சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் குறைந்துள்ள மக்கள்தொகை


உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடான சீனாவின் தலைநகர் பெய்ஜிங் நகரில் வாழும் மக்கள் தொகை குறைந்துள்ளது.

 

கடந்த 20 ஆண்டுகளில் இவ்வாறு மக்கள்தொகை குறைவது இதுவே முதல்முறை.

 

சீனாவில் மொத்தம் 137 கோடியே 67 லட்சம் பேர் வசிக்கின்றனர்.

 

அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்கள் பட்டியலில் சீன தலைநகர் பெய்ஜிங் 6வது இடத்தில் உள்ளது. சுமார் 2 கோடியே 17 லட்சம் பேர் அங்கு நிரந்தரமாக வசிக்கின்றனர்.

 

மேலும் பல லட்சம் பேர் நாள்தோறும் வந்து செல்கின்றனர்.

 

அதிகமானோர் வசிப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு, அதிக மின்சார செலவு மற்றும் எரிபொருள் பயன்பாடு உட்பட பல்வேறு பிரச்சினைகளை அந்த நகரம் சந்தித்து வருகிறது.

 

எனவே, பெய்ஜிங் நகர மக்கள் தொகையை குறைக்கும் நடவடிக்கையை சீனா கடந்த சில ஆண்டுகளாகவே எடுத்து வருகிறது.

 

அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், பெரிய கல்வி நிறுவனங்கள் என அனைத்தையும் வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்து வருகிறது.

 

இருசக்கர வாகனம் மற்றும் கார்கள் வாங்க கட்டுப்பாடு, அத்துடன் கூடுதல் வரி போன்றவையும் விதிக்கப்படுகின்றன.

 

பெய்ஜிங் நகருக்கு அருகில் சில கிலோ மீட்டர் தொலைவில் துணை நகரங்களையும் உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

 

இப்போதுதான் அதற்கான பயன் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

2017-ம் ஆண்டு இறுதியில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, பெய்ஜிங் மக்கள் தொகை முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில் சுமார் 22 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் குறைந்துள்ளது.

Add new comment

12 + 2 =