தேடிப் பார்க்க.. | அருட்பணி பால் தினகரன்


சென்னையில் ஒருமுறை பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு சிறு பையனுக்கும் அவனது தந்தைக்கும்  நடந்த உரையாடல்.  என்னை மட்டுமல்ல அங்கு அமர்ந்திருந்த எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தது.  அந்த பையனுக்கு ஒரு மூன்று வயது இருக்கும் கையில் செல்போனை வைத்துக்கொண்டு விளையாடிக் கொண்டே வந்த அந்தப் பையனிடம், “அந்த செல்போனை கொடு,  நீ விளையாடிக்கொண்டே ஜன்னல் வழியாக கீழே  போட்டுவிடுவாய், கொடு” என்று அவருடைய தந்தை அவனுடைய கையில் இருந்து அந்த செல்போனை பிடுங்கிய உடன் அவனுடைய அழுகை சத்தத்தை பார்த்துதான் எங்களுடைய கவனம் முழுவதும் அவன் பக்கம் திரும்பியது. நாங்கள் எல்லாம் கவனிப்பதை பார்த்த அந்த தந்தையும் ஏதேதோ சொல்லி அவனை சமாதானப் படுத்த முயன்று இறுதியில் அவனுடைய கவனத்தை வெளியில் வருகிற பேருந்துகள் பக்கமாகத் திருப்பி விட்டார்.

 வெளியில் ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்த அந்த சிறுவன் வெளியில் போகும் கார், மோட்டார் சைக்கிள்களை பற்றி எல்லாம் கேள்வி கேட்க ஆரம்பித்தான் அந்த  தந்தையும் எதை எதையோ சொல்லி சமாளித்து கொண்டே வந்தார் ஒரு கட்டத்தில் அவனுடைய கவனம் பேருந்துக்கு  உட்பக்கமாக திரும்பியது. 

அப்பாவிடம் “நம்ம பஸ் ஏன் மெதுவாக போகுது” என்று கேட்டான் “முன்னாடி ரொம்ப டிராபிக் ஆக இருக்கு” அதனால் தான் நம்ம பஸ் மெதுவாக போகுது” என்று சொன்னார்  அவனுடைய அப்பா.  உடனே அவன் பேருந்து இருக்கையின் மேலே ஏறி நின்று நின்றுகொண்டே முன்பக்கமாக எட்டிப் பார்த்துவிட்டு “நம்ம பஸ்ஸுக்கு முன்னால நிறைய பஸ் தான் நிக்குது, டிராபிக் எப்படி இருக்கும் பா? வேறஒன்னும்  புதுசா இல்லையே, நீங்கதான் பொய் சொல்றீங்க” என்று சொல்லிவிட்டு சத்தமாக சிரித்தான். அவனோடு சேர்ந்து நாங்கள்  அனைவரும் சிரித்து விட்டோம்.  அவனைப் பிடித்து இழுத்து இருக்கையில்  அமர வைத்தார் அவனுடைய தந்தை.  என்றாலும்கூட அவனுடைய கேள்விகள் மட்டும் முடியவே இல்லை.  அவனுடைய அடுத்த கேள்வி, “ நம்ம பஸ் எங்க போகுது? என்று கேட்டான் அவனுடைய தந்தையும், “பஸ் ஸ்டாண்டுக்கு போவது” என்று பதில் சொன்னார்.  கேட்டவுடன் அந்த பையன் அழ ஆரம்பித்து விட்டான் அவனுடைய தந்தையும் “என்னடா, என்னடா” என்று கேட்க, “பஸ் ஸ்டாண்டுக்கு வேண்டாம் இந்த பஸ் பீச்க்கு போக சொல்லுங்க,  பீச்சுக்கு தான் போகணும்”  என்று கூறிக்கொண்டே அழுகையை தொடர்ந்தான் அவனுடைய தந்தைக்கும் தர்மசங்கடம் ஆகிவிட்டது.  நாங்கள் எல்லோரும் வேறு அவனையே பார்த்துக் கொண்டிருந்தோம்.  ஏதேதோ சொல்லிப் பார்த்தும்  அவரால் அவனை சமாதானப்படுத்த முடியவில்லை.  இறுதியில், “ஆமாம் தம்பி, நான் தான் தப்பா சொல்லி விட்டேன், நம்ம  பஸ் பீச்சுக்கு தான் போகுது” என்று சொல்லி தான் சமாளித்தார்.

 நான் போக வேண்டிய இடத்துக்கு தேவையான  பேருந்தை நான் தேடிப் போக வேண்டும் என்ற மனநிலை மாறி, நான் இப்போது  எந்த பேருந்தில் நான் ஏறி இருக்கிறேனோ, அது நான் போக வேண்டிய இடத்துக்கு போக வேண்டும்  என்கிற மனநிலைக்கு வந்துவிட்டது நம் சமுதாயம்.  இதற்குத்தான் இன்றைய தொழில்நுட்பங்களும், வளர்ச்சிகளும் உதவுகின்றன.  தேடிப்போய் ஆட்டோ பிடிக்கின்ற காலங்கள் போய், பட்டனைத் தட்டினால் வீடு தேடிவரும்  கார்களும் கடைகளும் பெருகிவிட்டன இதனால்தானோ என்னவோ கடவுளையும் நான் தேடிப் போக மாட்டேன்.  வேண்டுமென்றால் அவர் என்னைத் தேடி வரட்டும்  என்கிற மனநிலைக்கு கூட வந்துவிட்டோம். 

எத்தனை நாட்கள் நிலைக்கப் போகிறது இந்த தொழில்நுட்பங்களும் வளர்ச்சிகளும் சிந்தித்துப் பார்ப்போம். 

 

அருட்தந்தை. பால் தினகரன் 

Add new comment

6 + 0 =