தமிழக ஆயர் பேரவையின் சுற்று மடல் | வேரித்தாஸ் செய்திகள்


தமிழக ஆயர் பேரவையின் தலைவர் சென்னை- மயிலை பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்கள் கடந்த சில தினங்களாக மணிப்பூர் மாநிலத்தில் நிலவி வரும் கலவரம் தொடர்பாக சுற்று மடல் ஒன்றினை வெளியிட்டு உள்ளார் பேராயரின் செய்தி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆண்டவர் இயேசுவில் பிரியமான சகோதர சகோதரிகளே,

கடந்த 03.05.2023 அன்று மணிப்பூர் மாநிலத்தில் இரு இனக்குழுக்களுக்கு இடையே நடந்த பிரச்சனை, அதனைத் தொடர்ந்த வன்முறை, ஆலயங்கள், வீடுகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தீக்கிரை, மற்றும் பல உயிர் இழப்புகள் குறித்து தமிழக ஆயர் பேரவை மிகுந்த கவலையும் பேரதிர்ச்சியும் கொண்டுள்ளது

"தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை'' (யோவா.15:13) என்பதை தனது வாழ்வில் காட்ட தன்னையே இழந்தவர் இயேசு கிறிஸ்து. அவர் உயிர்த்து தம் திருத்தூதர்களை சந்தித்தபோது கொடுத்த முதல் செய்தி, "உங்களுக்கு அமைதி உரித்தாகுக" (யோவா. 20:19) உயிர்த்த ஆண்டவர் வழங்கிய அமைதியைப் பெற்று அன்பு வழியில், அமைதி வழியில், அறவழியில் வாழும் மணிப்பூர் மாநில கிறிஸ்தவ மக்களின் வீடு, தொழில் நிலையங்கள் மற்றும் ஆலயங்கள் மீதான தாக்குதல், தீ வைப்பு,வன்முறை வெறியாட்டம் மற்றும் உயிரிழப்பு மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது. அரசு கணக்கின்படி ஏற்கனவே 60 உயிர்களை இழந்து இருக்கின்றோம். 1700 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டிருக்கின்றன.

குக்கி இனக்குழுவின் போராட்டம், அதற்கு எதிர்வினையாற்ற மியேத்தி இனக்குழுவின் போராட்டம், அதன் விளைவாக குக்கி இனக்குழுவின் போர் நினைவுச் சின்ன எரிப்பு, ஒருசில மாவட்டங்களில் நடைபெற்ற குக்கி இனக்குழுவின் பெரும் போராட்டத்திற்கு மாநில காவல் துறையினரின் தாமதமான செயல்பாடுகள், இதன் விளைவாக இரு இனக்குழுக்களின் எதிர்வினைகள் இவைகளே கடந்த ஒருசில நாட்களாக நடைபெற்று வரும் வன்முறைகளின் வினைகளும் எதிர்வினைகளும்.

இராணுவமும், ஆயுதம் தாங்கிய மத்திய காவல் துறையினரும், மணிப்பூர் மாநில நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்திருந்தாலும், இன்னும் அசாதாரண சூழ்நிலை அங்கு நிலவுவதை,தொலைக்காட்சி மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் நாம் அறிகிறோம். வடகிழக்கு மாகாணங்களில் உள்ள பொதுமக்களையும், மாணவர்களையும் தொடர்பு கொள்ள, மேலும் பாதுகாப்பான இடங்களுக்கு அவர்களை அழைத்துச் செல்ல, உதவி எண்கள் கொடுக்கப்பட்டு உள்ளன. மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள இந்த அசாதாரண சூழ்நிலை குறித்து தமிழக கத்தோலிக்க ஆயர் பேரவை மிகுந்த கவலை கொண்டுள்ளது.

மணிப்பூர் மாநில மக்கள் அமைதி காண அனைத்து ஆயர்களும் தங்களின் மறைமாவட்டத்திற்கு உட்பட்ட பங்குகள் மற்றும் துறவற நிறுவனங்களில் செப வழிபாடுகளை ஏற்பாடு செய்ய வேண்டுமாய் இச்சுற்றுமடல் மூலம் கேட்டுக்கொள்கிறேன். போராட்டம் நடத்தும் இனக்குழுக்கள் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண முயலவும், குறிப்பாக, உயிருக்கும் உடைமைக்கும் மற்றும் பொதுச் சொத்திற்கும் சேதம் ஏற்படுத்துவோர் அமைதி வழி திரும்பவும் சிறப்பாக செபிக்க அழைப்பு விடுக்கிறேன்.

உயிர்த்த ஆண்டவர் கொண்டுவந்த அமைதி மணிப்பூர் மாநிலம் முழுவதும் நிலவ இரு இனக்குழுக்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், காவல் துறையினர் மற்றும் சமூகத் தலைவர்கள் அனைவருக்காகவும் செபிப்போம். 

-அருள்பணி வி. ஜான்சன் SdC

Add new comment

19 + 1 =