அணுகுங்கள் | மரிய அந்தோணி ராஜன் SdC


இரவு பத்து மணி, எனது ஊர் புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக, சென்னை செல்ல, பேருந்திற்காக காத்துகொண்டு நிற்கிறேன். சென்னை என்ற பெயர்பலகையுடன் வரும் பேருந்துகள் மிக சொற்பம். அதனினும் வரும் பேருந்துகளிலெல்லாம் கூட்டம் நிரம்பி வழிகிறது. பேருந்து நிலையத்திலும் கூட்டம் அலைமோதுகிறது. எப்படி போய்சேர்வது? நாளை காலி சென்னையில் இருக்க வேண்டும். பேருந்துகள் நிறுத்தும் இடத்திற்கு சற்று பின்னால் ஒரு கார் வந்து நின்றது. காரிலிருந்து ஒருவர், கதவை திறந்து, "சார், சென்னையா? சென்னை போகணுமா? வாங்க!" என்று என்னைப்பார்த்து அழைப்பதுபோல் இருந்தது. காரில் சென்னைக்கா? கார் அருகில் போகலாமா? காசு அதிகம் கேட்பாரோ?  ஏறினால் சரியான நேரத்தில் கூட்டிப்போய்  சேர்ப்பார்களா? என நான் என் மனதில் கணக்கு போட்டுக்கொண்டிருந்த நேரத்தில், என்னை கடந்து பெட்டியுடன் ஒருவர் வேகமாக காரை நோக்கி ஓடினார். காரில் இருந்தவரிடம் ஏதோ விசாரித்த அவர், பின், காருக்குள் ஏறிக்கொண்டார். கதவு பூட்டப்பட்டது. மனதில் ஒரு சிறிய வருடல் - நான் முதலில் அணுகியிருக்கலாமோ என்று.

பேருந்து பயணம்... பக்கத்துக்கு இருக்கையில் ஒரு முகம் வாடிய இளைஞர். முகத்திலே ஒரு வித வெறுப்பு. ஏதோ ஒரு ஏமாற்றம் தெரிகிறது. என்னவாக இருக்கும்? பேசிப்பார்கலாமா? வேண்டாம் என்று விட்டுவிட்டேன்.

மறுநாள் செய்தித்தாளில், "இரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை" என்ற செய்திக்கு கீழே அதே இளைஞரின் முகம்! ஐயோ! நேற்றே அனுகிருக்கலாமோ என்று எண்ணினேன்.

"உன் பக்கத்துக்கு வீட்டுக்காரன் உன்னைப்பற்றி அவதூறை பேசுவதை என் காதால் கேட்டேன்." என்று சொன்னார் எதிர் வீட்டுக்காரர். பொங்கியது கோபம், நேற்று, தெருவே வேடிக்கை பார்க்க பக்கத்துக்கு வீட்டுக்காரரை பொரிந்து தள்ளிவிட்டேன். ஆனால், இன்று தோன்றுகிறது, அவரை தனிமையில் அணுகியிருக்கலாமோ!!!

என்னைப்போல் அணுகாமல் விட்டதால் வந்த உயிர், உறவு இழப்புகள் ஏராளம். எனவே, அணுகியிருக்கலாமோ என உங்கள்மேல் நீங்களே அனுதாபப்படும்முன் அணுகிவிடுங்கள்.

அவள் தினமும் என்னை கவனிக்கிறாள். எனக்காகத்தான் தினமும் இங்கு வருகிறாள். அவள் கண்களில் என்மீதான காதல் தெரிகிறது என்று இவாறெல்லாம் முடிவு செய்யும்முன் சற்று அணுகுங்கள் அவளை!

அவன் பேச்சில் என்மேல் வெறுப்பு தெரிகிறது. என்னை அவன் மிக ஏளனமாக பார்க்கிறான். இனி அவனுக்கு என்ன மரியாதை. முடிவு செய்யும்முன் சற்று அணுகுங்கள் அவனை!

அருட்தந்தை மரிய  அந்தோணி ராஜன் SdC

உரோம்,இத்தாலி ...

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        

Add new comment

1 + 6 =