Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
மாற்றுக் கல்வி, நம் மாற்றத்தின் கல்வி - இன்றைய தேவை
பத்திரிக்கையாளர் ஒருவர் கெலன் கெல்லரிடம் “கண்பார்வை இல்லாததைவிட மோசமானது எது?” என்று கேட்டார். அதற்கு கெலன்; “வாழ்வைப்பற்றிய தெளிவான பார்வை (இலக்கு) இல்லாதது காண்பார்வையை இல்லாததைவிட மோசமானது” (having eyesight with no vision is worse) என்றார்.
கண் பார்வையற்றவராய், பேச இயலாதவராய், காது கேட்காதவராய் இருந்த கெலன், சிறந்த அறிவு மாமேதையாக, கண் பார்வையற்றவருக்கு புதிய கல்விமுறையை (பிரெய்ல்) உருவாக்கியவராக உருப்பெற்றதற்கு காரணம் அவர் பெற்ற கல்வியே. அவர் பெற்ற கல்வியானது அவரை மட்டும் உயரத்திற்கு எடுத்துச்செல்லவில்லை, மாறாக கண் பார்வையற்றவர்கள் உலகத்தின் திறவுகோலாகவும், மாற்றுத்திறனாளிகளுக்கு மாபெரும் உந்துசக்தி;யாகவும் அவரை உருவாக்கியது.
இத்தகைய கல்வியை அவர் பெறுவதற்கு வழிகாட்டியாக இருந்தவர் அவருடைய ஆசிரியர் ஆன் சல்லவின். தமது 20வது வயதில் ஆசிரியப் பணியைத் தொடர்ந்த இவர், ஏறக்குறைய 49 ஆண்டுகள் கெலனோடு இருந்து அவருக்கு வாழ்வுக்கான கல்வியைக் கற்றுக்கொடுத்தார்.
கல்வி என்பது உலகை மாற்றுவதற்கான மிகச் சிறந்த ஆயுதம் என்கிறார் நெலன் மண்டேலா. ஆம் கல்வி என்பது ஏதோ மனிதனுக்கு அறிவைக் கொடுப்பது அல்ல, மாறாக மாற்றங்களை உருவாக்குவதற்கு அடித்தளமாக அமையவது. கல்வி நிறுவனங்களும், பல புதிய கல்வி முறைகளும் பெருகி;க்கொண்டிருக்கும் இக் காலக்கட்டத்தில், பல வளர்ச்சி நிலைகளையும் மாற்றங்களையும், கண்டுபிடிப்புகளையும் நாம் அனுபவித்துக்கொண்டிருக்கின்ற இவ் வேளையில், நாம் பெறுகின்ற இக் கல்வி நம் வாழ்வுநிலையில் மாற்றங்களைக் கொண்டுவருகின்றதா என்று சிந்தித்துப் பார்ப்பது சாலச் சிறந்தது.
கல்வியைக் கற்றவர்கள், அறிவாளிகள் என்றெல்லாம் அழைக்கப்படுகிறவர்கள் பலர் சுயநலவாதிகளாகத்தான் இருக்கின்றார்கள். தாங்கள் பெற்ற கல்வி அறிவினால் தங்களும் தங்கள் குடும்பமும் எல்லா வகையான சுகங்களையும், வசதிகளையும் அனுபவிக்க அவற்றைப் பயன்படுத்துகிறார்களே தவிர, வாய்ப்பினை இழந்தவர்களுக்கு வாழ்வினைக் கொடுக்கும் கல்வியாக, சமூகத்தை மாற்றியமைக்கும் சக்தியாக மாற்றவில்லை என்பது மிகவும் வேதனைக்குரிய எதார்த்தமாக அமைகின்றது.
கல்வி கற்றலில் இரண்டு நிலைகள் உள்ளன. ஒன்று Literate (கல்வி கற்றவர்கள்) – பாடத்தைப் படித்து அவற்றில் இருப்பவற்றை தெரிந்துகொண்டு தங்களுடைய வாழ்வு தரத்தை உயர்த்துபவர்கள். இரண்டாவது நிலை Educated (எல்லாம் படித்தவர்கள்) – அதாவது பாடத்தில் உள்ளவற்றை மட்டும் கற்றவர்கள் அல்ல மாறாக தங்களுடைய வாழ்வின் அனுபவத்தையும் அவற்றோடு இணைத்து கற்றவர்கள். தங்களைக் கடந்து மனுட சமூக வளர்ச்சிக்காக புதிய வழிமுறையை கற்றுக்கொடுப்பவர்கள் (நெல்சன் மன்டேலா, மார்டின் லூதர் கிங், காந்தியடிகள், அம்பேத்கார் போன்றவர்கள்).
விவிலியத்தில் வாழ்விற்கான கல்வியை கடவுள் ஒவ்வொரு நிலையிலும் இஸ்ரயேல் மக்களுக்கு கற்றுக்கொடுத்துக் கொண்டேயிருந்தார். அவர்கள் வழியாக பிற இனத்தவர்களுக்கும் கற்றுக்கொடுத்தார். தோபித்து தன்னுடைய மகன் தோபியாசுக்கு தான் வாழும் சூழ்நிலையில் எவ்வாறு வாழவேண்டும் என்பதைக் கற்றுக்கொடுப்பதை (தோபி 4:3-19) வாசிக்கின்றோம்.
இயேசுகூட மறைநூல் அறிஞர்கள் ஏட்டில் உள்ளவற்றை மட்டும் கற்றுப் போதிக்கும் நிலையை சாடி, எப்படி வாழ்வின் அனுபவத்தோடு படித்து பிறருக்கும் சமூகத்தின் வளர்ச்சிக்காகவும் கற்று போதிப்பது என்பதை கற்றுக்கொடுக்கின்றார் என்று நற்செய்தி நூல்களில் வாசிக்கின்றோம்.
ஏட்டில் உள்ளவற்றை அப்படியே கற்று, நம் வசதிகளைப் பெருக்கிக்கொள்வது கல்வி அல்ல. மாறாக கற்ற கல்வியினால் வாழும் இடத்தையும், உலக சமூகத்தையும் மேம்படுத்தும் நிலைக்கு தங்களை உயர்த்துபவர்களே வாழ்வளிக்கும் கல்வியைப் பெற்றவர்கள். அத்தகையவர்களாக நாமும் மாறவேண்டும்.
அறிவை மட்டும் வளர்த்து இதயத்தை பண்படுத்தாதக் கல்வி கல்வியே அல்ல - அரிஸ்டாட்டில்.
Add new comment