Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
தமிழன்னைக்கு நேர்ந்த சோகம் | சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்
தமிழ்த் தாயே, என் தமிழ்த்தாயே,
செந்தமிழ்த்தாயே, செம்மொழித்தாயே,
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே
தோன்றியவளே, தொன்மொழியே,
உலகத்து மொழிகளுக்கெல்லாம்
உந்துதலாய் இருப்பவளே,
மூப்பெய்தி விட்டாயோ!, பலவீனப்பட்டாயோ!,
கன்னடமும், களிதெலுங்கும், கவின் மலையாளமும்
உன்னிடத்தில் தோன்றிய உயர்மொழிகளன்றோ!,
அவையெல்லாம் இந்தியாலே அழிவை சந்திக்காது
இளமையுடன், பலத்துடன், குன்றா வளத்துடன்
உறுதியாய் நிற்கையிலே, உனக்கென்னவாயிற்று?
ஏன் பலவீனமானாய்?
இந்தி என்னும் அரக்கன் - உன்னை
இல்லாது செய்திடுவானென
பொல்லாத கருத்தொன்று
பொதுவாக உலா வருகிறதே!
நீ ஆலமரமென்றல்லவா நினைத்தேன்.
எப்போது,எப்படி நீ அருகம்புல் ஆனாயோ!
தொல்காப்பியர் முதல் கலைஞர் வரை உனது
தொண்டர்கள் படை வேறு எம்மொழிக்கும் இல்லையே!
சிங்கப்பூர், கனடா முதல் மொரீஷியஸ் தீவு வரை
அங்கீகாரம் பெற்ற அருமை மொழி ஆயிற்றே!
கலாச்சாரமும் மொழியும் கைகோர்த்து நிற்பது,
கவின் மொழியாம் உனது தனித்துவமன்றோ!
தங்கள் வம்சத்தினருக்கு இந்தி கற்றுத் தருவோர்,
தங்கள் பள்ளிகளில் இந்தியை கற்பிப்போர்,
இந்தித்திணிப்பென்று ஏகடியம் பேசுவதேன்?
ஏழைகள் வசதிக்கு ஏற்ற மொழித்திட்டத்தை
ஏற்கமறுத்து போராட்டம் செய்வது ஏன்?
தங்கள் பிழைப்பில் மண்விழுமே எனப்பதறி
தமிழுக்கு ஆபத்தென்று
தலைவிரித்து ஆடுவதேன்.
மூன்று மொழி கற்கும் திறன்
தமிழனுக்கு இல்லையென்று
தமிழனது கற்கும்திறனை
தரக்குறைவாய் உரைப்பது ஏன்?
அன்னியதேச ஆங்கிலத்தை அங்கீகரிப்பவர்கள்,
நம்தேச மொழியொன்றை கற்கத்தடை செய்வது ஏன்?
ஜெர்மன், ப்ரெஞ்ச், உருது எல்லாம் கற்கும் தமிழனுக்கு,
இந்தி கற்பதென்ன, இயலாத காரியமா?
வேண்டுமென்றோர் வேண்டுமொழி கற்கட்டும்.
வேண்டாதோர் தமிழோடு நிற்கட்டும்.
தூண்டுவோரை இனங்கண்டு புறக்கணித்து
தாண்டிச்செல்வோம் தடைகளை தைரியமாக.
இந்தி என்னும் குண்டூசி கொண்டு
இமயமாம் தமிழைத் தகர்த்திடுதல் கூடுமோ?
தமிழின் பெயர்சொல்லி ஊன் வளர்க்கும் உலுத்தர்களை,
உளுத்துப்போன உருப்படா சித்தாந்தங்களை,
சாதி, மத, மொழி பேதங்களை வளர்த்து
வாக்கு வங்கி அரசியல் நடத்தும் கயவர்களை
வாக்காளப பெருமக்கள் இனங்கண்டு ஒதுக்கி
விட்டால் - தமிழின் தரம் உயரும். தமிழன் தலைநிமிரும்.
வாழ்க தமிழ்! வளர்க்க தமிழர் !!
பேருரையுடன்,
சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்
Add new comment