தெய்வங்களை வழிபடக் கூடாது. ஆராதனை என்பது 'நம் உடல் பொருள் ஆவி அனைத்துமே உமக்கே சொந்தம்' என்று ஒப்பு கொடுத்து மகிமைபடுத்துவது .
கத்தோலிக்க திருஅவையில் கடவுளை வழிபடுவதில் நீண்ட காலங்களாகவே சொரூபங்கள் இடம்பெற்றுள்ளதை அறிவோம். சொரூபங்கள் மற்றும் புனிதப்படங்கள் வழியாக பலரும் பரிசுத்த வாழ்க்கை வாழ்ந்து, புனிதர்களாகவும் மாறியிருக்கிறார்கள். நம் இந்திய தேசத்தில் கூட சிலுவையையும், அன்னை மரியாளின் படத்தையும் வைத்து தான் புனித தோமா நற்செய்தி அறிவித்தார் என அறிந்து இருக்கிறோம்.
இவ்வாறாக ஒரே கடவுளை வழிபடும் இயேசு உருவாக்கிய கத்தோலிக்க திருஅவையில் இறைவன் நம்முன்னே பிரசன்னமாயிருகிறார் என்பதை உணர்ந்து இறைவனோடு இன்னும் அதிகமாக ஒன்றிப்பதற்காக சொரூபங்கள் வைக்கபடுகின்றன.
ஆனால், விவிலியம் கண்டிக்கும் சிலை வழிபாட்டிற்கும் உண்மை கடவுளை நினைவுபடுத்தும் திரு சொரூபத்திற்கும் வித்தியாசம் உண்டு.
விடுதலைப் பயணம் 25:18 -20
"இரு பொன் கெருபுகளைச் செய்தல் வேண்டும்; இரக்கத்தின் இருக்கையிலுள்ள இரு பக்கங்களிலும் அவற்றை அடிப்பு வேலையாக அமைப்பாய்.
ஒரு புறத்தில், ஒரு கெருபும், மறுபுறத்தில் மற்றொரு கெருபுமாக அமைக்க வேண்டும். இரக்கத்தின் இருக்கையோடு இணைந்ததாக அதன் இரண்டு ஓரங்களிலும் கெருபுகளைச் செய்துவை.
அக்கெருபுகள், தம் இறக்கைகளை மேல் நோக்கி விரித்தவாறும், இரக்கத்தின் இருக்கையை தம் இறக்கைகளால் மூடியவாறும், இருக்கட்டும். கெருபுகளின் முகங்கள் ஒன்றையொன்று நோக்கியவாறும், இரக்கத்தின் இருக்கையைப் பார்த்தவாறும் விளங்கட்டும்’’.
இங்கே கடவுள் மேலே விண்ணகத்திலுள்ள இரண்டு கெரூபுகளின் சாயலை பொன்னால் செய்யும்படியும் அவைகளை இரக்கத்தின் இருக்கையில் எப்படி அமைக்க வேண்டுமென்றும் மோசேக்குக் கட்டளை இடுவதை காண்கிறோம்.
.கடவுள் தங்கி இருக்கும் உடன்படிக்கை பேழையின் மேல்பாகம் தான் இரக்கத்தின் இருக்கை என்று நமக்கு தெரியும்.
விடுதலைப் பயணம் 25:21
"பேழைமேல் இரக்கத்தின் இருக்கையைப் பொருத்து, பேழையினுள் நான் உனக்களிக்கும் உடன்படிக்கைக் கற்பலகைகளை வைப்பாய்.
அங்கே நான் உன்னைச் சந்திப்பேன். உடன்படிக்கைப் பேழைக்கு மேலே அமைந்த இரக்கத்தின் இருக்கையில் இருகெருபுகள் நடுவிலிருந்து நான் உன்னோடு பேசி, இஸ்ரயேல் மக்களுக்கான கட்டளைகள் அனைத்தையும் உனக்குக் கொடுப்பேன்.’’என்று கூறப்பட்டுள்ளது.
உடன்படிக்கை பேழையில் அமைந்துள்ள இரு பொன் கெருபுகளின் நடுவிலிருந்து இஸ்ரயேல் மக்களுக்கான கட்டளைகளை கடவுள் கொடுக்கிறார்.
