தெய்வநிந்தனை வழக்கு விவகாரம்– போராட்டக்காரர்களுக்கு பாகிஸ்தான் தலைமையமைச்சர் எச்சரிக்கை


தெய்வநிந்தனை வழக்கில் விடுவிக்கப்பட்ட கிறிஸ்தவ பெண் அசியா பீபிக்கு எதிராக போராடுபவர்கள், மாநில அரசுடன் மோதக்கூடாது என்று பாகிஸ்தான் தலைமையமைச்சர் இம்ரான் கான் எச்சரித்திருக்கிறார்.

 

பாகிஸ்தானில் லாகூர் புறநகர் பகுதியை சேர்ந்தவர் அசியா பீபி.

அந்நாட்டின் சிறுபான்மையின கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த இவர், தனது அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட தகராறின்போது இறைவாக்கினர் முகமது நபியை தரக்குறைவாக பேசியதாக தெய்வநிந்தனை குற்றச்சாட்டை எதிர்கொண்டு வந்தார்.

 

2010-ம் ஆண்டு அவருக்கு விசாரணை நீதிமன்றம் அளித்த மரண தண்டனையை லாகூர் உயர் நீதிமன்றம் கடந்த 2014-ம் ஆண்டு உறுதிப்படுத்தியது.  

 

சிறையில் அடைக்கப்பட்ட அசியா பீபி, மரண தண்டனையை ரத்து பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் மேல்மூறையீடு செய்தார்.

 

பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மியான் சகிப் நிசார் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை நடத்தி பதன்கிழமை அசியா பீபியை விடுதலை செய்தது.

 

இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், லாகூர், கராச்சி உள்ளிட்ட பெருநகரங்களிலும் நாட்டின் பிறபகுதிகளிலும் இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்த பலர் போராட்டங்களிலும், ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டனர்.

 

இந்த பின்னணியில் அந்நாட்டு தலைமையமைச்சர் இம்ரான் கான் போராட்டகாரர்களை எச்சரித்திருக்கிறார்.

 

அரசுக்கு எதிரான நடவடிக்கையில் யாரும் ஈடுபட வேண்டாம். நீதிமன்ற தீர்ப்பை மதிக்க வேண்டும், மீறக்கூடாது. இது தொடர்பாக பொதுமக்களை தூண்டி விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

Add new comment

3 + 17 =