மத்திய பிலிப்பீன்ஸில் அனல் மின்நிலையம் அமைக்க ஆயர்கள் எதிர்ப்பு


பிலிப்பீன்ஸின் மத்தியிலுள்ள நிகுரோஸ் பகுதியில் நிலக்கரியால் இயங்குகின்ற அனல் மின்நிலையம் அமைப்பதற்கான முன்மொழிவுக்கு கத்தோலிக்க ஆயர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

 

மேம்பட்ட புதுப்பிக்கத்தக்க எரியாற்றல் ஆதாரங்களை கொண்டு இதுவரை சாதித்துள்ள பயன்களையும், வெற்றிகளையும் பாதுகாக்க இந்த தீவு பகுதியிலுள்ள 3 மறைமாவட்டங்களின் ஆயர்கள் கத்தோலிக்கர்களிடம் வலியுறுத்தியுள்ளனர்.

 

நிலக்கரியை பயன்படுத்தி அனல் மின் நிலையம் அமைப்பதை இன்மேலும் நடைமுறைப்படுத்த வேண்டாம் என்பதை அரசிடமும், மின் உற்பத்தி நிறுவனங்களிடமும் முறையிட்டு மத தலைவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

 

ஏற்கெனவே பகோலோட், டுமாகுட்டே, காபான்காலான் மற்றும் சான் கார்லோஸ் மறைமாவட்டங்களில் இருக்கின்ற 9 சூரிய, 8 உயிரி எரிபொருள், 10 நீர் மின் உற்பத்தி நிலையங்கள் சேர்ந்து மொத்தமாக 579.43 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்து வருவதை இந்த ஆயர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 

புதுப்பிக்கத்தக்க எரியாற்றல் நடைமுறைகள் தங்களுக்காகவும், தங்களின் சமூகங்களுக்காகவும் அமைக்கப்படுவதை தங்களுடைய மறைமாவட்டங்கள் விரும்புவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

காலநிலை மாற்றத்திற்கு முக்கிய பங்களிப்பை செய்கின்ற நிலக்கரி பயன்பாட்டையும், புதைபடிவ எரிபொருட்களையும் குறைக்கின்ற சுற்றுச்சூழல் பற்றிய மனமாற்றத்திற்கும், மனிதகுலத்திற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அழைப்புவிடுத்துள்ளதை இந்த 4 ஆயர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Add new comment

1 + 6 =