Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
நிலைவாழ்வை பெற வேண்டுமா? | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
பாஸ்கா காலம்-நான்காம் செவ்வாய்
மு.வா: திப:11:19-26
ப.பா: திபா :86:1-7
ந.வா:யோவான் :10:22-30
ஒரு ஊரில் இரண்டு நண்பர்கள் வாழ்ந்து வந்தனர். அவர்களில் ஒருவர் தன்னைப் பெற்ற தந்தைக்கு கீழ்ப்படிந்து அவருடைய வார்த்தையின்படி வாழ்ந்தார். மற்றொருவர் தன்னைப் பெற்ற தந்தைக்கு கீழ்படியாமல் வாழ்ந்து வந்தார். தந்தைக்கு கீழ்ப்படிந்த அந்த நபர் வாழ்விலே பற்பல வெற்றியைக் கண்டு முன்னேறினார். ஆனால் தந்தைக்கு கீழ்படியாத மற்றொரு நபர் வாழ்விலே தோல்வியுற்றார். எனவே தோல்வியுற்ற நண்பர் வெற்றியடைந்த நண்பரைப் பார்த்து "நீ ஒரு சுயநலவாதி. நீ மட்டும் வெற்றி அடைந்து என்னைப் பொருட்படுத்தவில்லை" என்று கூறினாராம். அதற்கு வெற்றியடைந்த அந்த நபர் "நான் சுயநலவாதி அல்ல. மாறாக, நீ தான் சுயநலவாதி. ஏனெனில் உன்னுடைய சுயநலத்திற்காக உன்னைப் பெற்ற தந்தையின் குரலுக்கு செவி கொடுக்கவில்லை.எனவே தோல்வி அடைந்தாய். ஆனால் நான் என்னைப் பெற்ற தந்தையின் குரலுக்கு செவிமடுத்து அதன்படி நடந்தேன். எனவே நான் வாழ்வில் வெற்றி அடைந்துள்ளேன் " என்று கூறினார். இதைக்கேட்டதும் அந்த மற்றொரு நபர் தன்னுடைய தவற்றை உணர்ந்து தன் தந்தையின் குரலுக்கு செவிமடுத்து வாழ்வில் பற்பல வெற்றிகளைக் கண்டார்.
இன்றைய நற்செய்தி நல்லாயனாம் இயேசுவின் குரலுக்கு செவிமடுக்க அழைப்பு விடுத்துள்ளது. இன்றைய நற்செய்தியில் நம் ஆண்டவர் இயேசு ஆயருக்குரிய மனநிலையில் "நான் உங்களிடம் சொன்னேன்; நீங்கள்தான் நம்பவில்லை. என் தந்தையின் பெயரால் நான் செய்யும் செயல்களே எனக்குச் சான்றாக அமைகின்றன. ஆனால் நீங்கள் நம்பாமல் இருக்கிறீர்கள். ஏனெனில் நீங்கள் என் மந்தையைச் சேர்ந்தவர்கள் அல்ல. என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன. நான் அவற்றிற்கு நிலைவாழ்வை அளிக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
நாம் நிலைவாழ்வை பெற வேண்டுமெனில் முதலில் கடவுளின் குரலை அடையாளம் காண வேண்டும். இரண்டாவதாக கடவுளின் குரலுக்கு செவிமெடுக்க வேண்டும். மூன்றாவதாக கடவுள் காட்டும் பாதையில் நடக்க வேண்டும். ஒரு ஆயன் எவ்வாறு தன் மந்தையை முழுவதும் அறிந்து இருக்கின்றாரோ, அதே போல கடவுளும் நம்மை முழுமையாக அறிந்து இருக்கின்றார். எனவே கடவுள் நம்மை அன்பு செய்கின்றார் ; ஒருபோதும் நம்மை கைவிடமாட்டார் என்ற ஆழமான நம்பிக்கையோடு கடவுளின் குரலுக்கு செவிமெடுக்கும் பொழுது, நாம் நிலைவாழ்வை பெற முடியும். கடவுள் தரும் நிலைவாழ்வு என்றும் நிலையானது. இம் மண்ணுலகத்தை விட்டு நாம் பிரிந்து சென்றாலும், விண்ணுலகில் என்றும் வாழ்வோம். எனவே மந்தை ஆயனுக்கு செவிமெடுப்பது போல, நாமும் கடவுளின் குரலுக்குச் செவிமடுப்போம். அவ்வாறு செவிமடுக்கும் பொழுது நம் வாழ்வு தூய்மை நிறைந்ததாகவும் வெற்றி நிறைந்ததாகவும் இலக்கு நிறைந்ததாகவும் மாறும். கடவுளின் குரலுக்கு செவிமடுத்து நிலை வாழ்வைப் பெற்றுக் கொள்ள முயற்சி செய்வோம்.
இறைவேண்டல் :
வல்லமையுள்ள இறைவா! எங்களுடைய அன்றாட வாழ்வில் எங்களுடைய சுயநலம், உடல் இச்சை, தற்பெருமை, ஆணவம் போன்றவற்றின் காரணமாக உமது குரலுக்கு செவிமெடுக்காமல் வாழ்ந்திருக்கின்றோம். அதற்காக மன்னிப்புக் கேட்கின்றோம். நாங்கள் எந்நாளும் உம்முடைய குரலுக்குச் செவிமெடுத்து நிலைவாழ்வை சொந்தமாக்கிக் கொள்ள தேவையான அருளைத் தாரும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment