இந்தியாவில் மத மாற்றம் செய்வதை மறுக்கும் அருட்சகோதரிகள்


பெண்ணொருவரை கிறிஸ்வத்திற்கு மாற்ற முயன்ற குற்றச்சாட்டில் 4 கத்தோலிக்க அருட்சகோதரிகள் மீது வழக்கு பதிய இந்தியாவின் ஜார்கண்ட் மாநில மாவட்ட நீதிமன்றம் ஒன்று ஆணையிட்டுள்ளது.

 

ஆனால், இந்த வழக்கு பழிவாங்கும் நோக்கோடு அளிக்கப்பட்டுள்ளது என்று இந்த அருட்சகோதரிகளின் தலைவி கூறியுள்ளார்.

 

தலைநகர் ராஞ்சியிலுள்ள மாவட்ட நீதிமன்றம் அந்நகரிலுள்ள கார்மல் பள்ளிக்கூடத்தின் தலைமையாசிரியை மற்றும் பிற 3 அருட்சகோதரிகள் மீது குற்றச்சாட்டு பதிய காவல்துறையினரிடம் கூறியுள்ளது.

 

கிறிஸ்தவராக மாற மறுத்துவிட்டதால் இந்த பள்ளிக்கூடத்தில் இருந்து தன்னை அகற்றிவிட்டதாக ஆசிரியர் நளினி நாயக் வழங்கிய புகாரின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

ஆனால், பலமுறை எச்சரித்த பின்னரும் அவரது தவறான நடவடிக்கைகளால் அவர் பள்ளிக்கூடத்தில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இந்த பள்ளியை நடத்தி வருகின்ற பாப்பிறை கார்மல் கன்னியர் சபையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

இந்த புகார் தங்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கை என்று தெரிவித்திருக்கும் இந்த சபையின் பிரதேச தலைவி, எங்களை துன்புறுத்தவும், 50 ஆண்டு புகழ்பெற்ற பள்ளியின் நற்பெயரை களங்கப்படுத்தவுமே இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

Add new comment

12 + 7 =