Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
நம்பிக்கையை இழக்காமலிருப்போமா? | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
பாஸ்கா காலம்-6 வாரம் திங்கள்
I: திப:16: 11-15
II: திபா :149: 1-2. 3-4. 5-6,9
III:யோவான் :15:26 - 16:4
நம்முடைய வாழ்க்கை பயணத்தில் நம்பிக்கை என்பது மிகவும் முக்கியம். நாம் இறைவன் மீது ஆழமான நம்பிக்கை கொள்ளும் பொழுது உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியாரின் வழிகாட்டுதலை நிறைவாக உணர முடியும். நம்பிக்கையில் உறுதியாக இருக்க தூய ஆவியாரின் உறுதுணையையும் கடவுளின் அரவணைப்பையும் நாம் பற்றி கொள்ள வேண்டும்.
பல சவால்களும் நெருக்கடிகளும் நிறைந்த இந்த காலகட்டத்தில் கடவுளின் ஆவியார் நமக்கு வலுவூட்டக்கூடிய இறைவனாக இருக்கின்றார்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் "தந்தையிடமிருந்து நான் உங்களுக்கு அனுப்பப் போகிற துணையாளர் வருவார். அவரே தந்தையிடமிருந்து வந்து உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார். அவர் வரும்போது என்னைப்பற்றிச் சான்று பகர்வார். நீங்களும் சான்று பகர்வீர்கள். நீங்கள் நம்பிக்கை இழந்துவிடாதிருக்க இவற்றையெல்லாம் உங்களிடம் சொன்னேன்." என்று கூறுகிறார். ஆம் நாம் நம்பிக்கையில் தளராமல் இருக்க நமக்கு தூய ஆவி என்கிற துணையாளரைத் தந்து நம்மைத் திடப்படுத்தி இயேசுவுக்கு சான்று பகரும் மக்களாக நம்மை மாற்றுவார் எனக் கூறுகிறார் இயேசு.
மனித மனம் அங்கும் இங்கும் தாவுகின்ற தன்மை உடையது. பலவிதமான துன்பங்கள் சூழும் போது ஆட்டம் கண்டுவிடுகிறது. கேட்கின்றவை, காண்கின்றவைகளை மனது தேக்கிக் கொண்டு குழம்பி நம்பிக்கை இழந்து விடுகிறது. இது சாதாரணமாக எல்லோருடைய வாழ்விலும் நிகழக்கூடியதுதான். ஆயினும் இவை அனைத்தையும் தாண்டி வாழ்வைத் தொடர்வது தான் நம்பிக்கை. அந்நம்பிக்கையில் தளராமல் இன்னும் அதிகமாக ஆழப்படவே இயேசு தூய ஆவியாரை நமக்குத் தருவதாக வாக்களிக்கிறார்.
அந்த தூய ஆவியாரைப் பெற நாம் நம்மையே தகுதிப்படுத்துவோம். தொடர்ந்து நம்பிக்கையோடு இறைவேண்டல் செய்வோம். குறிப்பாக இப்பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட நமது தேசம் சுகம் பெற தூய ஆவியின் துணையோடு நம்பிக்கையோடு செபிப்போம். இயேசுவுக்கு சான்று பகரும் நம்பிக்கையுள்ள மக்களாக வாழ வரம் கேட்போம்.
இறைவேண்டல்
அன்பு இறைவா எத்தகைய துன்பமான சூழலிலும் நம்பிக்கை இழக்காமல் இயேசுவுக்கு சாட்சிகளாக வாழ வரம் தாரும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment