Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
நிராகரிப்புகளை நேர்மறை மனநிலையில் அணுகுவோமா! | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
பொதுக்காலம், வாரம் 26 ஆம் செவ்வாய்
I: 8: 20-23
II: 87: 1-3. 4-5. 6-7
III: 9: 51-56
நாம் வாழும் இந்த சமூகத்தில் நல்ல காரியங்களை செய்ய முயற்சி செய்யும்பொழுது நிராகரிப்புகளைச் சந்திக்க நேரிடும் .அவற்றை மன வலிமையோடு ஏற்றுக் கொள்ளும் பொழுது சாதனைகள் பல புரிய முடியும். "கிறிஸ்தவம் என்பது ஒரு சந்தோசமான கனவு அல்ல ;மாறாக, ஒரு சவால் நிறை போர்க்களம் " என்று வெண்டல் கூறியுள்ளார். கிறிஸ்தவ வாழ்விலே நல்ல மதிப்பீடுகளோடு வாழும் பொழுது, பல்வேறு எதிர்ப்புகளும் நிராகரிப்புகளும் வரலாம். ஆனால் அதை நேர்மறையான மனநிலையில் அணுகுதல் வேண்டும்.
வாழ்வில் எல்லோரும் எப்போதும் நம்மை ஏற்றுக்கொள்வதில்லை. சிலர் அவர்களுக்குரிய சரியான சந்தர்ப்பங்களோ அல்லது தேவைகளோ வரும் போது பிறரை ஏற்றுக்கொள்வர். அவை முடிந்தபின் நிராகரிப்பர். சிலர் அவர்களை மட்டுமே சார்ந்திருந்தால் அல்லது அவர்களுடைய செய்கைகளுக்கோ, கொள்கைகளுக்கோ சாதகமாக இருந்தால் மட்டுமே ஏற்றுக்கொள்வர். அவ்வாறு இல்லாவிடில் நிகாகரித்து விடுவர். இத்தகைய குணநலன்களை நாமும் கொண்டிருக்கிறோம். எவ்வாறாக இருந்தாலும் நிராகரிப்பு என்பது அதிக மன வேதனையைத் தரக்கூடியது. ஆயினும் அதை நேர்மறையான அணுகுமுறையோடு கையாண்டால் மட்டுமே நம்மால் வாழ்க்கைப் பயணத்தைத் தொடர முடியும்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவும் அவருடைய சீடர்களும் சமாரியர்களால் நிராகரிக்கப்படுகிறார்கள். அதற்கான காரணம் என்னவெனில் அவர்களுடைய பயணம் எருசலேமை நோக்கி இருந்தது. சமாரியர்கள் யூதர்களால் நிராகரிக்கப்பட்டிருந்தனர். புற இனத்தவராக கருதப்பட்டனர். எருசலேமில் யூதர்கள் வாழ்வதால் அவர்களால் ஏற்படுத்தப்பட்ட அந்நிராகரிப்பின் வலியை இயேசுவிடம் சமாரியர்கள் காட்டினர். சீடர்களோ அந்நிராகரிப்பை எதிர்மறையாக நோக்கினர். ஆனால் இயேசு அதை நேர்மறையான எண்ணத்தோடு அணுகினார். ஏனெனில் இயேசுவுக்கு சமாரியர்களின் வலி புரிந்திருந்தது.
இன்னொருபுறம் இதே எருசலேம் வாழ் யூதர்களால் ,தானும் நிராகரிக்கப்பட்டு சிலுவையில் அறையப்படப் போகிறோம் என்பதையும் அவர் உணர்ந்திருந்தார். தன் பயணத்தை வேறுவழியில் தொடர்ந்தார்.
அன்புக்குரியவர்களே நிராகரிப்புகள் வலியையே தந்தாலும் அவை நமக்கு புதிய வழியைக் காட்டும். சாதிக்கத் தூண்டும் என்பதை நாம் இன்று ஆழமாக உணர வேண்டும். யார் நிராகரித்தாலும் நேர்மறையான அணுமுறையோடு அதைக் கையாள நாம் கற்றுக்கொள்ள வேண்டும். அத்தோடு நம்மால் யாரும் நிராகரிக்கப்படாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு வாழத் தயாரா?
இறைவேண்டல்
தான் நிராகரிக்கப்பட்டாலும் யாரையும் நிராகரிக்காமல் வாழ்ந்தவரே இயேசுவே! எங்களை நிராகரிப்பவர்களையும் ,அவ்வனுபவத்தையும் நேர்மறை எண்ணத்தோடு கையாள வரமருளும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment