இடாய் புயல் பாதிப்புக்கு உதவ திருத்தந்தை வேண்டுகோள்


ஆப்பிரிக்காவின் தெற்கிலுள்ள நாடுகளில் இடாய் புயல் தாக்கியதால் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டுமென திருத்தந்தை பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

வத்திக்கானின் புனித பேதுரு சதுக்கத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கனோர் மத்தியில் அவர் இந்த வேண்டுகோளை வைத்தார்.

 

'மொஸாம்பிக், ஜிம்பாப்வே மற்றும் மலாவி நாடுகளின் பல்வேறு பிரதேசங்களில் புயல் வெள்ளத்தால் மக்களுக்கு பெரும் பாதிப்பு அடைந்திருப்பது மிகுந்த வேதனையைத் தருகிறது.

 

அன்பான அந்த மக்களுக்கு வேதனையையும், ஆறுதலையும் வெளிப்படுத்துகிறேன்.

 

வெள்ளத்தால் உயிரிழந்தோரின் குடும்பத்தினரிடம் கடவுள் கருணை காட்ட வேண்டுமென ஒப்படைக்கிறேன். இந்தப் பேரழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலையும் ஆதரவையும் அளிப்பதாகவும் திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்தார்.

 

மேலும், வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவும் ஆறுதலும் நல்கி அனைவரும் இயன்ற உதவிகளை வழங்க வேண்டுமென திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.

 

இடாய் புயலின் பயங்கர தாக்குதலுக்கு குறைந்தது 300 பேர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது.

 

மொஸாம்பிக்கில் சுமார் ஆயிரம் பேர் வரை இறந்திருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

 

செப்டம்பரில் ஆப்பிரிக்காவில் பயணம் மேற்கொள்ளும்போது மொஸாம்பிக் செல்ல திருத்தந்தை பிரான்சிஸ் திட்டமிட்டிருந்தார்.

Add new comment

6 + 0 =