Veritas Tamil News || வேரித்தாஸ் செய்திகள் || 26.05.2023


தலைப்பு செய்திகள் 

1. உலகம் முழுவதும் நீதியும் அமைதியும் பாய்ந்தோடட்டும் : திருத்தந்தை
2. உணவு பாதுகாப்பில் பெண்களின் பங்களிப்புக் குறித்த கருத்தரங்கு
3. 53ஆவது அனைத்துலக நற்கருணை மாநாடு அனைவரையும் வரவேற்று ஒன்றிணைக்கும் இடமாக திருஅவை
4. சீனக் கிறிஸ்தவர்களுடன் தந்து  நெருக்கத்தை வெளிப்படுத்திய திருத்தந்தை 
5. பஞ்சாப் மாநிலம் ராஜேவால் கிராமத்தில் தேவாலயம் தாக்கப்பட்டதற்கு இந்திய கிறிஸ்தவர்கள் எதிர்ப்பு 

 

1. ஒரு நதி அதன் சுற்றுப்புறங்களுக்கு வாழ்வின் ஆதாரமாக இருப்பது போலவே, பயணிக்கும் திருஅவையும் நமது பொதுவான இல்லமாகிய இந்தப் பூமிக்கும் அதன் அனைத்து குடிமக்களுக்கும் வாழ்வின் ஆதாரமாக இருக்க வேண்டும்.

பருவநிலை மாற்றத்தின் மோசமான விளைவுகளைச் சந்திக்கும் ஏழைகள் மற்றும் நம் குழந்தைகளுக்கு எதிரான இந்த அநீதியைத் தடுக்கக் குரல் எழுப்புவோம் என்றும், சமூகம் மற்றும் இயற்கை குறித்த இந்தக் கண்ணோட்டங்களுக்கு இணங்க செயல்படுமாறு நல்லெண்ணம் கொண்ட அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்

வரும் செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதியன்று சிறப்பிக்கப்படவிருக்கும் படைப்பின் பராமரிப்புக்கான உலக இறைவேண்டல் தினச் செய்தியை மே 25, இவ்வியாழனன்று வழங்கியுள்ள வேளை, அதில் இவ்வாறு தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அன்புள்ள சகோதரர் சகோதரிகளே, நீதியும் அமைதியும் பாய்ந்தோடட்டும் என்பது இந்த ஆண்டின் கிறிஸ்தவ ஒன்றிப்புசார் கூட்டத்தின் கருப்பொருளாகும், இது, நீதி வெள்ளமெனப் பொங்கி வருக! நேர்மை வற்றாத ஆறாகப் பாய்ந்து வருக! என்ற இறைவாக்கினர் ஆமோஸ் வார்த்தைகளிலிருந்து எடுக்கப்பட்டது என்று எடுத்துக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வார்த்தைகளில் கடவுளின் விருப்பத்தை அவர் வெளிப்படுத்துகிறார் என்றும் தெரிவித்துள்ளார்.

மனிதநேயம் மற்றும் இயற்கையுடன் சரியான உறவைப் பேணிக்காத்து, நாம் கடவுளுக்கு  ஏற்புடையவற்றைத் தேடும்போது நீதியும் அமைதியும் ஒருபோதும் தோல்வியடையாத தூய நீரின் ஓட்டத்தைப் போல பாய்ந்து, மனிதகுலத்தையும் அனைத்து உயிரினங்களையும் வாழ்விக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை.

நீதி மற்றும் அமைதியின் வலிமைமிக்க நதிக்கு நாம் எவ்வாறு பங்களிக்க முடியும்? குறிப்பாக, கிறிஸ்தவ சமூகங்களாக, நமது பொதுவான இல்லத்தை மீண்டும் ஒருமுறை உயிர்ப்பிக்க நாம் செய்ய என்ன செய்யலாம்? என்ற கேள்விகளுக்கு விடைதேடும்போது நமது இதயங்களையும், நமது வாழ்க்கை முறைகளையும், நமது சமூகங்களை ஆளும் பொதுக் கொள்கைகளையும் மாற்றத் தீர்மானிப்பதன் வழியாக இதைச் செய்ய வேண்டும் என்ற மூன்று காரியங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன் என்றும் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை.

