இங்கிலாந்தின் புதிய மசோதாவுக்கு எதிராக வின்சென்ட் தே பவுல் சபை | வேரித்தாஸ் செய்திகள்


சட்டவிரோத குடியேற்ற மசோதா, புகலிடம் தேடி வரும் மக்களுக்குப் புகலிடத்தை வழங்குவதை விட அவர்களைக் குற்றவாளிகளாகக் கருதி தண்டிக்கும் நிலையே ஏற்படும் என்று  வின்சென்ட் தே பவுல் சபை தனது கருத்தை பதிவு செய்துள்ளது.

இங்கிலாந்துக்குப் புகலிடம் தேடி புலம்பெயர்ந்து வரும் மக்களைத் தடுத்து நிறுத்தும் சட்டத்தை அறிமுகப்படுத்தும் அரசுத்  திட்டங்களுக்கு எதிராக எச்சரித்துள்ளது இங்கிலாந்து மற்றும் வேல்ஸ்-கான புனித வின்சென்ட் தே பவுல் சபை.

மேலும், சட்டவிரோத குடியேற்ற மசோதா, புகலிடம் தேடும் மக்களுக்குப் புகலிடத்தை வழங்குவதை விட அவர்களைக் குற்றவாளிகளாகக் கருதி தண்டிக்கும் நிலையே ஏற்படும் என்றும் கூறியுள்ளது அச்சபை.

மார்ச் 7, இச்செவ்வாயன்று, இங்கிலாந்து நாட்டின் பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தச் சட்டவிரோத குடியேற்ற மசோதா, அந்நாட்டிற்குப் புகலிடம் தேடி வரும் பெரும்பாலான மக்களைத் தடுக்கும் என்று சுட்டிக்காட்டியுள்ள அச்சபை,  இங்கிலாந்தில் பாதுகாப்பைத் தேடும் மக்களுக்குப் பாதுகாப்பான வழிகளை வழங்கவும் இது தவறிவிட்டது என்றும் எடுத்துக்காட்டியுள்ளது.

இந்த மசோதா, அதன் தற்போதைய வடிவத்தில் நிறைவேற்றப்பட்டால், போர் மற்றும் துன்புறுத்தல்களில் இருந்து பாதுகாப்புத் தேடி இங்கிலாந்திற்குள் நுழையும் பாதிக்கப்படக்கூடிய மக்களை அகற்றுவதற்கான ஏற்பாடுகளை அரசே செய்ய அனுமதிக்கும் ஆபத்து உள்ளது என்றும் கூறியுள்ளது.

மேலும் இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஒரு பாதுகாப்பான வாழ்க்கையைத் தேடிவரும் புலம்பெயர்ந்தோரைத் தண்டியாது அவர்களைப் பாதுகாக்கும் ஒரு புகலிட அமைப்பை உருவாக்குமாறும் அரசை வலியுறுத்தியுள்ளது வின்சென்ட் தே பவுல் சபை.

-அருள்பணி வி.ஜான்சன் 

(Source from Vatican News )

Add new comment

1 + 4 =