Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
துபாய் சென்ற விமானத்தை கடத்த முயன்ற சந்தேக நபர் சுட்டுக்கொலை
வங்கதேசத்தில் இருந்து துபாய் சென்ற விமானத்தை கடத்த இருந்ததாக சந்தேகிக்கப்பட்ட பயணி ஒருவர், வங்கதேச சிறப்பு படைகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சிட்டாகாங்கில் இந்த விமானம் அவசரமாக தரையிறக்கிய பின்னர், தான் துப்பாக்கி வைத்திருப்பதாக அந்த பயணி கூறியபின், பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இதனால், அந்த விமானத்தில் இருந்த 148 பயணிகளும் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டனர்.
விமானத்தை கடத்த முயன்றதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.
சந்தேக நபர் சுடப்பட்டபின் முதலில் காயமடைந்தார். பின் உயிரிழந்துவிட்டதாக ராணுவத்தினர் தெரிவித்ததாக ஏஎஃப்பி செய்தி முகமையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்ய அல்லது சரணடைய வைக்க முயற்சி மேற்கொண்டதாகவும், அவர் மறுத்துவிட்டதால் அவரை சுட்டதாகவும் ராணுவ மேஜர் ஜென் மோடியூர் ரகுமான் தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தை சேர்ந்த அந்த சந்தேக நபரிடம் துப்பாக்கியை தவிர வேறு ஒன்றும் இருக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
சந்தேக நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், அவர் கடற்கரை நகரான சிட்டாகாங்கிற்கு செல்லும் வங்கதேச தலைமையமைச்சர் ஷேக் ஹசினாவுடன் பேச வேண்டுமென கோரியதாகவும் முன்னதாக வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.
Add new comment