சிலைகளை வெறுத்து அவைகளை உருவாக்கவே கூடாது என்று தடைசெய்யும் கடவுள்,விண்ணகக் கெருபுகளின் சாயலாம் பொன் கெருபுகளை ஏற்றுக்கொள்வதிலிருந்து, இந்த பொன் கெருபுகள் கடவுள் கண்டிக்கும் சிலைகள் அல்ல என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.
இஸ்ரேல் மக்கள் கடவுளுக்கு எதிராக முணுமுணுத்து அவருக்கு எதிராக பாவம் செய்யும் போது ஆண்டவர் கொள்ளி வாய்ப் பாம்புகளை மக்களிடையே அனுப்பினார்; அவை கடிக்கவே இஸ்ரயேல் மக்களில் பலர் மாண்டனர்.
அப்போது மக்கள் மோசேயிடம் வந்து, "நாங்கள் பாவம் செய்துள்ளோம்; நாங்கள் ஆண்டவருக்கும் உமக்கும் எதிராகப் பேசியுள்ளோம்; அவர் இந்தப் பாம்புகளை அகற்றி விடும்படி நீர் ஆண்டவரிடம் வேண்டிக் கொள்ளும்" என்றனர். அவ்வாறே மோசே மக்களுக்காக மன்றாடினார்.
அப்போது ஆண்டவர் மோசேயிடம், "கொள்ளி வாய்ப் பாம்பொன்றைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்து; கடிக்கப்பட்டோரில் இதைப் பார்க்கிற ஒவ்வொருவனும் பிழைப்பான்" என்றார்.
இங்கே கடவுள் ஒரு கொள்ளிவாய்ப் பாம்பைச் செய்யும்படி மோசேக்கு கட்டளை கொடுக்க அவ்வாறே மோசேயும் ஒரு வெண்கலப் பாம்பை செய்கிறார்.
பாம்பு கடியுண்டவர்கள் யாரெல்லாம் அதை உற்று பார்த்தார்களோ அவர்கள் அனைவரும் பாம்பு கடியிலிருந்து விடுதலைப்பெற்று கொள்கிறார்கள்.
அந்த உருவத்தின் வழியாக ஜீவன் கடந்து வருகிறது;மக்களும் சாவிலிருந்து மீட்பை பெற்றுக்கொள்கிறார்கள். அவர்கள் உற்று பார்த்தார்களே தவிர அதை ஆராதிக்கவில்லை.
இந்த நிகழ்வை சிந்தித்து பாருங்கள்...
அன்று மோசே வழியாக இறைவன் மக்களை வழிநடத்தினார் என்றால் இன்று இயேசு உருவாக்கிய ஒரே தூய திருச்சபை வழியாகவே இறைவன் இவ்வுலகை வழிநடத்தி வருகிறார்.
அன்று, மோசே சொன்னதை விசுவசித்து ஏற்றுகொண்ட மக்கள் விடுதலையை பெற்று கொண்டது போல இன்றும் திருச்சபை உரைப்பதை சந்தேகிக்காமல் விசுவசித்து ஏற்றுக் கொள்பவர்களெல்லாம் விடுதலையை பெற்றுக் கொள்வார்கள் என்பது உண்மை.
அதேநேரத்தில் நாம் இன்னொன்றையும் புரிந்து கொள்ளவேண்டும்.
மோசே, "படைப்பின் கடவுளுக்கு நிகராக அல்லது ஒரே கடவுளை மறந்து அந்த வெண்கல பாம்பு சுரூபமே உங்களை மீட்கும் கடவுள் ஆகவே கடவுளுக்குரிய வழிபாட்டை இந்த சுரூபத்துக்கு செலுத்துங்கள்" என சொல்லியிருந்தால் கண்டிப்பாக அதுதான் கடவுள் கண்டிக்கும் சிலைவழிபாடு.
ஆனால் இங்கே மோசே படைப்பின் கடவுளின் அருளை மக்களுக்கு பெற்றுக் கொடுக்கும் ஒரு கருவியை தான் கட்டுகிறாரே தவிர கடவுளுக்கு இணையாக வேறொரு கடவுளை காட்டவில்லை.
அதேபோல் கத்தோலிக்க ஆலயங்களில் இருக்கும் திரு சுரூபங்கள் எல்லாம் படைப்பின் ஒரே கடவுளுக்கு நிகரான வேறொரு கடவுள் அல்ல . மாறாக ஒரே படைப்பின் கடவுளின் அருளை பெற்றுத் தரும் கருவிகளே என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
யோவான் 3:14 ,25
"பாலைநிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டது போல மானிடமகனும் உயர்த்தப்பட வேண்டும். அப்போது அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர்''.
சிலுவையில் உயர்த்தப்பட்டு மக்களுக்கு விடுதலையை கொடுத்த ஆண்டவர், சிலுவையில் உயர்த்தப்பட்டதை உலகம் முடியும் வரையிலுமுள்ள எல்லா மக்களும் உற்று நோக்கி, அவரை விசுவசித்து ஏற்று கொண்டு விடுதலையை பெற்று கொள்ளவேண்டும் என்பதற்காகவே எல்லா கத்தோலிக்க ஆலயங்களின் நடுநாயகமாக சிலுவையில் உயர்த்தப்பட்ட இயேசுவின் திரு சொரூபம் வைக்கபட்டிருகிறது.
சிலுவையில் உயர்த்தப்பட்ட இயேசு ஆண்டவரின் திரு சுரூபத்தை உற்று நோக்கி அவரில் நம்பிக்கை கொள்ளும் மக்களை சிலைவழிபாட்டினர் என ஒருவர் சொல்வாரானால் அவரை என்னவென்று சொல்வது?
எல்லாம் வல்ல கடவுள் ஒருவரே. அவருக்கு முன்பாக எந்த கடவுளும் இல்லை. கடவுளர் என்று சொல்லப்படுகிற பல தெய்வங்கள் இருப்பதாக கூறப்பட்டால், அவைகள் எல்லாம் போலி தெய்வங்களே. இந்த போலி தெய்வங்களின் சுரூபங்கள் தான் சிலைகள்.
விடுதலைபயணம்20: 23
"எனக்கு இணையாக வைக்க வெள்ளியாலான தெய்வங்களையும், பொன்னாலான தெய்வங்களையும் உங்களுக்கு நீங்கள் செய்து கொள்ள வேண்டாம்.''
காரணம் சர்வ வல்லமையுள்ள கடவுள் ஒருவரே. எனவே கடவுளுக்கு இணையாக வேறு தெய்வங்களை நாம் நினைத்து கூட பார்க்ககூடாது. அவைகளுக்குப் படைப்பின் கடவுளை போல ஆராதனை செய்வதற்கென்று பொன்னாலோ வெள்ளியாலோ அல்லது வேறு எந்த பொருளாலோ சிலைகளையும் செய்யகூடாது.
படைப்பின் ஒரே கடவுளுக்கு முதன்மையான இடத்தை கொடுத்து அவர் ஒருவரை மட்டுமே வழிபடுவதற்கு நமக்கு உதவும் பொருட்டே ஆலயங்களில் சுரூபங்கள் வைக்கபடுகின்றன.
நம்முடைய பாவங்களுக்கு கழுவாயாக மாறி, நமது பாவங்களை சிலுவையில் அறைந்து நிலைவாழ்வை நமக்களித்த இயேசுவை நம்முடைய இதயங்களில் ஏற்பதற்காகவும் அவரை மட்டுமே வழிபடுவதற்காகவும் பாடுபட்ட சுரூபம் வைக்கபட்டுள்ளது.
.கடவுளைச் சார்ந்த சித்திரம் இருக்கவேண்டிய என் உள்ளத்தில், உலகைச் சார்ந்த உருவங்களோ படங்களோ அபகரித்து கொண்டு, நாம் அவற்றை ஆராதிப்பவனாக மாறாமல் இருக்க கடவுளை குறித்த சித்திரம் பேருதவியாக இருக்கும். அதற்காகவே நமது ஆலயங்களில் சுரூபங்கள் வைக்கபடுகின்றன.
நாம் இந்த சுரூபங்களையல்ல இந்த சுரூபங்கள் எதை சுட்டி காட்டுகின்றனவோ அதற்கே ஆராதனை செலுத்துகிறோம்.
பாலன் இயேசு சுரூபம், இயேசுவின் எளிமையான பரிசுத்தமான பிறப்பை நினைவுபடுத்துகின்ற அடையாளமாக இருக்கிறது. திருச்சிலுவை சுரூபம், அவர் நம் பாவங்களுக்காக தன்னையே தாழ்த்தி சிலுவை சாவு வரைக் கீழ்படிந்து மனுக்குலத்தை மீட்டார் என கூறுகிறது. உயிர்ப்பின் சுரூபம், அவர் சாவை வென்று ஜெயவீரராக எழுந்தார் என்று சொல்கிறது.
இயேசு என்ன சொன்னார்? என்னை காண்கிறவன் என் தந்தையை காண்கிறான் என்றார். எனவே இயேசுவின் சாயலில் பிதாவின் சுரூபத்தையும் வைத்திருக்கின்றோம்.
இயேசுவின் திருமுழுக்கின்போது, புறா வடிவில் ஆவியானவர் வானத்திலிருந்து இறங்கி வந்தார். எனவே அவருக்கும் புறா வடிவில் சுரூபம் வைத்திருக்கின்றோம்.
சிலர் சுரூபங்கள் முன்பாக ஜெபிக்கும் போது, ஆண்டவரே முன்னால் இருப்பது போல உணர்கிறார்கள். எனவே சுரூபங்களை அவர் நினைவாக வைத்திருக்கின்றோம்.
நமது வழிபாடுகள் இயேசுவுக்கே சென்றடைகிறது.ஆகவே இது சிலைவழிபாடல்ல.
மனிதர்களாகிய நாம் அனைவரும் படைப்பின் கடவுளை மட்டுமே வழிபடவேண்டும்.
மாறாக, ஆளுக்கொரு கற்பனை உருவங்களையோ, மிருகங்களின் சிலைகளையோ, வேற்று தெய்வங்களின் சிலைகளையோ உருவாக்கி, அதற்கு கடவுளுக்குரிய வழிபாடை செய்யகூடாது என்பதே கடவுளின் முதல் கட்டளையாகும்.
இந்த கட்டளையை கடவுள் முதல் கட்டளையாக நமக்கு தருவதற்கு காரணம்,அன்றைய மக்கள், படைப்பின் கடவுளை வழிபடாமல் வேற்றுதெய்வங்களையும், இயற்கையையும், கற்பனைதெய்வங்களையும், மிருகங்களின் சிலைகளையும் வழிபட்டனர்.இதுவே சிலைவழிபாடு,
இதையே கடவுள் கண்டிக்கிறார். திருவிவிலியம் முழுவதும் பல இறைவாக்கினர்களால் கண்டிக்கப்படுகிறது.
மாறாக, படைப்பின் கடவுளை ஒரு அடையாளம் மூலமாக வழிபடுவது சிலைவழிபாடல்ல.
இன்று நேற்றல்ல, பழைய ஏற்பாட்டுக் காலத்திலிருந்தே மக்கள் கடவுளை இவ்வாறாக அடையாளங்கள் வழியாகவே வழிபட்டு வந்தனர்.
இறைவன் இஸ்ராயேல் மக்கள் மத்தியில் பிரசன்னமாயிருப்பதை அவர்களுக்கு நினைவுபடுத்துவதற்காக ஒரு பேழை,அதன் மேல் ஒரு அரியணை,அதன் இரு புறங்களிலும் இரண்டு கெரூபீன் உருவங்கள்(சம்மனசு சுரூபம்)செய்து வைக்க கடவுள் சொல்கிறார்.அதிலிருந்து அவர்களோடு பேசினார்(விப25:10-22,எபி9-5)
இஸ்ராயேல் மக்கள் சென்ற இடமெல்லாம் இந்தப் பேழையை தூக்கிச் சென்றார்கள்.
1சாமு4:3-7 & 1அர8:1-9
பேழை தங்களிடமில்லாதபோது கடவுளின் மாட்சி தங்களிடமில்லாததாக உணர்ந்தார்கள் (1சாமு4:22).
யோசுவா ஆண்டவரின் பேழையை மக்களிடையே தூக்கிச் செல்ல குருக்களுக்குக் கட்டளையிடுகிறார்.இந்த ஆண்டவரின் பேழைக்கென்று ஒரு ஆசாரகூடாரம் அமைத்தார்கள்.
.மோயிசனும் யோசுவாவும் மூப்பர்களும் ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையின் முன் முகங்குப்புற விழுந்து கடவுளை ஆராதித்தார்கள் (எண்20:6 & யோசு7:6)
இந்தப் பேழையின் முன் கடவுளுக்குச் செலுத்த வேண்டிய பலியை செலுத்தினார்கள் (2சாமு 6:13) தாவீது நடனமாடுகிறார் (2சாமு 6:14) தாவீது கடவுளுக்கு பேழையின் முன் பலி செலுத்துகிறார்( 6சாமு 6:17,18)
ஆண்டவரின் பேழையை குருக்கள் தூக்கிக் கொண்டு யோர்தான் ஆற்றில் இறங்கவே தண்ணீர் இரண்டாக பிரிந்து மக்கள் ஆற்றை கடந்துச் செல்ல உதவியது (யோசு 3:7-17)
ஆண்டவரின் பேழையை தூக்கிக்கொண்டு நகரின் மதில்சுவரைச் சுற்றி வந்தபோது மதில்சுவர் இடிந்து விழுந்தது. நகரை கைப்பற்றுகிறார்கள் (யோசு 6:6-20)
இவ்வாறாக, உருவமற்ற படைப்பின் கடவுளை உடன்படிக்கை பேழை வழியாக மக்கள் வழிபட்டார்களே. இதெல்லாம் சிலைவழிபடா?
சிந்திப்போம்.
விவிலியம் கண்டிக்கும் சிலை என்பது போலி தெய்வங்களின் சுரூபங்களையே என்பதையையும் கடவுளை நினைவுபடுத்தும் அடையாளங்கள் சிலையல்ல என்பதையும் விவிலிய ஆதாரத்தோடு அறிந்தோம்.
அதாவது, கடவுளாகிய ஆண்டவர் மட்டுமே உண்மைக் கடவுள்;வேறு போலி கடவுள்களை ஆராதனை செய்யக்கூடாது; அவைகளை ஆராதிப்பதற்காக அவைகளின் சிலைகளை செய்யவும் கூடாது.
சிலைகள் என்பது உண்மை கடவுளுக்கு இணையாக ஆராதனை பெருவதெற்கென்று வடிக்கப்படும் போலி தெய்வங்களின் உருவங்கள்.
ஆண்டவராகிய கடவுள் ஒருவரே கடவுள்.
அதுமட்டுமல்ல, சாலமோன் அரசர் எருசலேம் தேவாலயத்தின் தூயகத்தின் முன்னுள்ள தூண்களில் [காண்க 1அரசர் 7:18-21]. கீழே மண்ணுலகில் காணப்படும் மாதுளை பழ வடிவங்கள், அல்லிமலர் வடிவங்கள் செய்து வைத்தார்.
சாலமோன் அரசர், ஆலயம் கட்டும்போது அந்த ஆலயத்தில் கெருப்பீன்கள், மலர்கள், காளைகள், சிங்கங்கள், மாதுளம் பழம், ஈச்சமரம் இவற்றின் உருவங்களை வைத்து ஆலயத்தை வடிவமைத்து இருந்தார்.
"இந்த ஆலயத்தை குறித்து என் கண்களும் என் இதயமும் எந்நாளும் அங்கே இருக்கும்" என்று அந்த ஆலயத்தை குறித்து ஆண்டவரே அவரிடம் சொன்னார்.
அதை கடவுள் ஏற்றுகொண்டதால் தானே திருக்கோவிலின் அர்ப்பண வேளையில் (2குறிப்பேடு 7:1 ) சாலமோன் தம் மன்றாட்டை முடித்ததும், வானத்திலிருந்து நெருப்பு இறங்கி, எரி பலியையும் மற்ற பலிகளையும் எரித்தது. ஆண்டவரின் மாட்சி கோவிலை நிரப்பிற்று என்று வாசிக்க காண்கிறோம்.
சிலை என்பது போலி தெய்வங்களின் சுரூபங்களே... என்பதை மிக தெளிவாக அறிந்துகொண்டோம்.