நம் இதயங்களை மாற்றுவோம்

நமது வாழ்வு முறையை மாற்றுவோம்

நமது பொதுக் கொள்கைகளை மாற்றுவோம்

ஒரு நதி அதன் சுற்றுப்புறங்களுக்கு வாழ்வின் ஆதாரமாக இருப்பது போலவே, நமது பயணிக்கும் திருஅவையும்  நமது பொதுவான இல்லமாகிய இந்தப் பூமிக்கும் அதன் அனைத்து குடிமக்களுக்கும் வாழ்வின் ஆதாரமாக இருக்க வேண்டும் என்றும், ஒரு நதி அனைத்து வகையான விலங்குகளுக்கும் தாவரங்களுக்கும் உயிர் கொடுப்பதைப் போலவே, பயணிக்கும் திருஅவையானது அது அடையும் ஒவ்வொரு இடத்திலும் நீதியையும் அமைதியையும் விதைத்து உயிர் கொடுக்க வேண்டும் என்றும் விண்ணப்பித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

 

2. உலக அளவில் விவசாயத் துறையில் ஈடுபட்டுள்ளவர்களுள் 25 விழுக்காட்டினர் பெண்கள், இது வளரும் நாடுகளில் 43 விழுக்காடுவரை இருக்கிறது

ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் நிறுவனத்திற்கான திருப்பீடப் பிரதிநிதி அலுவலகத்துடன் உரோம் நகரின் இயேசு சபை கிரகோரியன் பல்கலைக்கழகமும் இணைந்து உணவு பாதுகாப்பில் பெண்களின் பங்களிப்புக் குறித்த ஒரு நாள் கருத்தரங்கை நடத்தின.

மே 22, திங்கள்கிழமையன்று இடம்பெற்ற இக்கருத்தரங்கில், உலகில் பசியை அகற்றுவதில் பெண்கள் ஆற்றிவரும் பங்களிப்புக் குறித்து விவாதிக்கப்பட்டது.

வளர்ச்சிப் பாதையில் பெண்களின் பங்களிப்புக் குறித்து விவாதித்த இக்கருத்தரங்கில், மாற்றத்தின் உண்மை கருவிகளாகவும், இன்றைய உணவு நிலைகளை மாற்றவல்லவர்களாகவும், சுற்றுச்சூழலை பாதுகாப்பவர்களாகவும் பெண்களால் சிறப்புப் பங்காற்ற முடியும் என்பது வலியுறுத்தப்பட்டது.

உலக அளவில் விவசாயத் துறையில் ஈடுபட்டுள்ளவர்களுள் 25 விழுக்காட்டினர் பெண்கள் எனவும், இது வளரும் நாடுகளில் 43 விழுக்காடுவரை இருப்பதாகவும் ஐ.நா. புள்ளிவிவரங்களை இந்த கருத்தரங்கு சுட்டிக்காட்டியது.

ஆண்களைப்போல் பெண்களும் விவசாயத்துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகின்றபோதிலும், அவர்கள் ஆணுக்கு இணையாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை, மற்றும் அவர்களுக்கு இணையாக ஊதியம் வழங்கப்படுவதில்லை என்பதையும் சுட்டிக்காட்டிய இக்கருத்தரங்கு, பெண்களின் பங்களிப்பையும் ஏற்றுக்கொள்வதன் வழியாகவே உணவுப்பாதுகாப்பை உலகில் உறுதிச்செய்ய முடியும் என்பதை வலியுறுத்தியுள்ளது.

