Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
புறக்கணிப்பு நல்லது! | அருட்பணி. குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
இன்றைய வாசகங்கள்(10.03.2023)
தவக்காலம் - இரண்டாம் வெள்ளி
மு.வா: தொநூ: 37: 3-4, 12-13, 17b-28
ப.பா: திபா: 105: 16-17. 18-19. 20-21
ந.வா: மத்: 21: 33-43, 45-46
புறக்கணிப்பு நல்லது!
புறக்கணிப்பு என்ற வார்த்தையைக் கேட்டவுடன் சற்று ஏற்றுக்கொள்ள முடியாத வார்த்தையாக இருக்கின்றது. ஆனால் புறக்கணிப்பு நம்மை பக்குவப்படுத்தவும் பண்படுத்தவும் உதவுகின்றது. கிராமத்திலிருந்து நகரத்திற்கு ஒரு இளைஞன் மனிதநேயப் பணிகளைச் செய்ய வேண்டும் என்று தாகத்தோடு சென்றார். எனவே சிறந்த சமூகப் பணி செய்யக்கூடிய நிறுவனங்களில் வேலை தேடினார். ஆனால் நிறுவனங்களில் வேலை செய்யும் பொழுதுதான் ஒரு சில உண்மைகளை அறிந்து கொண்டார். பாமர ஏழை மக்களின் பெயரில் நிறுவனங்கள் செய்யக்கூடிய ஏமாற்று வேலைகளை அவர் எதிர்த்தார். எனவே அந்த இளைஞன் அந்த நிறுவனத்தை விட்டு வெளியேற்றப்பட்டார். அப்பொழுது அந்த இளைஞனுக்குள் ஒரு வைராக்கியம் ஏற்பட்டது. நிச்சயமாக நான் தனிமையாக இருந்தாலும் பரவாயில்லை. என்னுடைய இலக்கு உண்மையானது. மனிதநேயமும் மனித மாண்பும் நிறைந்தது. எனவே நிச்சயமாக ஏராளமான மனிதநேயப் பணிகளைச் செய்வேன் என்ற ஒற்றை நோக்கோடு தன் வாழ்வில் சந்தித்த புறக்கணிப்பை பொருட்படுத்தாமல் சிறப்பான பணிகளைச் செய்தார். அவரோடு பல இளைஞர்கள் கைகோர்த்தனர். நல்ல உள்ளம் படைத்த மனிதர்கள் உதவி செய்தனர். இறுதியில் ஒரு மிகச் சிறந்த சமூகப் பணி செய்யக்கூடிய போராளியாக மாறினார்.
ஆண்டவர் இயேசு இந்த தவக்காலத்தில் நம்மைப் பார்த்து சொல்வது "புறக்கணிப்பை கண்டு மனம் தளராமல் வருகின்ற அவமானங்களையும் துன்பங்களையும் நிராகரிப்புகளையும் படிக்கற்களாக மாற்றி வாழ்வில் சாதனைகள் பல புரிந்திட வாருங்கள் " என்று அழைக்கின்றார். நம்முடைய வாழ்க்கையில் புறக்கணிப்பு என்பது அவ்வப்பொழுது மிகவும் முக்கியம். ஆனால் எதில் புறக்கணிப்பு வேண்டும் என்பதில் தெளிவு வேண்டும். தவக்காலம் ஒரு புனிதமான காலம். நாம் விரும்புகின்ற ஆன்மீக நலன்களை அடையவும் நம்முடைய பாவங்களுக்கு பரிகாரம் செய்யவும் கடும் தவம் புரிந்து இறைவனோடு ஒன்றித்திருக்க கொடுக்கப்பட்ட உன்னதமான காலமாக இருக்கிறது தவக்காலம். இந்த காலகட்டத்தில் நாம் ஒரு சிலவற்றை புறக்கணிக்க அழைக்கப்படுகிறோம். நாம் இறைவனோடும் பிறரோடும் நம்மோடும் நல்லுறவு கொள்ள நம்முடைய பாவம், சுயநலம், காமவெறி, பணத்தின் மீது பற்று, ஊனியல்பின் இச்சைகள் அனைத்தையும் நாம் புறக்கணிக்க வேண்டும். இப்புறக்கணிப்பே விண்ணக வீட்டின் கதவுகளைத் திறந்து இறைவன் தரும் மகிழ்ச்சியில் நாம் அகமகிழ உதவியாக இருக்கின்றது.
இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசு "கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று. ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது ; நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று!" என்று கூறியுள்ளார். இதற்கு காரணம் இயேசு தன்னுடைய இறையாட்சிப் பணியில் அதிகமாக அரசியல் தலைவர்களாலும் சமயத் தலைவர்களாலும் புறக்கணிக்கப்பட்டதேயாகும். யூத மதத் தலைவர்களால் புறக்கணிக்கப்பட்ட கல் நாசரேத்து இயேசு. என்னதான் இயேசு சுயநலவாதிகளால் புறக்கணிக்கப்பட்டாலும் அவரின் இறையாட்சிப் பணிகளும் இறையாட்சி மதிப்பீடுகளும் தான் புதிய எருசலேமான திருஅவையின் மூலைக் கல்லாக மாறின.
தவக்காலத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். ஆண்டவர் இயேசுவினுடைய இறையாட்சி மதிப்பீடுகளின் படி வாழும் பொழுது பல்வேறு புறக்கணிப்புகளும் எதிர்ப்புகளும் வரலாம். ஆனால் மனம் தளராமல் இயேசுவின் மீது ஆழமான நம்பிக்கை கொண்டு பாவ மோக வாழ்வை விட்டுவிட்டு ஆழமாக நற்செய்தியை நம்பி அதனை வாழ்வாக்கும் பொழுது புதிய மாற்றத்தையும் புதிய விடியலையும் நாம் காண முடியும். எனவே நம்முடைய அன்றாட வாழ்க்கையில் இயேசுவின் நற்செய்தி மதிப்பீடுகளின் பொருட்டு எப்பொழுதெல்லாம் புறக்கணிக்கப்படுகிறோமோ, அப்பொழுது இயேசுவோடு இணைந்து தந்தையாம் கடவுளுக்கு நன்றி சொல்வோம். நாம் தீயவற்றையும் அலகையின் சூழ்ச்சிகளையும் மாய கவர்ச்சிகளையும் புறக்கணித்தால் மட்டுமே, இறைவன் இயேசு இந்த உலகிற்கு கொண்டு வந்த நிலையான வாழ்வையும் மீட்பையும் பேரின்பத்தையும் நம் வாழ்வில் பெற்றுக் கொள்ள முடியும். அதற்கு தேவையான அருளை வேண்டுவோம்.
இறைவேண்டல்
வல்லமையுள்ள இறைவா! எங்கள் அன்றாட வாழ்வில் எத்தகைய புறக்கணிப்புகள் வந்தாலும் மன உறுதியோடு இறையாட்சி மதிப்பீடுகளின் படி வாழ அருளைத் தாரும். எங்களுடைய தீய வாழ்வையும் தீய பழக்க வழக்கங்களையும் மாய கவர்ச்சிகளையும் அலகையின் சூழ்ச்சிகளையும் முழுமையாக புறக்கணித்து, உமது பிள்ளைகளாக உருமாறிட அருளைத் தாரும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment