Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
கடவுளின் வார்த்தைகளை ஏற்கத் தயாரா! | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
மு.வா: விப: 16: 1-5, 9-15
ப.பா: திபா 78: 18-19. 23-24. 25-26. 27-28
நவ: மத்: 13: 1-9
கடவுளின் வார்த்தைகளை ஏற்கத் தயாரா!
இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசு நம் வாழ்வை நிலத்தோடு ஒப்பிடுகிறார். நிலம் பண்பட்ட நிலமாக இருக்கும்பொழுது அது விளைச்சலைத் தரும் நல்ல இடமாக மாறும். நிலம் பண்பட்டதாக இல்லாமலிருந்தால் விளைச்சலை நாம் பெற முடியாது. இன்றைய நற்செய்தியில் நான்கு வகையான நிலத்தை பற்றி ஆண்டவர் இயேசு பேசுகிறார். அந்த நிலங்கள் சொல்லும் செய்தியை பின்வருமாறு காண்போம்.
இங்கு விதை என்பது கடவுளின் வார்த்தையாக கருதப்படுகிறது. கடவுளின் வார்த்தையை நம் உள்ளத்திலே ஏற்று கடவுளின் திருவுளத்தை நிறைவேற்ற நம்மை முழுமையாக ஒப்புக்கொடுக்கும் பொழுது நாம் மிகுந்த விளைச்சலை கொடுக்க முடியும்.
முதல் வகையான நிலம் பாறை சார்ந்த நிலம். பாறை உள்ள பகுதியில் இறுகிய மூடிய தன்மை இருக்கும். பாறையிலே சிறிய சிறிய செடிகள் பயிர் வகைகள் உயிர் வாழ்வது சற்று கடினம். இப்படிப்பட்ட மனநிலை கொண்ட மனிதர்கள் ஏராளம். ஆண்டவரின் வார்த்தை அறிவிக்கப்படும் பொழுது அதை மேலோட்டமாக புரிந்து கொள்ளக்கூடிய மனநிலை கொண்டவர்கள் அவர்கள். சுயநலமும் இவ்வுலகம் சார்ந்த பேராசையும் அவர்கள் கடவுளின் வார்த்தையை முழுமையாக அனுபவிக்கத் தடையாக இருக்கின்றன. எனவே நம்முடைய அன்றாட வாழ்வை யோசித்து பார்ப்போம் நாம் இறைவார்த்தையை கேட்டு அதை உள்வாங்காதவர்களாக இருக்கின்றோமா அல்லது ஆழ்ந்து தியானிக்கின்றவர்களாக இருக்கின்றோமா?
இரண்டாவது நிலம் வழியோர மனநிலையை கொண்டநிலம். இப்படிப்பட்ட மனநிலை கொண்டவர்கள் இறைவார்த்தையை கேட்கவே மனமில்லாதவர்கள். ஏனோ தானோ என வாழ்பவர்கள். இந்த உலகம் சார்ந்த உலகத்தின் பொழுதுபோக்குககளும் மாயக் கவர்ச்சிகளும் இறைவார்த்தையை கேட்கவிடாமல் அவர்களைத் திசைதிருப்பி விடுகின்றன. நாம் எந்த வரிசையில் இருக்கிறோம்?
மூன்றாவதாக முள்செடி மனநிலையை பற்றி பேசுகிறார். இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி நடக்க வேண்டும் என்று நினைத்தாலும் வாழ்வின் துன்பங்களும் ஏமாற்றங்களும் அவர்களை அழுத்தி, கடவுளின் வார்த்தையை வாழ்வாக்கத் தடையாய் இருக்கின்றன. நம்முடைய வாழ்வு எத்தகைய வாழ்வாக இருக்கிறது?
நான்காவதாக நல்ல நிலமனநிலை பற்றி இயேசு பேசுகிறார். நல்ல நிலம் தன்னை தியாகத்தோடு புடமிட ஒத்துழைப்பு கொடுக்கின்றது. கலப்பை கீறினாலும் அதற்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதால் மிகுந்த பலனை கொடுக்கின்றது. விதை முளைத்து வளர்வதற்கு ஏற்ற பக்குவத்தை நல்ல நிலம் அடைவதால் முப்பது அறுபது நூறு மடங்காக விளைச்சலைத் தருகிறது. எனவே நம்முடைய அன்றாட வாழ்வில் நல்ல நிலமாக மாற வேண்டுமெனில் இயேசுவின் மனநிலையில் நம்மை இழக்கத் தயாராக இருக்க வேண்டும். தியாகத்தோடு நம் கல்லான இதயத்தை கனிவுள்ள இதயமாக மாற்றி கடவுளுக்கு உகந்த நல்ல உள்ளமாக மாற்ற வேண்டும். அவ்வாறு வாழுகின்ற பொழுது நிச்சயமாக நாம் பிறருக்கு இயேசுவைப் போல பலன் கொடுக்க முடியும். இயேசுவைப் போல பலன் கொடுக்கத் தயாரா?
இறைவேண்டல் :
வல்லமையுள்ள ஆண்டவரே! எங்கள் அன்றாட வாழ்வில் உம்முடைய இறைவார்த்தை என்ற விதையைப் பலன் தரச் செய்யும் அளவுக்கு நிலமாகிய எங்கள் உள்ளத்தை பக்குவப்படுத்த அருளைத் தாரும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment