Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
புனித அந்தோணியாரைப்போல் உப்பாக ஒளியாக வாழ்வோமா! | அருட்பணி. குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
ஆண்டின் பொதுக்காலத்தின் 10 ஆம் வாரம் செவ்வாய்கிழமை
இன்றைய வாசகம்
மு.வா:1 கொரி:1: 18-22
ப.பா: திபா: 119: 129-130. 131-132. 133,135
ந.வா:மத்: 5: 13-16
புனித அந்தோணியாரைப்போல் உப்பாக ஒளியாக வாழ்வோமா!
இன்று திருஅவையானது புனித அந்தோணியாரின் விழாவைக் கொண்டாடுகிறது. புனித அந்தோணியார் பலரால் வணக்கம் செலுத்தப்படுகின்ற புனிதர்.
போர்த்துக்கலில் பிறந்தவர். அகுஸ்தினிய குருவாக அருட்பொழிவு செய்யப்பட்டவர். பிரான்சிஸ்கன் துறவிகளால் உந்தப்பட்டு தானும் மறைசாட்சியாக வாழ விரும்பி பிரான்சிஸ்கன் குருவாக மாறினார். தன் பெயரான பெர்டிணான்டு என்ற பெயரை அந்தோனி என மாற்றினார். இளமையிலேயே நுண்ணறிவோடு விளங்கிய இவர் இறைவார்த்தையை போதிப்பதில் மிகுந்த ஆர்வமுள்ளவர்.
தன் கடைசி நாட்களை இத்தாலியிலுள்ள பதுவையில் கழித்ததால் பதுவைப்பதியர் என்றும் தான் செய்த வல்ல செயல்களால் கோடி அற்புதர் எனவும் அழைக்கப்படுகிறார்.
இயேசு இன்றைய நற்செய்தியில் கூறியதைப் போல புனித அந்தோணியார் நற்செய்தி விழுமியங்களை வாழ்ந்து உலகிற்கு உப்பாகவும் ஒளியாகவும் திகழ்ந்தார் எனக் கூறினால் அது மிகையாகாது.
கிறிஸ்தவ மக்களுக்கு நம்பிக்கை என்னும் உப்பின் சாரத்தை அதிகப்படுத்துபவராக அவர் விளங்கினார். மனிதருக்கு மட்டுமல்ல இயற்கைக்கும் நற்செய்தியை போதித்தார். கடற்கரையில் மீன்கள் வந்து இவருடைய போதனையைக் கேட்டதாக வரலாறு சொல்கிறது. கழுதையை கருவியாகப் பயன்படுத்தி நற்கருணையில் இயேசுவின் பிரசன்னத்தை உறுதிப்படுத்தி நம்பிக்கையற்றவரை நம்பிக்கை கொள்ளச் செய்தார். உப்பு உணவிற்கு எந்த அளவு முக்கியமோ அந்த அளவு நம்பிக்கை கிறிஸ்தவ வாழ்வுக்கு முக்கியம் என சான்று பகர்ந்தார்.
உலகிற்கு ஒளி நீங்கள் என்ற இயேசுவின் வார்த்தையையும் வாழ்வாக்கியவர் புனித அந்தோணியார்.தன்னுடைய வல்ல செயல்களால் இயேசுவின் வல்லமையை உலகிற்கு காட்டினார். மலைமேல் ஒளிரும் தீபமாய் அவருடைய அர்ப்பண வாழ்வு, நம்பிக்கை வாழ்வு, பணி வாழ்வு திகழ்ந்ததால்தான் இன்றும் அவர் புனிதராகவும் பலரை கிறிஸ்துவிடம் கொண்டு சேர்க்கும் வழியாகவும் திகழ்கிறார். இறைவார்த்தை அவர் நாவில் ஒளிர்ந்தது. எனவே இன்றும் அவர் நாவு அழியவில்லை.
புனித அந்தோணியாரின் பரிந்துரையை மட்டும் நாம் நாடினால் போதாது. அவரைப் பின்பற்றி இயேசுவின் வார்த்தைகளை வாழ்வாக்கி உப்பாகவும் ஒளியாகவும் நாமும் திகழ வேண்டும். தயாரா?
இறைவேண்டல்
வல்லமையுள்ள இறைவா! புனித அந்தோனியாரைப் போல உலகிற்கு உப்பாகவும் ஒளியாகவும் இருந்து பலன் கொடுத்திட அருளை தாரும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment