Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
அதிகாரத்தோடு கற்பிக்க வேண்டுமா! | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
பொதுக்காலம், வாரம் 22 புதன்
I: 1 தெச: : 1-6, 9-11
II: திபா: 27: 1. 4. 13-14
III: லூக்: 4: 31-37
அதிகாரம் என்பது பிறரை அடக்கி ஆள அல்ல; மாறாக பிறரை அன்பு செய்து வாழ. அதிகாரம் பிறருக்கு புதிய வாழ்வையும் நிறைவான மகிழ்ச்சியையும் கொடுக்க வேண்டும். ஆண்டவர் இயேசு தன்னுடைய இறையாட்சி போதனையில் அதிகாரத்தோடு போதித்தார்.
இங்கே அதிகாரம் என்பது தன் கற்பித்தலால் அவர் பிறர் மேல் காட்டும் அடக்குமுறையோ அல்லது மற்றவரை தனக்குக் கீழ் கொண்டுவர கொடுக்கப்பட்ட பதிவியையோ குறிக்கவில்லை. மாறாக அவருடைய போதனையின் உண்மைத் தன்மையை விளக்குவதாகவே இச்சொல் அமைகிறது. இயேசுவின் வாழ்க்கையும் வார்த்தையும் வேறுவேறு அல்ல என்பதைத் தெளிவு படுத்துகிறது.இயேசு அதிகாரத்தோடு போதித்தது அவரின் சொல்லும் செயலும் ஒன்றிணைந்து சென்றதாலேயே.
சட்டத்தின் பெயரால் பரிசேயர்களும் சமயத்தின் பெயரால் சதுசேயர்களும் மறைநூலின் பெயரால் மறைநூல் அறிஞர்களும் மக்களை அடக்கி ஆண்டனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இயேசு அதிகாரத்தோடு அவர்கள் மத்தியில் போதனை செய்தது அவரின் மனத்திடத்தைச் சுட்டிக்காட்டுகிறது. உண்மையான மனத்திடம் யாருக்கு இருக்குமெனில் யாருடைய வாழ்வில் உண்மை, நீதி, நேர்மை, பொதுநலம் போன்ற நற்பண்புகள் இருக்கின்றதோ அவர்களுக்குத்தான் இருக்கும்.
மீண்டுமாக இயேசுவின் அதிகாரம்மிக்க போதனை அவர் கற்றுக்கொடுக்கின்றவைகளைப் பற்றிய தெளிவான புரிதலையும், அவற்றால் உண்டாகும் நன்மைத்தனங்களைப் பற்றிய உறுதியையும் எடுத்தியம்புகிறது. ஒரு ஆசிரியர் தன் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் போது பாடத்தைப்பற்றிய தெளிவும் உறுதியும் இல்லையெனில் அவரால் எவ்வாறு கற்றுக்கொடுக்க முடியும். இயலாதல்லவா?
அன்புக்குரியவர்களே இயேசுவின் போதனை கேட்கின்ற சிலரை அவ்வாறே வாழத் தூண்டியது.இன்னும் சிலரை தங்கள் வாழ்வை ஆராயவும் அதை மாற்றியமைக்கவும் உந்தியது. வேறுசிலரை பயமுறுத்தியது எனலாம். ஏனெனில் உண்மையான அதிகாரத்தோடு அவர் போதித்தால். இன்று நம்முடைய வார்த்தையும் வாழ்வும் பிறரை அவ்வாறு வாழத் தூண்டினால் நாமும் இயேசுவைப் போல அதிகாரத்தோடு செயல்படலாம். ஆனால் நாம் அவ்வாறு வாழ்கிறோமா? நம் வார்த்தைகளில் உண்மையுள்ளதா? நம் வாழ்வு பிறருக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறதா? என நாம் சிந்தித்து வாழ்வோம்.
இறைவேண்டல்
இயேசுவை உம்மைப்போல அடக்குமுறையற்றவர்களாய் மாறாக உண்மையான அதிகாரமுள்ளவர்களாய் வாழ வரம் தாரும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment