மீண்டும் அயோத்தி பிரச்சனையை கிளப்பும் இந்து அமைப்புகள்


அயோத்தியில் நவம்பர் 25ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விஷ்வ இந்து பரிஷத் நடத்தவுள்ள தர்மசபைக்கு போட்டியாக சிவசேனாவும் கூட்டம் நடத்தவுள்ளது.

 

இரண்டு நாட்கள் அங்கு தங்கி, சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே அயோத்தி மக்களுடன் உரையாட இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

 

இதன் காரணமாக நடுவண் பாதுகாப்பு படை மற்றும் உத்தர பிரதேச காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

 

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட சட்டம் இயற்ற வலியுறுத்தி இந்துத்துவா அமைப்பினர் சார்பில் தர்மசபை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

 

ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் இதில் பங்கேற்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் இந்த கூட்டத்தில் சிவசேனா கலந்துகொள்ளாமல் தனியாக விலகி நிற்கிறது.

 

சிவசேனா தனியாக நடத்த திட்டமிட்டுள்ள கூட்டத்தில் கலந்துகொள்ள மும்பையில் இருந்து மூவாயிரம் சிவசேனா கட்சியினர் இருசிறப்பு தொடர்வண்டிகளில் அயோத்தி கிளம்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

இந்த கூட்டம் நடத்துவதற்கு அயோத்தி நிர்வாகம் மறுத்துவிட்டால், இதனை அயோத்தியில் வாழும் மக்களுடன் மேற்கொள்ளும் சந்திப்பாக மாற்றுவோம் என்று இந்த கட்சியின் உத்தர பிரதேச மாநில தலைவர் தெரிவித்திருக்கிறார். .

 

கூட்டத்தினரை கண்காணிக்க ஆளில்லா உளவு விமான விமானங்கள் பறக்கவிடப்படும் என்று தெரிகிறது.

 

 

இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் பைரியா தொகுதி பாரதிய ஜனதா கடசி சட்டப்பேரவை உறுப்பினரான சுரேந்திரசிங் ஐந்தாயிரம் ஆதரவாளர்களுடன் ராமர் கோயில் பணியை அயோத்தியில் தொடங்க இருப்பதாக சர்சைக்குரிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

 

அடுத்த ஆண்டு மே மாதம் இந்திய நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்து மத உணர்வை தூண்டி அதில் வாக்கு சேகரிக்க, பாரதிய ஜனதா கட்சியின் முயல்வதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Add new comment

1 + 0 =