 

3. 2024ஆம் ஆண்டு ஈக்குவதோர் நாட்டின் Quito நகரில் செப்டம்பர் 8ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை இடம்பெற உள்ளது 53ஆவது அனைத்துலக நற்கருணை மாநாடு

2024ஆம் ஆண்டு ஈக்குவதோர் நாட்டின் Quito நகரில் செப்டம்பர் 8ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை இடம்பெற உள்ள 53ஆவது அனைத்துலக நற்கருணை மாநாட்டிற்கான இலச்சினையும், பண்ணும் வெளியிடப்பட்டுள்ளன.

உலகைக் குணப்படுத்த உடன்பிறந்த உணர்வுநிலை என்ற தலைப்பில் இடம்பெற உள்ள இந்த அனைத்துலக நற்கருணை மாநாட்டிற்கான இலச்சினையில் நீல நிற சிலுவையின் பின்புறம் சிகப்பு நிறத்தில் இதயமும், மஞ்சள் நிற வட்டவடிவம் தூய ஆவியாரைக் குறிப்பதாகவும், 0 டிகிரி என குறிப்பிடப்பட்டிருப்பது உலகில் எந்த அட்சரேகையில் Quito நகர் உள்ளது என்பதைக் குறிப்பதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நீங்கள் யாவரும் சகோதரர், சகோதரிகள்  என்ற நற்செய்தி வார்த்தைகளை மையமாகக் கொண்டு திருஅவையை உடன்பிறந்த உணர்வை உள்ளடக்கிய இடமாக, அனைவரையும் வரவேற்று ஒன்றிணைக்கும் இடமாக மாற்றும் நோக்கத்துடன் இந்த கருத்தரங்கு வரும் ஆண்டில் இடம்பெற உள்ளது.

 

4. திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்கள், 2007-ஆம் ஆண்டு சீனாவிலுள்ள திருஅவைக்கான உலக இறைவேண்டல் தினத்தை நிறுவினார்.

சீனாவிலுள்ள நமது சகோதரர் சகோதரிகளுக்கு எனது எண்ணங்கள் மற்றும் நெருக்கத்தை உறுதிப்படுத்துகிறேன் என்றும், அவர்களின் மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கையில் பங்குகொள்ள விரும்புகிறேன் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மே 24, இப்புதனன்று, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு தான் வழங்கிய புதன் பொது உரைக்குப் பின்பு இவ்வாறு உரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்

சீனாவில் துயருறும் மேய்ப்புப்பணியாளர்கள் மற்றும் நம்பிக்கையாளர்களுக்கு தான் ஒரு சிறப்பு சிந்தனையை வழங்குவதாகவும், இதனால் உலகளாவிய திருஅவையின் ஒன்றிப்பு மற்றும் ஆதரவினால் அவர்கள் ஆறுதலையும் ஊக்கத்தையும் அனுபவிக்க முடியும் என்றும் கூறினார்.

மே 24, சீனாவிலுள்ள திருஅவைக்கான உலக இறைவேண்டல் தினம் என்பதை நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கத்தோலிக்கத் திருஅவை மற்றும் அனைவரின் நன்மைக்காகவும் துயரங்களைத் தாங்கி, சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் நற்செய்தி அதன் முழுமையிலும், அழகிலும், சுதந்திரத்திலும் அறிவிக்கப்படுவதற்காகக் கடவுளிடம் இறைவேண்டல் செய்யுமாறு அனைத்துக் கிறிஸ்தவர்களையும் அவர் கேட்டுக்கொண்டார்.

இச்சிறப்பு தினத்தை முன்னிட்டு, புதன்கிழமை புனித பேதுரு  வளாகத்தில் கூடியிருந்த நமபிக்கையாளர்களில் இத்தாலியின் பல்வேறு பகுதிகளில் உள்ள சீனக் கத்தோலிக்கச் சமூகத்திற்குப் பணியாற்றி வரும் பல அருள்பணியாளர்களும் இருந்தனர்.

திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்கள், 2007-ஆம் ஆண்டு சீனாவிலுள்ள தலத் திருஅவைக்கான உலக இறைவேண்டல் தினத்தை நிறுவினார். இத்தினம், ஆண்டுதோறும் மே 24-ஆம் தேதி கொண்டாடப்படும் கிறிஸ்தவர்களின் சகாய அனைனையின்  திருநாளன்று நினைவுகூரப்பட்டு செபிக்கப்படுகிறது.

 

5. பஞ்சாபின் ராஜேவால் கிராமத்தில், மே 21 அன்று நிஹாங்ஸ் அதாவது இலக்கியத்தில் அழியாதவர்கள் என்று பொருள்படும்.  நிஹாங்ஸ் போன்று வேடமிட்ட  ஒரு குழு கிறிஸ்தவர்களை தாக்கியது இதற்க்கு அங்கு வாழும் கிறிஸ்தவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து உள்ளனர்.

இதில்  ஒரு சிலரை காயப்படுத்தியும், வாகனங்களை சேதப்படுத்தியும், ஆலயத்தின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தும் தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய அந்த கும்பலுக்கு எதிராக அங்கு வாழும் கிறிஸ்தவ மக்கள்  தாக்குதலுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

அறிக்கைகளின்படி, ஏறக்குறைய 15 நபர்கள் கிர்பான்களை (பாரம்பரிய சீக்கிய சடங்கு ஆயுதங்கள்) பயன்படுத்தி கிறிஸ்தவர்களைத் தாக்கினர், இதன் விளைவாக பலர்  காயம் அடைந்து உள்ளனர் மேலும் அவர்கள் வைத்து இருந்த  புனித விவிலியமும்  கலவரக்காரர்களால் அவமதிக்கப்பட்டது. இதற்க்கு  கிறிஸ்தவர்கள்  வலுக்கட்டாயமாக மதமாற்றத்தில் ஈடுபடுவதாக நிஹாங்ஸ் குற்றம் சாட்டினர்.

சீக்கியர்களின் புனித நூலான ஸ்ரீ குரு கிரந்த் சாஹிப் புனிதப்படுத்தப்படுவதற்குப் பொருந்தும் சட்டப் பிரிவுகளின் கீழ் குற்றவாளிகள் மீது தெய்வ நிந்தனை குற்றச்சாட்டை சுமத்த வேண்டும் என்று அவர்கள் கோரினர். தாக்குதல் நடத்தியவர்களை போலீசார் கைது செய்யத் தவறினால், மாநிலம் முழுவதும் போராட்டம்  நடத்துவோம் என்று கிறிஸ்தவர்கள்  தெரிவித்துள்ளனர்.

அமிர்தசரஸ் மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் சதீந்தர் சிங், இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என்று கூறிய அவர் கலவரம் தொடர்பான முதல் அறிக்கைகள் எடுக்கப்பட்டு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் தொடர்புடைய கலவரக்காரர்கள்  கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

தாக்குதலுக்கான நோக்கம் மற்றும் குற்றவாளிகளை பற்றிய  அடையாளங்கள் தெரியவில்லை. குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தவும், மத நல்லிணக்கத்தைப் பாதுகாக்கவும் காவல்துறையும் அதிகாரிகளும் இந்த சம்பவம் குறித்து தீவிரமாக விசாரித்து வருவதாக  போலீஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது.

தற்போது கிறிஸ்தவர்களின் பாதுகாப்பின்மை மணிப்பூரிலிருந்து பஞ்சாப் மற்றும் பிற மாநிலங்களுக்கு பரவுகிறது, இது இந்த மதச்சார்பற்ற நாட்டில் ஒரு இக்கட்டான  சூழ்நிலை என்று கந்தமால் தாக்குதலில் உயிர் பிழைத்தோர் சங்கத்தின் முன்னாள் தலைவர் பிப்ராசரண் நாயக் கூறினார்.

 

 

Add new comment

6 + 12 =