நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி – இந்திய விவசாயிகள் போராட்டம்


பயிர்க் கடன்கள் தள்ளுபடி உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் இந்தியநாடாளுமன்றத்தை நோக்கி சென்று நவம்பர் 30ம் தேதி போராட்டம் நடத்தவுள்ளனர்.

 

இதனை காவல்துறை தடுக்குமானால், நிர்வாணப் போராட்டம் நடத்துவோம் என்று தேசிய தென்னிந்திய நதிகள் ஒருங்கிணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பி.அய்யாகண்ணு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

வேளாண் பயிர்க் கடன் தள்ளுபடி, உற்பத்திப் பொருட்களுக்கு உரிய விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்றத்தை நோக்கி நாடு முழுவதும் உள்ள விவசாயிகள், விவசாயிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பேரணியாக செல்கின்றனர்.

 

தமிழகத்தில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லியை வந்தடைந்துள்ளனர்.

 

கையில் மண்டை ஓடுகளுடன் ரயில் நிலையத்தில் இறங்கிய தமிழக விவசாயிகள் தொடர்வண்டி மறியலில் ஈடுபட்டனர்.

 

பெற்ற கடனை செலுத்த முடியாமல் இதுவரை 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துள்ளதாக அய்யாக்கண்ணு கூறினார்.

Add new comment

5 + 15 =