Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
நம்பிக்கை நலமளிக்கும்! | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
பொதுக்காலத்தின் நான்காம் செவ்வாய்
I: எபி: 12: 1-4
II: திபா: 22: 25b-26. 27,29. 30-31
III: மாற்: 5: 21-43
நான் பணியாற்றிய பங்கில் ஒரு குடும்பத்தை சந்தித்த பொழுது கடவுள் செய்த மாபெரும் நன்மையை நம்பிக்கை அறிக்கையாக சாட்சி பகர்ந்தனர். கடவுள் மீது மிகவும் பக்தி கொண்ட ஒரு தாய் கருவுற்றிருந்தார். அவர் கருவிலே சுமந்த குழந்தையை ஸ்கேன் எடுக்கும் போது உரு குலைந்து இருப்பதாக மருத்துவர் கூறினார். தாயும் உறவினரும் மிகுந்த வருத்தப்பட்டனர். ஆனால் இந்த தாய் நம்பிக்கையை மட்டும் விடவில்லை. தொடர்ந்து இறைவனிடம் வேண்டினார். கடவுள் நிச்சயமாக தனது குழந்தைக்கு உடல் உள்ள சுகத்தை கொடுத்து ஆரோக்கியத்தோடு பிறக்க வைப்பார் என்று நம்பினார். குழந்தை பிறக்கக்கூடிய நேரம் வந்தது. மருத்துவரும் உறவினரும் தாயும் ஆச்சரியப்படும் வகையில் குழந்தை ஆரோக்கியமாகப் பிறந்தது. அந்த நொடி முதல் அந்த தாய் கடவுளின் நாமத்தை சொல்லி இன்று வரை புகழ்ந்து கொண்டிருக்கிறார். அற்புதமாய் பிழைக்க வைத்து சிறப்பாக பிறக்க வைத்த அந்தக் குழந்தை இப்பொழுது ஒன்பதாம் வகுப்பு மிகச் சிறப்பான முறையில் படித்து வருகிறது.
நம்முடைய ஆண்டவர் நம்புகிறவர்களை ஒருபோதும் கைவிடாத இறைவன். மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவரும் நம்பிக்கையில்தான் வாழ்க்கை நடத்துகிறோம். நம்பிக்கை இல்லை என்றால் மனித வாழ்வு மகிழ்ச்சிகரமாக இருக்காது. குடும்ப வாழ்வில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் அமைதியும் இருக்க வேண்டுமென்றால் ஒருவர் மற்றவரை நம்ப வேண்டும். கடவுள் இருக்கிறார் என்று பயணிக்கும் நம்பிக்கையாளர்கள் நம்பிக்கையால் பல அற்புதங்களை பெறுகின்றனர். கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகர்களும் கூட கொள்கைகளையும் மானுடத்தையும் நம்புகின்றனர். ஆக நம்பிக்கை இல்லாத வாழ்வு சிறப்பான வாழ்வாக இருக்காது.
இன்றைய நற்செய்தியில் நம்பிக்கை நலவாழ்வு அளித்ததைப் பற்றி நாம் அறிய வருகிறோம். பிற இனத்தவர் வாழும் பகுதியிலிருந்து யூதர்கள் வாழும் பகுதிக்கு இயேசு வருகிறார். பெருந்திரளான மக்கள் இயேசுவை நெருங்கி வந்தனர். அப்பொழுது இயேசு இரண்டு அற்புதங்களை செய்தார். முதலாவதாக பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப்போக்கினால் வருந்திய பெண் "நான் அவருடைய ஆடையை தொட்டாலே நலம் பெறுவேன் " என்ற நம்பிக்கையில் இயேசுவின் ஆடையை தொட்டார். நலம் பெற்றார். இரண்டாவதாக தொழுகை கூட தலைவர் தன்னுடைய மகள் இறந்து விட்டாள் என்ற செய்தியை அறிந்த பிறகும் இயேசுவால் தன் மகளை மீண்டும் தர முடியும் என்று ஆழமாக நம்பினார். தன் மகளை உயிரோடு மீண்டும் பெற்றார். இந்த இரண்டு வல்ல செயல்களுக்கும் அடிப்படையாக இருந்தது நம்பிக்கை
நம்பிக்கை நமக்கு நலம் தருகிறது. நம்பிக்கை நமக்கு புது வாழ்வு தருகிறது. நம்பிக்கை இறை அனுபவத்தை தருகிறது. நம்பிக்கை நமக்கு வெற்றியை தருகிறது. நம்பிக்கை நமக்கு ஆற்றலை தருகிறது. நம்பிக்கை இறைவனின் இரக்கத்தை தருகிறது. நம்பிக்கை வழிகாட்டுகிறது. நம்பிக்கை வெற்றியை தருகிறது. நம்பிக்கை நாம் கேட்பதை கடவுள் கொடுப்பார் என்ற ஆழமான மனநிலையைக் கொடுக்கிறது. நம்பிக்கையால் நாம் அனைவரும் கடவுளின் ஆற்றலைப் பெறுகிறோம்.
எனவே நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நம்பிக்கையோடு இறைவனின் கரத்தை பற்றி பிடிக்கும் பொழுது அற்புதங்களையும் அதிசயங்களையும் நாம் காண முடியும். "மகனே, உனது நம்பிக்கை உன்னை குணமாக்கிற்று " (மாற்: 5:34) என்று ஆண்டவர் இயேசு நம்மைப் பார்த்தும் கூறுகிறார். நம்முடைய வாழ்க்கையில் எவ்வளவு பிரச்சனைகள், பலவீனங்கள், அடிமைத்தனங்கள், சுமைகள், கண்ணீர்கள் இருந்தாலும் கூட இறைவனை ஆழமாக நம்பும் பொழுது நாம் நலம் பெற முடியும்.இயேசுவை நம்பி வரக்கூடியவர்களை இயேசு ஒருபோதும் கைவிடமாட்டார். எனவே "விசுவாசத்தை தொடங்கி வைத்த வரும் அதை நிறைவு பெற செய்பவருமானவர் இயேசு (எபி: 12:2) என்ற பவுலடியாரின் வார்த்தைக்கு ஏற்ப நம்பிக்கையோடு நம் வாழ்வில் பயணிப்போம். நம்பிக்கையில் வளருவோம்! நாளும் கடவுளின் அருள் பெற்று வாழ்வோம்.
இறைவேண்டல்
நம்பிக்கையின் நாயகனே இறைவா! எங்களுடைய அன்றாட வாழ்க்கையில் நம்பிக்கையில் வேரூன்றி சிறப்பான கிறிஸ்த வாழ்வை வாழ்ந்திட அருளைத் தாரும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment