Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
இறைவார்த்தையை சரியான புரிதலுடன் கேட்டு செயல்படுவோமா! | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
பொதுக்காலத்தின் 16 ஆம் வெள்ளி
I: விப: 20: 1-17
II: திபா 19: 8. 9. 10. 11
III: மத்: 13: 18-23
முதலாளி ஒருவர் தன்னிடம் பணிசெய்யும் ஒரு ஊழியரை அழைத்து ஒரு முக்கியமான வேலையைச் சொல்லி அதை எவ்விதப் பிழையுமின்றி சரியாக செய்து முடிக்குமாறு அனுப்பினார். அந்த ஊழியரும் வேகமாக தலையை அசைத்தார். அவ்வேலையைச் சிறப்பாகச் செய்துவிட வேண்டும் என்று எண்ணிக்கொண்டே தன் பணியை செய்யத் தொடங்கும் பொழுது பலவிதமான சந்தேகங்களும் அப்பணியைக் குறித்த தகுந்த புரிதலுமின்றி அவ்வேலையைத் தவறாகச் செய்து முதலாளியின் கோபத்திற்கு ஆளானார். முதலாளி அவ்வூழியரிடம் " நான் எத்தனை தடவை விளக்கிச் சொன்னேன். நீ சரியாகக் கேட்கவில்லையா? " என்று திட்டித்தீர்த்தார்.
கேட்டலில் பல வகை உள்ளது. கேட்பது என்பது ஒரு ஒலியைப் பெறுவது.அதை ஆங்கிலத்தில் "Hearing" என்பார்கள். ஆனால்
சிந்தனைமிக்க கவனத்துடன் கேட்டல் என்பது " Listening" அல்லது "Heed" எனப்படும். இவ்வகைக் கேட்டலே சரியான புரிதல், பகுப்பாய்வு மற்றும் செயல்பாட்டுக்கு வழிவகுக்கிறது. இன்றைய வாசகங்கள் மூலம், நாம் இறாவார்த்தையை சரியான புரிதலுடன் கேட்டு அதை செயல்படுத்துபவர்களாக வாழ அழைக்கப்பட்டுள்ளோம்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு விதைப்பவர் உவமைக்கான விளக்கத்தைக் கூறுகிறார். இறைவார்த்தையை கேட்டு அதைப்பற்றிய சரியான புரிதலைக் கொண்டிராதவர்களை அலகை எளிதாக தீய வழிக்கு இட்டுச்செல்வான் என்ற கருத்தினை இயேசு மிகத் தெளிவாக விளக்குகிறார். இறைவார்த்தையைக் கேட்கவும் தியானிக்கவும் நமக்கு எத்தனையோ வாய்ப்புகள் தரப்படுகின்றன. அவ்வார்த்தைகளைப் புரிந்து கொள்ளவும் நமக்கு பல உதவிகள் தரப்படுகின்றன. அவ்வாய்ப்புகளையும் உதவிகளையும் நாம் சரியாகப் பயன்படுத்துகிறோமா என்று நாம் நம்மையே இன்று ஆய்வு செய்ய வேண்டும்.
இறைவார்த்தையை வாசிக்கும் போதும் கேட்கும் போதும் வீணான சிந்தனைகளுக்கும் பறாக்குகளுக்கும் இடம் தராமல் கவனமுடன் கேட்கவேண்டும் .
வார்த்தைகளின் பொருளை இறைவேண்டலில் தியானித்து உணரவேண்டும். அப்போதுதான் இறைவார்த்தையின் உண்மைப் பொருளை
நம்மால் உணர முடியும். அவ்வாறு புரிந்துகொள்வதன் வழியாக நமது செயல்பாடுகளும் இறைவார்த்தையின் அடிப்படியில் அமைந்து நம் வாழ்வு கனிதரக்கூடியதாக அமையும். இறைவார்த்தையைச் சரியான புரிதலுடன் கேட்டு செயல்படத் தயாரா?
இறைவேண்டல்
வார்த்தையாம் இறைவா உமது வார்த்தைகளை கவனமுடன் கேட்டு, தியானித்து அதன் உண்மைப் பொருளை உணர்ந்து வாழ வரமருளும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment