Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
பகைவரை அன்பு செய்வது எப்படி? | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
பொதுக்காலம், வாரம் 11 செவ்வாய்
I: 2 கொரி: 8: 1-9
II: திபா 146: 1-2. 5-6. 7. 8-9
III:மத்: 5: 43-48
இந்த உலகத்தில் அன்பு என்ற வார்த்தை எல்லா உயிரினங்களுக்கும் பொதுவான வார்த்தை. அன்பு இல்லாமல் இந்த உலகம் இல்லை. ஏனெனில் இந்த உலகத்தைப் படைத்தவர் அன்பாய் இருக்கின்றார். அன்பு நிறைந்த மனிதர்களால் மட்டுமே கடவுளின் இயல்பை வெளிப்படுத்த முடியும். கடவுளின் இயல்பு என்பது எல்லோரையும் எந்த ஒரு வேறுபாடுமின்றி அன்பு செய்வது. இதற்கு மிகச் சிறந்த உதாரணம் இயற்கை வளங்கள். கடவுள் இயற்கை வளங்களின் வழியாக தன்னுடைய அன்பை வெளிப்படுத்துகின்றார்.
மழை பெய்கிறது என்றால் அது நல்லவர்களுக்கு மட்டும் பெய்வதில்லை. இச்சமூகத்தில் தீய வாழ்வு வாழுகின்ற மனிதர்களுக்கும் பெய்கின்றது. நல்ல மனநிலையில் உள்ளவர்கள் முழுமையான பலனை பெறுகின்றனர். தீமை செய்பவர்கள் பலன் பெறுவதைப் போல இருந்தாலும் இறுதியில் தங்கள் வாழ்வை இழக்கின்றனர். இருந்தபோதிலும் அவர்களும் வாழ்வு பெற வேண்டுமென்று அன்பு செய்பவர்தான் கடவுள்.
பகைவரை அன்பு செய்யுங்கள் என்று நம் ஆண்டவர் இயேசு இன்றைய நற்செய்தி வழியாக நமக்குச் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த உலகத்தில் மிகவும் கடினமான செயல் பகைவரை அன்பு செய்வது.ஏனென்றால் ஒருவர் நமக்கு எதிராகச் செய்த செயல்களை மன்னித்து மறப்பது என்பது சற்று கடினம் தன்.ஆயினும் ஒரு மனிதன் மறக்க நினைத்தால் அவன் தன்னுடைய சிந்தனையைச் சீரமைத்து அதன் வழியாகத் தீமை நிறைந்த நிகழ்வுகளை மறக்க முடியும். நன்மையான நிகழ்வுகளைத் தன்னில் தக்க வைத்துக்கொள்ள முடியும்.இவ்வாறு பகைவரை மன்னிப்பதும் அன்பின் வெளிப்பாடே.
பகைவரை எப்படி அன்பு செய்யலாம்? என்ற கேள்விக்கு ஆண்டவர் இயேசு பதிலாக இருக்கின்றார். இயேசு வாழ்ந்த காலகட்டத்தில் அவரின் போதனைகளையும் வாழ்க்கை நெறிமுறைகளையும் ஏற்றுக் கொண்டவர்களை விட எதிர்த்தவர்கள் தான் அதிகம். அதிலும் குறிப்பாக மக்களை சட்டத்தின் பெயராலும் சமயத்தின் பெயராலும் அடக்கி ஆண்ட பரிசேயர்கள், சதுசேயர்கள், மறைநூல் அறிஞர்கள் இயேசுவுக்கு எதிராக இருந்தனர். அவர்கள் சூழ்ச்சிகள் பல செய்தனர். இருந்தபோதிலும் இயேசு அவர்களுக்குத் தீங்கு நினைக்கவில்லை. இயேசு தன்னை அடித்துத் துன்புறுத்திய படைவீரர்களை மன்னிக்குமாறு சிலுவையில் தொங்கும் பொழுது வேண்டினார். அன்பையும் மன்னிப்பையும் நிறை வாழ்வையும் பிறருக்கு கொடுத்துக் கொண்டே இருந்தார்.
நம்முடைய அன்றாட வாழ்விலும் நமக்கு எதிராகச் சூழ்ச்சி செய்பவர்களையும் வஞ்சகம் செய்பவர்களையும் பழிவாங்காமல், மன்னித்து ஏற்றுக் கொள்ள முயற்சி செய்வோம். பகைவர்களும் மகிழ்வோடும் நிறைவோடும் வாழவேண்டும் என்ற கிறிஸ்துவின் மனநிலையில் வாழ முயற்சி செய்வோம். அப்படிப்பட்ட வாழ்வு வாழ்கின்ற பொழுது நம்முடைய வாழ்வு சிறந்த வாழ்வாக மாறும். பகைவரை அன்பு செய்யத் தேவையான அன்பு, இரக்கம், பொறுமை,விட்டுக்கொடுக்கும் மனநிலை போன்ற நற்பண்புகளை நமதாக்க முயற்சி செய்வோம்.
இறைவேண்டல் :
பகைவரை அன்பு செய்த இயேசுவே! எங்களுக்கு எதிராக தீங்கு செய்பவர்களை வெறுக்காது மன்னித்து அவர்களை அன்பு செய்ய நல்ல மனநிலையைத் தாரும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment