விண்ணகத் தந்தை அன்பால் நம்மை கண்டித்துத் திருத்துகிறார்! | குழந்தைஇயேசு பாபு | Sunday Reflection


 பொதுக்காலத்தின் 21 ஆம் ஞாயிறு 
மு.வா: எசா: 66: 18-21
ப.பா:  திபா 117: 1. 2
இ.வா: எபி: 12: 5-7,11-13
ந.வா:லூக்: 13: 22-30

 விண்ணகத் தந்தை அன்பால் நம்மை கண்டித்துத் திருத்துகிறார்! 

ஒரு இளைஞன் இரவு நேரத்தில் தனியாக சாலையில் அமர்ந்து கொண்டிருந்தான். அவ்வழியே அவனுக்குத் தெரிந்தவர் ஒருவர் வந்தார். தனியாக அமர்ந்திருப்பதற்கான காரணம் கேட்ட போது வீட்டிற்கு செல்லவே பிடிக்கவில்லை எனவும் எனக்கு வேலை இல்லாததால் தன்னை திட்டிக்கொண்டும் அறிவுரை கூறிக்கொண்டும் இருக்கிறார்கள் எனவும் கூறினான் அந்த இளைஞன். அவர்கள் கூறுவது நல்லதற்காகவே,அதைக் கேட்டு பின்பற்றினால் நல்ல வாழ்க்கை கிடைக்கும் என அறிவுரை சொல்லி அனுப்பினார் வழியிலே சந்தித்த அம்மனிதர். அவ்விளைஞனும் வீட்டிற்கு சென்றான். அப்போதுதான் அவனால் உணர முடிந்தது வீட்டிலுள்ளோர் தன் மேல் எத்துணை அன்பு கொண்டுள்ளனர் என்று. ஏனென்றால் மகனைக் காணாததால் அனைவருமே பதற்றத்துடனும் சோகத்துடனும் இருந்ததைக் கண்டான் அவ்விளைஞன்.

அந்தகாலத்தில் குழந்தையை அடித்து வளர்க்கச் சொல்வார்கள். அடித்து வளர்ப்பது என்பது எதற்காக? குழந்தை நல்லது கெட்டது அறிந்து தீயவற்றை விலக்க வேண்டும் என்பதற்காக. இதுவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் மேல் கொண்டுள்ள உண்மையான அன்பு. பிழையைச் சுட்டிக்காட்டித் திருத்தாதவன் உண்மையான நண்பராக இருக்க முடியாது. தவறுக்குத் துணை செய்யும் எவரும் ஒருவருக்கு உண்மையான அன்பராய் இருக்க முடியாது .

 அதுபோலத்தான் வாழ்க்கையில் நாம் பலமுறை அனுபவிக்கும் துன்பங்களை கடவுளின் கோபமாக அவர்தரும் சோதனையாக நாம் பார்க்கிறோம். அதனால் கடவுளிடமுள்ள பற்று கூட நம்மிடம் குறைகிறது. இன்றைய இரண்டாம் வாசகம் இம்மனநிலை தவறு என நமக்குச் சுட்டிக்காட்டுகிறது. ஏனென்றால் கடவுள் யாரையெல்லாம் அன்பு செய்கிறாரோ அவர்களை தண்டிக்கிறார். கண்டிக்கிறார். இஸ்ரயேலரைக் கண்டித்துத் திருத்தினார். ஏனென்றால் அவர்க ளைத் தம் சொந்த மக்களாகத் தேர்ந்தெடுத்தார். தாவீதைக் கண்டித்து மீண்டும் தன்னிடம் சேர்த்தார். இவ்வாறாக பழைய ஏற்பாட்டில் நாம் பல எடுத்துக்காட்டுகளைக் காண்கிறோமன்றோ.
இந்த கண்டித்தல் அல்லது தண்டித்த லை அவர்களும் ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி தங்கள் பாவ வாழ்விலிருந்து மீண்டு மீண்டும் தந்தையின் பிள்ளைகள் ஆனார்கள்.

 இதைப்போல நம் வாழ்க்கையிலும் வருகின்ற இந்தத் துன்பங்களை நாம் திருந்துவதற்கான வழிகளாக ஏற்றுக்கொண்டு அவற்றிலும் கடவுளின் அன்பு நிறைந்துள்ளது என்பதை உணர்ந்தால் நம் வாழ்வு ஒளிமயமானதாக மீட்பினை நோக்கிய பயணமாக மாறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 

இயேசுவும் இன்றைய நற்செய்தியில் இடுக்கமான வாயில்வழி நுழையுங்கள் என நமக்குச் சொல்கிறார். இடுக்கமான வாயில் என்பது நாம் சந்திக்கும் அன்றாட துன்பங்கள் சவால்களாக இருக்கலாம். நமது நோயோ, நேர்மையான வழியில் செல்வதால் வரும் இடையூறுகளோ, அல்லது இழப்போ எதுவாகவும் இருக்கலாம். ஏன் நாம் சிந்திப்பது போல தந்தை கடவுள் நம்மை செம்மைப்படுத்தத் தரும் வாய்ப்புளாக இருக்கலாம். அத்தகைய மனநிலையோடு துணிச்சலோடு இடுக்கமான வாயில் வழி நுமைந்தோமெனில் தந்தையின் பிள்ளைகளாக நாம் நிச்சயம் வாழ இயலும். எனவே விண்ணக தந்தையின் அன்பை முழுமையாக உணர்ந்து அவர் நடத்துகின்ற பாதையில் பயணிப்போம்.

 இறைவேண்டல்
வல்லமையுள்ள இறைவா! எங்களுடைய அன்றாட வாழ்வில் நீரே எங்களோடு உடனிருந்து அனைத்து சவால்களையும் தாண்டி உம் பாதையில் பயணிக்க அருளைத் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

9 + 4 =