பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக மெகா கூட்டணிக்கு ஆலோசனை


ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக மெகா கூட்டணி அமைக்கும் முயற்சியாக டெல்லியில் 21 கட்சிகளின் தலைவர்கள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

 

பாரதிய ஜனதா கட்சியின் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகிய குஷ்வாஹா இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.

 

ஆனால், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி இதில் பங்கேற்கவில்லை.

 

நாடு தழுவிய அளவில் பாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணி அமைப்பதற்கு எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன.

 

2019-ம் ஆண்டு மே மாதம் நடைபெறுகின்ற நாடாளுமன்ற தேர்தலின்போது பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சியை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு எடுத்து வருகிறார்.

 

காங்கிரஸ், திராவிட முன்னேற்ற கழகம், தெலுங்கு தேசம், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, ராஷ்டீரிய ஜனதா தளம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ஆம்ஆத்மி, தேசிய மாநாட்டு கட்சி, சரத் யாதவின் மதச்சார்பற்ற லோக் தந்திரிக் ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு சந்திரபாபு நாயுடு  அழைப்பு விடுத்தார்.

 

செவ்வாய்க்கிழமை மத்திய பிரதேசம், சத்திஸ்கர், மிசோரம், ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன.

 

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரும் செவ்வாய்க்கிழமை கூடுகிறது. இந்த சூழலில் எதிர்க்கட்சிகளிடயே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் முயற்சியாக இந்த கூட்டத்தை சந்திரபாபு நாயுடு ஏற்பாடு செய்துள்ளார்.

 

டெல்லியில் கூடிய இந்த எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, மன்மோகன் சிங், சந்திரபாபு நாயுடு, மம்தா பானர்ஜி, மு.க. ஸ்டாலின், சரத்பவார், தேவகவுடா, பரூக் அப்துல்லா, அரவிந்த் கேஜ்ரிவால், சீத்தாராம் யெச்சூரி, டி.ராஜா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

Add new comment

4 + 0 =