Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
சம வேலைக்கு சம ஊதியம் – தொடரும் இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம்
சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் ஒரு கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 24-ந் தேதி முதல் உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் நடைபெற்று வரும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஆயிரக்கணக்கான இடைநிலை ஆசிரியர்கள் குடும்பத்தோடு கலந்து பங்கேற்றுள்ளனர்.
அரசியல் கட்சிகள் ஆதரவு
5 நாளாக நடைபெற்று வரும் இந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு திராவிட முன்னேற்ற கழக தலைவர் மு.க.ஸ்டாலின், அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் ஏற்கனவே ஆதரவு தெரிவித்துள்ளனர்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா ஆகியோர் நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மேலும். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான ஆர்.சரத்குமார், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா ஆகியோரும் ஆசிரியர்களின் இந்த போராட்டத்துக்கு ஆதரவு அறிக்கை அனுப்பி இருக்கின்றனர்.
தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தால் ஆசிரியர்களில் பலர் மயக்கம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
போராட்டத்தில் ஆசிரியர்களின் குழந்தைகள்
குடும்பத்துடன் வந்திருந்த ஆசிரியர்களின் குழந்தைகளும் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியது இந்த போராட்டத்திற்கு புத்துயிர் அளித்து வருகின்றனர்.
இந்த இடைநிலை ஆசிரியர்கள் இதற்கு முன்னர் போராடி அரசு எழுதி கொடுத்திருந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்றே இந்த ஆசிரியர்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்கியிருப்பது மாபெரும் அவலமாகும்.
எழுதி கொடுத்ததை நிறைவேற்றுங்கள். இந்த போராட்டத்தில் இருந்து வெறுங்கையோடு வீடு திரும்ப முடியாது. மாநில முதலமைச்சர் நேரடியாக தலையிட்டு பிரச்சனைக்கு தீாவு காண வேண்டும். கோரிக்கை நிறைவேறும் வரை எங்களுடைய போராட்டம் தொடரும் என்று இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய மீட்பு போராட்ட ஒருங்கிணைப்பு குழுவின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜே.ராபர்ட் தெரிவித்திருக்கிறார்.
மனித உரிமை அதிகாரிகள் ஆய்வு
இந்த போராட்டத்தை மனித உரிமை ஆணைத்தின் அதிகரிகள் நேற்று வியாழக்கிழமை சந்தித்து உண்மை நிலைமையை ஆய்வு செய்துள்ளனர்.
அரசு இந்த ஆசிரிய பெருமக்களுக்கு செய்துள்ள அநீதிக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று அந்த மனித உரிமை ஆணையம் மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முந்தைய போராட்டம்
இந்த இடைநிலை ஆசிரியர்கள் தங்களின் கோரிக்கைக்களுக்காக இதற்கு முன்னர் நடத்திய போராட்டத்திற்கு பணிந்த தமிழக அரசு விரைவில் ஆய்வு மேற்கொண்டு நிறைவேற்றி தருவதாக வாக்குறுதி அளித்து அந்த போராட்டத்தை நிறைவு பெற செய்தது.
ஆனால், கொடுத்த வாக்குறுதியை அரசு காற்றில் பறக்க விட்ட நிலையில், மீண்டும் போராட வேண்டிய அவலநிலை இந்த ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
எழுத்தறிவித்தவன் இறைவன் என்று ஆசிரியர்களை புகழ்ந்த காலம் மறைந்துபோய் அவ்வாறு எழுத்தறிவிப்பவன் இன்று உரிமைகளை தங்கள் உடலை வருத்தி பெற்றுக்கொள்ள வேண்டிய கலியுகம் இப்போது நிலவுவதை இந்த போராட்டம் காட்டுகிறது.
எந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டுமென கடுகளவு முயற்சி கூட எடுக்காத மாநில அரசின் செயல்பாடற்ற நிலைக்கும் இந்த போராட்டம் எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
Add new comment