மரண தண்டனையாக அமையும் அணை – கர்தினால் போ எச்சரிக்கை


சீனாவின் ஆதரவோடு அமையவுள்ள மையிட்ஸ்ஒன் அணையின் கட்டுமான திட்டம், சுற்றுச்சூழல் பேரழிவாகவும், மியான்மர் மக்களின் மரண தண்டனையாகவும் அமையும் எ்னறு யாங்கூன் உயர் மறைமாவட்ட கர்தினால் சார்லஸ் போ கூறியுள்ளார்.

 

இதன் காரணமாக இந்த அணை கட்டுகின்ற பங்குதாரர்கள் இந்த பணியை கைவிட வேண்டுமென அவர் முறையிட்டுள்ளார்.

 

பல லட்சக்கணக்கான விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரத்தை இழத்தல், ஆற்றின் நெடுக அமைந்துள்ள புனித தலங்களை இழத்தல், எமது அன்பான நாட்டின் விலை மதிப்பற்ற தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் இறந்து அழிதல் ஆகியவை இந்த அணை கட்டும் திட்டத்தால் ஏற்படும் விளைவுகள் என்று ஜனவரி 28ம் தேதி வெளியிட்ட செய்தி அறிவிப்பில் இந்த கர்தினால் குறிப்பிட்டுள்ளார்.

 

இந்த பணித்திட்டம் நடைமுறையானால், இந்த பிரதேசத்தில் இருக்கும் அமைதி காணாமல் போகும். மியான்மர் மக்களுக்கு இருண்ட காலம் காத்திருக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

மியான்மர் மக்களின் மரண தண்டனையாக இந்த மையிட்ஸ்ஒன் அணை இருக்கும். அமைதியான எதிர்காலம் அமைவதற்கு இந்த பணித்திட்டம் நிறுத்தப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Add new comment

1 + 9 =