இந்திய பாகிஸ்தான் பிரச்சனை தீர்வுக்கு உதவுங்கள் - திருத்தந்தைக்கு வேண்டுகோள்


பாகிஸ்தானுக்கும், அதன் முக்கிய போட்டி நாடான இந்தியாவுக்கும் இடையில் நிலவுகின்ற பதற்றங்களுக்கு தீர்வுகாண பாகிஸ்தான் கிறிஸ்தவ நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் திருத்தந்தை பிரான்சிஸிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

பாகிஸ்தானை ஆளுகின்ற தக்ரீக் இ-இன்சாப் கட்சியின் தேசிய பேரவை உறுப்பினரான சுனிலா ரூத் என்பவர், அணு ஆயுத நாடுகளுக்கு இடையில் நிலவும் மோதலை முடிவுக்கு கொண்டுவர உதவும் பேச்சுவார்த்தை முயற்சிகளுக்கு இந்திய அரசு ஆதரவு அளிக்க திருத்தந்தை பிரான்சிஸ் உதவ வேண்டுமென கேட்டுள்ளார்.

 

பாகிஸ்தானிலுள்ள கிறிஸ்தவ சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய நாடாளுமன்ற உறுப்பினராக, பாகிஸ்தான் தலைமை அமைச்சரால் முன்னெடுக்கப்படும் பேச்சுவார்த்தை முயற்சிக்கு இந்திய அரசு செயல்திறனோடு ஆதரவு வழங்க வேண்டும் என்பதை திருத்தந்தை பிரான்சிஸ் ஆமோதித்து, ஆவன செய்ய வேண்டும் என்று மார்ச் முதல் நாள் அனுப்பிய கடிதத்தில் ரூத் எழுதியுள்ளார்.

 

சர்வதேச கிறிஸ்தவ திருச்சபைகளும் இதற்கு செயல்திறனோடு பங்காற்ற வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

இதே மாதிரியான கடிதத்தை கான்டர்பெர்ரி பேராயர் ஜஸ்டின் வெல்பை, ஸ்வீடன் திருச்சபையின் பேராயர் ஆன்றிஜி ஜேக்கெலன், ஆசிய கிறிஸ்தவ பேரவையின் பொதுச் செயலாளர் மத்தேயு ஜார்ஜ் சுனகாரா போன்ற சர்வதேச மத தலைவர்களுக்கும் ரூத் அனுப்பி இந்த வேண்டுகோளை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

 

கடந்த மாதம் பிப்ரவரி 14ம் தேதி காஷ்மீரிலுள்ள புல்வாமா மாவட்டத்தில் இந்திய சிஆர்பிஃஎப் வாகன அணி மீது நடத்தப்பட்ட தற்கொலை கார் குண்டு தாக்குதலில் 40க்கு மேலான படையினர் கொல்லப்பட்ட பின்னர் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பதற்றம் அதிகரித்தது.

 

இரு நாடுகளும் வான்வழி தாக்குதல் நடத்தியதால் மேலும் பதற்றம் உச்சத்தை தொட்டது.

 

இந்திய போர் விமானத்தை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதால், அந்த விமானி அபிநந்தன், பாகிஸ்தானால் கைது செய்யப்பட்டு பின்னர் 2 நாளில் இந்தியாவிடம் அமைதிக்கான நல்லெண்ண நடவடிக்கையாக ஒப்படைக்கப்பட்டார்.

Add new comment

8 + 1 =