Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
16ஆவது உலக ஆயர்கள் மாமன்றத்தில் பங்கேற்கும் இந்திய பேராயர்கள் | வேரித்தாஸ் செய்திகள்
அக்டோபரில் நடைபெறவிருக்கும் உலக ஆயர்கள் மாமன்றத்தில் பங்குபெறுபவர்களின் பெயர்களை வத்திக்கான் வெளியிட்டுள்ளது, இதில் முதல்முறையாக கத்தோலிக்க திருஅவை இந்த பேரவையில் வாக்களிக்கும் உரிமை உள்ள பிரதிநிதிகளாக பொது நிலையினரையும் தேர்ந்தெடுத்துள்ளது.
ஆயர்களின் பேரவை, கிழக்கு கத்தோலிக்க தேவாலயங்கள், மற்றும் ரோமன் கியூரியாவில் உள்ள தலைவர்கள் ஆகியவற்றில் இருந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனிப்பட்ட முறையில் 120 பேரை இந்த உலக ஆயர்கள் மாமன்றத்தில் கலந்து கொள்ள தேர்வு செய்துள்ளார்.
நடைபெற இருக்கும் உலக பேரவையின் 16வது மாநாட்டில் 363 பேர் வாக்களிக்க தகுதி உள்ளவர்கள் என திருப்பீட அலுவலகம் ஜூலை 7ஆம் தேதி வெளியிட்ட புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் வாக்களிக்கும் தகுதி உள்ள உறுப்பினர்களி 54 பேர் பெண்கள் என்பது சிறப்பம்சமாக கருதப்படுகிறது.
வாக்களிக்கும் உறுப்பினர்களைத் தவிர, மேலும் 75 பங்கேற்பாளர்கள் இந்த உலக ஆயர் மாமன்றத்தில் கலந்து கொள்ள உதவியாளர்கள், நிபுணர்கள் அல்லது ஆன்மீக உதவியாளர்களாக செயல்பட அழைக்கப்பட்டுள்ளனர்.
உலக ஆயர்கள் மாமன்றத்தின் பங்கேற்பாளர்களாக அருள்பணியாளர்கள் இருபால் துறவறத்தார் மற்றும் பொதுநிலையினரும் கலந்து கொள்ள இருக்கின்றனர்
உலகெங்கிலும் உள்ள ஆயர்கள் ஒன்றாக இணைந்து திருத்தந்தையின் தலைமையின் கீழ் திருஅவை செயல்பாடுகளை சீர்தூக்கிப் பார்க்கும் வகையில் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள உலக ஆயர்கள் மாமன்றத்தின் முதல் தொடரில் பங்கேற்போர் பற்றிய பெயர்ப்பட்டியலானது வெளியிடப்பட்டுள்ளது.
ஜூலை 7 வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட இப்பெயர்ப்பட்டியலின்படி உலக ஆயர்கள் மாமன்றத்தின் தலைவராக திருத்தந்தை பிரான்சிஸ், மற்றும் செயலராக கர்தினால் மாரியோ கிரேக் அவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ள பட்டியலில் இந்திய ஆயர் பிரதிநிதிகள் நால்வரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.
கோவா மற்றும் டாமன் உயர்மறைமாவட்ட பேராயர் கர்தினால் பிலிப்பு நேரி ஃபெராவோ, சென்னை மயிலை உயர் மறைமாவட்டப் பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி, கண்ணூர் ஆயர் அலெக்ஸ் ஜோசப் வடகும்தலா, ஹதராபாத் உயர்மறைமாவட்ட பேராயர் கர்தினால் அந்தோணியோ பூலா ஆகியோர் உலக ஆயர்கள் மாமன்றத்தில் இந்திய ஆயர் பிரதிநிதிகளாகப் பங்கேற்க உள்ளனர்.
இலங்கையின் ஆயர் பிரதிநிதியாக ஆயர் ரேமண்ட் கிங்ஸ்லி விக்ரம்சிங்கே அவர்களும், பாகிஸ்தான் ஆயர் பிரதிநிதியாக காலித் ரஹ்மத் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க நிர்வாகி O.F.M. அவர்களும் பங்கேற்க உள்ளனர்.
2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 4ஆம் தேதி புதன்கிழமை முதல் 29 ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற உள்ள உலக ஆயர்கள் மாமன்றத்தின் முதல் தொடரின் பங்கேற்பாளர்களாக அருள்பணியாளர்கள் இருபால் துறவறத்தார் மற்றும் பொது நிலையினரும் கலந்து கொள்ள இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அருள்பணி வி.ஜான்சன் SdC
(News Source from Catholic News Agency And Vatican News)
Add new comment