திரு..? நங்கை...? | Ashwin Raghavan | VeritasTamil


இருபாலும் இணைந்து
முப்பால் ஆனதறிந்ததும்
பிறப்பே தவறென்று
வெறுப்பாய் அடித்தார்கள்

கல்விக்கு வழிதேடி
பள்ளிக்கு சென்றாலோ
அருவருப்பு பார்வையோடு
ஊராரும் எதிர்த்தார்கள்

உயர்ந்திட தினமெண்ணி
உழைப்பிற்கு வழிகேட்டால்
உருப்படாத இனமென்று
உறுப்பிலே உதைத்தார்கள்

ஒரு திங்கள் உயிர்வாழ
கைதட்டி காசுகேட்டால்
கால்சட்டை கழற்றி
காமத்தை உமிழ்ந்தார்கள்

எதற்கிந்த அருவருப்பு?
ஏன் இந்த கேலிப்பேச்சு?

நீங்கள் விழுந்த
ஒருதுளிக்குவளையிலே
நானும் கிடந்தேன்
பத்துமாதம்...!

காலத்தின் சூழ்ச்சியோ?
அறிவியல் மாற்றமோ?

அவர்கள் ஆண்-பெண்
ஆதிக்கபேச்சில் கூட
அரையடி இடமில்லை
எங்களுக்கு...!

ஆணை அழகென்போரே
நான் சுமக்கும்
ஆண்மை மட்டும்
அருவருப்பாய் ஆனதேனோ...?

பெண்ணை மலரென்போரே
என்னுள் பூத்த
பெண்மை மட்டும்
புரியாத புதிரானதேனோ...?

உங்கள் உடைமையில்
பங்கு கேட்கவில்லை
உடனிருப்பில்
பங்கு கேட்கின்றோம்

உங்கள் உழைப்பில்
பங்கு கேட்கவில்லை
உறவில்
பங்கு கேட்கின்றோம்

இல்லாவிடில் கேலிப்
பேச்சாவது நிறுத்துங்கள்
கண்ணீரில் தினம்
கரையாமல் இருக்கின்றோம்.....
 

- Ashwin Raghavan

Comments

சிறப்பான கவிதை.

நான் படித்ததில் மிகவும் பிடித்த கவிதை. படைப்பாளரை வாழ்த்துகிறேன் மென்மேலும் வளர. என்ன பிறப்பு என் பிறப்பு என கலங்கும் திரு? நங்கை?களின் வாழ்வை ஒளி ஏற்றும் வகையில் சிறந்தது ஒரு படைப்பு. அலங்காரங்களும் இல்லை அணி வகுப்புகளும் இல்லை ஆணித்தனமாக விதைக்கப்பட்ட நல்ல ஒரு விதை. உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருக்கும் இந்த கவிதையின் படைப்பாளருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்களும் ஜெபங்களும்

Add new comment

3 + 15 =