படைப்பின் ஒரே கடவுளை மறந்து கன்றுக்குட்டியின் சிலையை செய்து அதை கடவுளாக்கி வழிபடுகிறார்கள். இங்கே கன்று குட்டி சிலை வேறு எதையும் பிரதிபலிக்கவில்லை. வேறு யாரையும் அடையாளப் படுத்தவில்லை.அந்த சிலை தான் அவர்களின் கடவுள். அந்த சிலைக்கே தான் வழிபாடு செலுத்தபடுகிறது.. இது தான் சிலைவழிபாடு.
இதைகண்டு கடவுள் சினம் கொள்கிறார்.
பின் உருவ வழிபாடு என்பது என்ன?. மேலே விண்வெளியில், கீழே மண்ணுலகில், பூமிக்கடியே நீர்த்திரளில் உள்ள யாதொன்றின் சிலையையோ ஓவியத்தையோ ஆராதிக்ககூடாது. அப்படி அதற்கு ஆராதனை செய்வது தான் உருவ வழிபாடு.
இப்பொழுது நமக்குள் இன்னொரு வினா எழும்பும். புனிதர்களுக்கு விழாக்கள் கொண்டாடுவது, அவர்களுடைய சுரூபங்களை வைத்திருப்பது சரியா?. அதில் தவறு இல்லை. ஆனால் ஆராதிக் கூடாது. அவர்களுக்கு வணக்கம் செலுத்தலாம். மரியாதை செய்யலாம். வணக்கம் என்பது பெற்றோர், ஆசிரியர்கள், பெரியவர்கள், மரியாதைக்குரியவர்களுக்கு செலுத்துவது.
இதோ! மோசேயும் எலியாவும் அவர்களுக்கு முன்தோன்றி இயேசுவோடு உரையாடிக்கொண்டிருந்தனர் ( மத்தேயு 17.3).
இவ்வண்ணமே புனிதர்களும் ஆண்டவரிடத்தில் நமக்காக நேரடியாக பரிந்து பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.
புனிதர்களுடைய சுரூபங்களைப் பார்க்கும் போது இப்படி ஒரு புனிதர் வாழ்ந்தார். அவருடைய வாழ்வில் செய்த தவம், செபம், ஆண்டவருக்காக அவர் வாழ்ந்த வாழ்க்கை ஆகியன நம் நினைவுக்கு வரும். அதன் மூலம் நாமும் இவரை முன்மாதிரியாக கொண்டு வாழ வேண்டும் என்ற ஆசை நமக்கு வரும். எனவே புனிதர்கள் சுரூபங்களை நாம் கோவில்களிலும், வீடுகளிலும் வைக்கலாம். மரியாதை செலுத்தலாம். அவர்களை பின்பற்றலாம்.
ஆராதனைக்குறியவர் ஆண்டவர் மட்டுமே. எல்லா மாட்சிக்கும் மகிமைக்கும் உரியவர் அவர் ஒருவரே. வானங்களையும் அதிலுள்ள ஒளி சுடர்களையும், கடலையும், அதன் நீர் பரப்புகளையும்,. ஊர்வன, பறப்பன, நீந்துவன, நடப்பன, வானதூதர்கள், மனிதர்கள் எல்லாவற்றையும் படைத்தவர் அவர் ஒருவரே. கடல் எல்லைகளுக்கு வரம்பு வைத்தவரும், கோள்கள் செல்லும் பாதையில் இருந்து நகராது செல்ல வைத்தவரும் அவரே. வானம் அவரது சிம்மாசனம். பூமி அவரது பாதபடி. நாம் ஒவ்வொருவரும் அவர் தங்கும் ஆலயம்.
செபம் : ஆண்டவரே! உம்மை துதிக்கிறோம். உமக்கு நன்றி கூறுகிறோம். எல்லா மாட்சிக்கும், மகிமைக்கும் உரியவரே . ஆண்டவரே நீர் எவ்வளவு பெரியவர். வான் மட்டும் உயர்ந்தது உமது மாட்சி. ஆழ அகல உயரம் காண முடியாத உமது அன்புக்கு அருகதை இல்லாத எங்களை உமக்குறியவர் ஆக்கியவரே உமக்கு நன்றி. எங்களோடு இரும். ஆமென்.
-திருமதி வென்சி
Add new comment